Updates from அக்டோபர், 2009 Hide threads | Keyboard Shortcuts

  • கதவைத் திற. குழந்தைகள் வரட்டும்! 

    சித்ரன் 11:16 am on October 27, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: அபார்ட்மெண்ட், குழந்தைகள்,

    child-doorபெரும்பாலும் மூடிக்கிடக்கிற கதவுகளைக் கொண்ட அபார்ட்மெண்ட் வீடுகள். சாத்திய கதவுகளுக்குப் பின் தங்களுக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டு அதில் ராஜாவாக ராணியாக இளவரசர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள். அடுத்தவர் வீடுகளிலிருந்து வருவது பிரியாணி வாசமானாலும், எலெக்ட்ரிக் ஒயர் கருகுகிற வாசமானாலும் கவலைப்படாமல் மானாட மயிலாட-வில் மூழ்குபவர்கள். சென்னைப் பெருநகரில் இந்த மாதிரி அபார்ட்மெண்ட் ஒன்றில் வேறு வழியில்லாமல் வசிக்க நேர்ந்துவிடுகிற அவலத்தில் சின்னச் சின்ன சந்தோஷங்களும் உண்டு. அவைகளில் மிக முக்கியமாய் குழந்தைகள்.

    பக்கத்து வீட்டுக்கு ஒரு இளம் தம்பதியினர் ஒரு தவழ்கிற குழந்தையுடன் குடிவந்தபோது அவர்களுக்கும் சாத்தின கதவுகளைப் பார்த்து சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். அல்லது அப்பாடா, தொல்லை விட்டது என்று நிம்மதியாகக்கூட உணர்ந்திருக்கலாம். அப்புறம் கொஞ்சமாய் இருபத்தியிரண்டரை டிகிரி திறந்திருந்த எங்கள் கதவு வழியே மெதுவாய் பரவியது நட்பு. அபார்ட்மெண்டின் மூன்று தளங்களையும் அதகளம் பண்ணி, மாதமிரண்டு என்ற கணக்கில் ட்யூப்லைட்டுகளை உடைத்து விளையாடும் என் பையன் மற்றும் அவன் சகாக்கள் முன்பெல்லாம் பாதி நேரம் எங்கள் வீட்டுக்குள்தான் இருப்பார்கள் என்பதால் நிறைய அம்மா அப்பாக்களுக்கு பரிச்சயப்பட்டவர்களாய் இருந்தோம். பொடிசுகளைக் காணோம் என்றால் நேராய் இங்கே வந்து விசாரிக்கும் அளவுக்கு. விசாரிப்புக்குப் பின் ஐந்து நிமிடங்களாவது அரட்டை.

    பக்கத்து வீட்டுக்கு குடிவந்த அந்த 7 மாதக் குழந்தை முதன் முதலில் எங்கள் வீட்டுக்கு அதன் அம்மாவுடன் வந்து அமைதியே திருவுருவாய் ஒரே இடத்தில் உட்கார்ந்து பராக்கு பார்த்தது. எப்போதாவது கொஞ்சமாய்த் தவழும். அவ்வளவுதான். ஓரிடத்தில் உட்காருவதுதான் நமக்குப் பிடிக்காத விஷயமாயிற்றே? அதுவும் சும்மா! விடுவானேன். அக்குள்களில் துண்டால் வளைத்துப் பிடித்து ”நடரா ராசா” என்று ஒருநாள் நடக்கப் பழக்கினேன். கம்ப்யூட்டரில் உட்காரவைத்து கூகிளிலிருந்து ஆப்பிளைக் காண்பித்தேன். உடனே ”ஆப்பி” என்ற வார்த்தையைக் கற்றுக் கொண்டது. ‘வேண்டும்’ என்பதை “ஈனும்” என்றும் ‘வேண்டாம்’ என்பதை “மானா” என்றும் சொல்லப் பழகியது. நடக்க ஆரம்பித்தபிறகு நான் “அப் அப்” என்று சொல்ல சேர் மேல் ஏற ஆரம்பித்தது. நடக்க ஆரம்பித்த குழந்தை பிறகு ஓடவும் ஆரம்பித்தது. எல்லாமே என் பையன் வளரும் போது பார்த்ததுதான் என்றாலும் ஆச்சரியம் குறையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பையனும் அவன் செய்கைகளை, குறும்புகளை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

    குழந்தைகள் வேகமாகக் கற்றுக் கொள்கின்றன. நிறைய விஷயங்களை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்கின்றன. ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே ‘சட்’-டென்று பிடித்துக் கொள்கின்றன. சட்டென்று பதில் சொல்லிவிட முடியாத வகையில் நிறைய கேள்விகள் கேட்கின்றன. அந்தக் குழந்தை அவனது ஜியாலஜிஸ்ட் அப்பா மாதிரியே நல்ல புத்திசாலி. நான் பார்த்துக் கொண்டிருந்த இந்த ஒன்றரை வருடத்தில் நிறைய கற்றுக்கொண்டு வளர்ந்தும் விட்டான். ஒரு மொட்டை, ஒரு ஹேர் கட்டுக்கு அப்புறம் பெரிய பையன் மாதிரி தோற்றமும் வந்துவிட்டது. மழலையாய் ஒற்றை வார்த்தைகளில் புற உலகோடு தொடர்பு கொண்டிருந்தவன் அப்புறம் ரெண்டு வார்த்தைகள் சேர்த்தார்போல் பேசக் கற்றுக்கொண்டான். பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெரிய வாக்கியங்களாகவும் பேச ஆரம்பித்துவிட்டான். நேற்று அவன் ஏதோ குறும்பு செய்தபோது தங்கமணி “அங்கிள் பார்த்தா அடி பிச்சுருவாரு” என்று செல்லமாய் கண்களை உருட்ட, அது கெஞ்சுகிற குரலில் “தய்சவேது அடிக்க மானா” என்றது. உங்களுக்குப் புரிகிறதா? ச்சோ ஸ்வீட்.

    குழந்தைகளோடு விளையாடும்போது பெரியவர்களின் ’ஸ்ட்ரெஸ்’ எனப்படும் சமாச்சாரம் பெருமளவு குறைகிறது. அதற்கான simple rule நாமும் விளையாடும்போது குழந்தையாக மாறிவிடவேண்டும் என்பதே. ’ஸ்ட்ரெஸ்’ நிறைய குறைய வேண்டுமென்றால் குப்புறப் படுத்துக்கொண்டு குழந்தையை முதுகின் மேலேறி மிதிக்க அல்லது குதிக்கச் சொன்னால் போதும். (முதுகுத்தண்டு பிரச்சினையிருப்பவர்கள் இந்த ஆலோசனையைப் பின்பற்றினால் பிறகு பெண்டு கழன்றுவிடும் என்றும் எச்சரிக்கிறேன்)

    அப்பார்ட்மெண்டுகளில் பெரியவர்களின் அக்கப்போர் வேண்டாமென்றால் வேண்டாம். ஆனால் குழந்தைகளுக்காக எப்போதும் கதவைக் கொஞ்சமாகத் திறந்து வைக்கலாமென்றுதான் தோன்றுகிறது.

    -சித்ரன்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
    • woven 6:40 பிற்பகல் on அக்டோபர் 27, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      குழந்தைகள் சண்டை பெற்றோர் சண்டையாக மாறாமல் இருக்க என்ன் செய்கிறீர்கள்? தன்னை விட வயது குறைந்த குழந்தைகளை அடித்தும், மிரட்டும் bullish குழந்தைகளை எப்படி கையாள்வது ? இப்படியான கேள்விகள் கதவை திறந்தால் வருகிறதே.

      • REKHA RAGHAVAN 4:26 மு.பகல் on அக்டோபர் 28, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        //குழந்தைகளுக்காக எப்போதும் கதவைக் கொஞ்சமாகத் திறந்து வைக்கலாமென்றுதான் தோன்றுகிறது//

        ஆஹா பேஷா செய்யலாம். நான் ரெடி. பயனுள்ள பதிவு.

        ரேகா ராகவன்.

      • Chandrasekkar C.S. 5:13 மு.பகல் on அக்டோபர் 28, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        அதற்கு ஒரு வழி உள்ளதாகவே தெரிகிறது. அது – கதவுடன் சேர்ந்து மனதையும் திறந்து வைத்துக்கொள்வது தான்…

        • அமிர்தவர்ஷினி அம்மா 6:28 மு.பகல் on அக்டோபர் 28, 2009 நிரந்தர பந்தம்

          ரசித்துப் படித்த பதிவு. குழந்தைகள் பற்றி பேசினாலோ, எழுதினாலோ இன்றைக்கெல்லாம் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கலாம் :)

    • சந்தனமுல்லை 5:14 மு.பகல் on அக்டோபர் 28, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல இடுகை, குழந்தைகளைப்போலவே!! /நிறைய விஷயங்களை துல்லியமாய் ஞாபகம் வைத்துக்கொள்கின்றன. ஒருமுறை சொல்லிக் கொடுத்தாலே ‘சட்’-டென்று பிடித்துக் கொள்கின்றன/ குழந்தைகளிடம் மிகுந்த வியப்பைத் தருவதும் இதுதான்!!

    • சித்ரன் 7:09 மு.பகல் on அக்டோபர் 28, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நன்றி Woven, ரேகா ராகவன், சந்துரு, சந்தன முல்லை.

      @woven : எங்கள் தங்கமணியார் எல்லா விஷயத்திலும் அதிகபட்சம் கரெக்ட்டாகவும், தேவைப்படும் நேரங்களில் டெர்ரராகவும் நடந்து கொள்வதால் எல்லாப் பொடிசுகளுக்கும் லேசாய் பயம் உண்டு. ஆகவே சின்ன சண்டைகள் பெரிதாகி பெற்றோர்கள் வரை போகாமலிருக்குமாறு அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். (ஆனால் துணி காயப்போடுகிற ”கிளிப்” திருட்டுப் போகிற விஷயத்தில் பெரியவர்கள் சண்டை வரத்தான் செய்கிறது. கொடுமை!)

      @chandrasekar: மனதை லேசாய் திறந்தால்தான்தான் கதவையும் லேசாய்த் திறக்க்கமுடியும் இல்லையா?. ரொம்ப திறந்தாலும் ஆபத்து. அப்புறம் எல்லாமே taken for granted என்று ஆகிவிடும்.

    • இராமநாதன் 9:47 பிற்பகல் on அக்டோபர் 29, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      முதற்குழந்தை வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கையில்,
      மழலை பற்றிய இப்பதிவு, கொணர்ந்தது மகிழ்ச்சி மனதில்!

    • என். சொக்கன் 5:48 மு.பகல் on நவம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நேர்த்தியான பதிவு – அபார்ட்மெண்ட் கலாசாரத்தில் குழந்தைகளின் கதி என்பதுபற்றி யாராவது பிஹெச்டி செய்து டாக்டர் பட்டம் வாங்கலாம் :) அந்த அளவுக்கு யோசிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கின்றன.

      • சித்ரன் 11:27 மு.பகல் on நவம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        ஒரு சிறிய (அல்லது பெரிய) காம்பெளண்டுக்குள் அதிக பட்ச விளையாட்டாய் கிரிக்கெட். அதைவிட்டால் பரஸ்பரம் DVD மாற்றிக்கொண்டு வீடியோ கேம். மீறி மீறிப் போனால் hide and seek. பல்லாங்குழி, பாண்டி பற்றிப் பேசினால் சிரிக்கிறார்கள். விளையாட நண்பர்கள் இல்லாவிட்டால் பொடிசுகள் தத்தமது அப்பா வந்து பந்து போட தனியாக விளையாட்டு. பெண்குழந்தைகள் என்றால் சும்மா உட்கார்ந்து என்னவோ பேசி சிரித்து விளையாடுகிறார்கள். தட்ஸ் ஆல்.

    • சித்ரன் 7:20 மு.பகல் on அக்டோபர் 28, 2009 நிரந்தர பந்தம்

      நன்றி! அமிர்தவர்ஷினியம்மா! நீங்கள் சொல்வது சரியே. அதே மாதிரி குழந்தைகளுடன் பழகி அவர்களை நம்பால் ஈர்ப்பதும் ஒரு கலையே.

  • சில்லறை வரங்கள் 

    சித்ரன் 5:47 am on September 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    beach
    எலியட்ஸ் பீச் கடற்கரை. வானத்தில் கருமேகங்களுக்கு நடுவில் சற்றே தேய்ந்த பவுர்ணமி. மழைவரும் போல அடிக்கிற காற்றில் ஆர்ப்பரிக்கிற கடல். அலை வந்து திரும்புகிற இடத்தில் நான், சரசுராம், பொன்.சுதா மூவரும் அமர்ந்திருந்தோம். நீண்ட நாட்களுக்கப்புறம் நிகழ்ந்த சந்திப்பின் உற்சாகத்தில் இலக்கியம் திரைப்படம் என்று நிறைய கலந்து நிறைந்திருந்தது பொழுது. சுஜாதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, சதத் ஹஸன் மாண்டோ, கிம்கி டுக், கோங்லி என மானாவாரியாக எடுத்துக் கோர்த்துக்கொண்டிருந்தோம். கடலில் கால் நனைக்கிற கூட்டம், டிஜிட்டல் கேமராக்களின் பளிச்சிடல், தீப்பொறி பறக்க மக்காச்சோள வண்டி, பஞ்சு மிட்டாய் கிணிமணி என்று எதுவும் கவர்ந்து கவனத்தைக் கலைத்துவிடவில்லை.

    ஆனால், இடையிடையே மிகப் பெரிய தொந்தரவாக பிச்சைக்காரர்கள். என்றைக்கும் பார்த்திராத அளவுக்கு இன்றைக்கு மிக மிக அதிகமாக. சிறுவர்கள், சிறுமிகள், தூங்கும் குழந்தையை தோளில் போட்ட இளைஞன், வெற்றிலையைக் குதப்பியபடி ஒரு யுவதி, முதுமை தள்ளாட்டத்துடன் மிக வயதானவர்கள் என்று விதவிதமாக, பரவலாக கடற்கரையெங்கும் பிச்சையெடுக்கிறார்கள். திரும்புகிற, நகர்கிற இடமெல்லாம் கண்முன்னே வந்து நிற்கிறார்கள். மனதில் வழக்கமாக ஓடுகிற “கையும் காலும் நல்லாதானே இருக்கு. உழைச்சு சாப்புடறதுக்கென்ன?” மற்றும் “பிச்சைக்காரர்களை என்கரேஜ் பண்றது ரொம்ப தப்பு” போன்ற வசன வரிகளை ஒரு சில சமயம் ஒரு மூன்றாந்தர மனிதாபத்தோடு புறந்தள்ளிவிட்டு ஒரு ரூபாயோ இரண்டு ரூபாயோ சில்லறை இருப்பைப் பொறுத்து அளிப்பதும் நடந்துவிடுகிறதுதான்.

    இந்தப் ”பெரிய மனசு” எப்போது வெளிப்படுகிறதென்றால் கடற்கரைக்குப் போய்ச் சேர்ந்ததும் மூன்றாவது அல்லது நான்காவது பிச்சைக்காரர் எதிரில் வந்து நிற்கும்போதுதான். முதல் இரண்டு பேரை மேற்கண்ட வசனங்களை மனதிற்குள் ஓடவிட்டு புறக்கணித்து விடுவது வழக்கமாகிவிடுகிறது. மேலும் சில பேர் நகராமல் நின்று கொண்டு தொடந்து குரலெழுப்பிக்கொண்டிருக்கும் போது வேறு வழியில்லாமல் ஒரு தப்பித்தலுக்காக கொடுக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் மூன்று பேரும் இருந்த சில்லறைகளை தலா ஒருவருக்கோ இருவருக்கோ கொடுத்து காலியாகிவிட்டது.

    பேச்சு சுவாரஸ்யமாய் எங்கெங்கோ போய்விட்டிருந்தது. ஒரு கூன்விழுந்த கிழவி அருகில் வந்தாள். அவள் முகம் இருளில் சரியாய்த் தெரியவில்லை. என்னைப்பார்த்து கையை நீட்டினாள். ’செல்லம்.. எதுனா குடுப்பா’ என்றாள். ’பசிக்கிறது’ என்றாள். பேச்சு தடைபட்டதில் நான் அவளைப் போகச் சொன்னேன். அவள் போகவில்லை. நண்பர்களும் அவளை விரட்ட முயற்சிக்க, எதுவும் பலிக்கவில்லை. இன்னும் ஈனமான குரலில் “மகனே” என்றாள் என்னைப்பார்த்து.

    “போச்சுடா” என்று சிரித்தேன் நான். ”எதுனா குடு மகனே” என்று கெஞ்சல் அதிகமானது. கிழவி போகிற மாதிரி தெரியவில்லை.

    “மகனேஏஏஏஏ.. செல்லம்ம்ம்ம்ம்ம்..”

    இதென்ன வம்பாகப் போயிற்று என்று நினைத்தேன். என்னையே குறிவைத்து செண்டிமெண்டாய் அம்புவிடுகிற கிழவியை நிமிர்ந்து பார்த்தேன். அவள் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்து நகர்கிற மாதிரி தெரியவில்லை. மீண்டும் ”மகனேஏஏ” என்றாள். அதற்குமேல் தாங்காதவனாக நான் சில்லறையைத் தேட நல்ல வேளையாக ஒரு ரூபாய் நாணயம் ஒன்று கிடைத்தது. ‘இந்தா..” என்று கொடுத்தேன்.

    “மவராசனா இரு.. உனக்கு நல்லதா ஒருத்தி பொண்டாட்டியா வருவா” என்று சொல்லிவிட்டுப் போனாள்.

    இன்னொரு நல்ல பெண்டாட்டியா?

     
    • REKHA RAGHAVAN 6:18 மு.பகல் on செப்டம்பர் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //இன்னொரு நல்ல பெண்டாட்டியா?//

      “போச்சுடா! இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன் எழுந்து போயிடலாம்னு. கேட்டீங்களா?”.
      (ஹீ..ஹீ…இது நீங்க பேசினது இல்லீங்க. சும்மா நானே கற்பனை செஞ்சுக்கிட்டது.)

      ரேகா ராகவன்.

    • Sentil 2:28 பிற்பகல் on செப்டம்பர் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Chitran Sir,
      Beggars seems to become creative in their profession. :-) .
      Many times I tired them to engage in doing some public work, like cleaning the plastics or wastes around before paying, but they prefer to scold me including my previous generation before exiting.

      • சித்ரன் 11:22 மு.பகல் on செப்டம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        Thanks Rekha Ragavan, Bala & Sentil.
        நடு ட்ராஃப்பிக்கில் உடம்பில் வளையம் மாட்டி பல்டியடித்துக்கொண்டிருந்த சின்னப் பெண்ணுக்கு காரிலிருந்த ஒருவர் பத்துரூபாயைக் கொடுத்துவிட்டுப் போனதைப் பார்த்தேன் இன்று.

  • தடுக்கிப்பீடியா 

    சித்ரன் 8:03 am on September 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: இணையம், சித்ரன், google, search, wikipedia

    Google T-shirt

    Google T-shirt

    முதலிலெல்லாம் எந்தச் சமாச்சாரத்தைத் தேடவேண்டுமென்றாலும் இடப்பக்கம் வலப்பக்கம் திரும்பாமல் நேராக கூகிளுக்கு போய் தட்டிவிடவேண்டியதுதான். கோடிக்கணக்கில் இறைந்து கிடக்கும் வலைப்பக்கங்களிலிருந்து நீ கேட்டது இதுதானா பார் என்று பொறுக்கியெடுத்து ஒரு கை அள்ளிக் கொணர்ந்து கூகுள் கொடுக்கும் பிரசாதத்தில் நமக்குத் தேவைப்படுகிற முந்திரிப்பருப்பு நிச்சயம் ஒன்றிரண்டாவது கிடைத்துவிடும்.

    இவ்வாறாக இட்லி, வடை என்று எதைத் தேடுவதென்றாலும் கூகிள் கை கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. வேறு எந்த தேடலியந்திரமும் கிட்டே நெருங்க முடியாத அளவு வளர்ச்சியடைந்து இப்போது நெ.1 என்று ஆகிவிட்டது. Search Engine என்ற வகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு engine பிடிக்கலாம். சிலருக்கு யாஹூ, சிலருக்கு பிங்கு (Bing). எனக்கு கூகுள் சொந்த மாமா பையன் என்பது மாதிரி உறவாகிவிட்டது.

    “Sometimes when I am alone I google myself” என்கிற வாசகத்தைத் தாங்கிய ஒரு சிவப்பு பனியனை கடையில் பார்த்தவுடனே பிடித்துப் போய், விருப்பமான உடையாய் அவ்வப்போது ரொம்ப நாளைக்கு அணிந்திருந்தேன். மேலும் என்னுடைய google talk ஸ்டேடஸ் செய்தியாக இதையே சில நாள் போட்டு வைத்திருந்தேன். ‘சில நேரம் நான் தனியாக இருக்கும் போது என்னை நானே தேடிப்பார்க்கிறேன்’ என்று அதை அர்த்தப்படித்தி வைத்திருந்தேன். தெருவில், ரயிலில், அலுவலகத்தில் என்று எதிரே வருகிறவர்களின் பார்வை என் பனியன் வாசகத்தின் மேல் படிவதை லேசாக நான் ரசிக்காமலில்லை. இதன் மூலம் நான் வாழ்வாதாரத்துக்கான உத்யோகமாய் கம்ப்யூட்டரைக் கட்டிக்கொண்டு அழுகிறேன் என்பதை எல்லோருக்கும் பிரஸ்தாபித்துவிடுகிற ஒரு தற்பெருமை. என் பனியனைப் படிக்கிற இணையம் பற்றி அறியாதவர்கள் “இன்னாதிது கூகுள்னா?” என்று புருவம் உயர்த்தவும் வாய்ப்புண்டு. Google Talk chat-ல் வந்த ’விவகாரம்’ பிடித்த நண்பரொருவர் வேண்டுமென்றே “ஒரு சின்ன சந்தேகம். google-ன்னா கெட்ட வார்த்தையா?” என்று கேட்க திடுக்கிட்டு உடனே ஸ்டேட்டஸ் செய்தியை மாற்றிவிட்டேன்.

    ஆனால் இப்போதெல்லாம் கூகிளில் எதைத் தேடினாலும் முதல் பக்கத்தில் ஒரு நான்கைந்து ஸர்ச் ரிசல்டுக்குள்ளாகவே ஒரு விக்கிப்பீடியா பக்கத்திலும் நாம் தேடுவது இருக்கிறது என்று கூகிள் காட்ட ஆரம்பித்தது. இது அடிக்கடி தொடரவே மாமா பையனுக்கு எதற்கு சிரமம் கொடுப்பானேன் என்று நேராக விக்கிப் பீடியாவுக்கே போக ஆரம்பித்துவிட்டேன். விக்கிக் பீடியா கிட்டத்தட்ட ஒரு அட்சய பாத்திரமாக ஆகிவிட்டது. எதைக்கேட்டாலும் பரமாத்மா மாதிரி எடுத்துக் கொடுக்கிறது. ஏதாவது ஒன்றைத் தேடப்போனால் தேடியது தவிர அது சம்பந்தப்பட்ட குறிச்சொற்கள் அந்தந்தப் பக்கங்களில் கொட்டிக்கிடப்பதால் அதைக் கிளிக்கி இதைக் கிளிக்கி ஒரு பத்து நிமிடத்தில் விக்கிப் பீடியா என்கிற அடர்ந்த கானகத்தே தொலைந்து போய் காணாமல் போய் விட நேரிடும். ஏதோ ஒரு சில பக்கங்களில் விளையாட்டுப் போல விக்கியை ஆரம்பித்து இப்போது அதை எல்லையில்லா என்சைக்ளொப்பீடியாவாக மாற்றிய மிகப் பெரிய மூளைக்காரர்களுக்கு இந்தப் பொன்னான வேளையில் சிரம் தாழ்த்தி கண்ணம்மாபேட்டை இணைய இளைஞர் மனமகிழ் மன்றம் சார்பாக இந்தக் கதராடையை பொன்னாடையாக அணிவித்து …

    இப்போது போய்ப் பார்த்தால் நான் எழுதிய வலைப்பதிவுகளில் இடையிடையே சொல்லப்படும் விஷயங்களுக்கான இணைப்புப் பக்கமாய் விக்கிப்பீடியாவின் சுட்டிகள்தான் அதிகம் இருக்கின்றன. இட்லி என்று தேடினால் அதற்கொரு பக்கம், ரவா தோசைக்கு ஒரு பக்கம். இது மாதிரி மைலாப்பூர், சைதாப்பேட்டை, கருணாநிதி, விஜயகாந்த் என்று எதைத் தேடினாலும் அதற்கு ஒரு பக்கம் இருக்கிறது. ஆக விக்கிப்பீடியாவானது “நம்மாளு” என்கிற மாதிரி ரொம்பவும் நெருக்கமாகிவிட்டது.

    ஒருதடவை மருந்துக் கடையில் வாங்கி வந்த ப்ரிஸ்கிரிப்ஷன் மருந்தின் பட்டையில் அதன் பெயர் இல்லாததால் அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன். பையனுக்கு ஸ்கூலில் கொடுக்கப்படும் ஹோம் ஒர்க்குகளுக்குக்கூட (நாமதாங்க பண்ணனும்) பெரும்பாலும் இப்போதெல்லாம் விக்கிப்பீடியாவையே பெருமளவில் நம்பியிருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் விக்கிப்பீடியாவின் பக்கங்களில் பொதிந்திருக்கும் விஷயங்களின் நம்பகத்தன்மைக்கு “ப்ரீத்தி மிக்ஸி” அளவுக்கு கியாரண்டி இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். ஆனால் 2 மார்க் ஸ்கூல் வினாக்களுக்கு சில தகவல்கள் எதேஷ்டம்.

    நேற்று ஒரு ஹோம் ஒர்க்குக்காக இந்தியாவில் Deciduous காடுகள் எங்கெல்லாம் இருக்கின்றதென்று தேடிக்கொண்டிருந்தேன். அருகில் வந்து நின்ற மனைவி மானிட்டரை கண்ணுற்றுவிட்டு “தடுக்கி விழுந்தா விக்கிப்பீடியாலதான் போய் விழுகறீங்க போல” என்று சொன்னதால் இப்படியொரு தலைப்பில் இப்படியொரு பதிவு.

    -சித்ரன்

     
    • ila 9:48 மு.பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :)

    • Periyasamy 10:06 மு.பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நானெல்லாம் தினமும் Wikipedia’s இரண்டு கட்டுரையாவது படிக்க நேர்ந்துவிடுகிறது.

      ஆனால் அனைத்துத் தகவல்களையும் அப்படியே நம்பி விட முடியாதுதான்.

    • சத்யராஜ்குமார் 3:01 பிற்பகல் on செப்டம்பர் 1, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பீடிப்பதுன்னு சொல்றாங்களே அந்த பீடியா? :-|

    • REKHA RAGHAVAN 10:23 மு.பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      // சத்யராஜ்குமார்/
      பீடிப்பதுன்னு சொல்றாங்களே அந்த பீடியா?

      பிடிப்பது தானே சரி SRK?

      @@ -சித்ரன்

      நல்ல பதிவு. தலைப்பு படு ஜோர்.
      ரேகா ராகவன்

    • சத்யராஜ்குமார் 11:23 மு.பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      @REKHA RAGHAVAN:

      //பிடிப்பது தானே சரி SRK?//

      பீடிப்பது என்ற சொல் வேறு. பொதுவாக நோய்கள் பீடிப்பதாக சொல்வார்கள்.

    • சித்ரன் 12:54 பிற்பகல் on செப்டம்பர் 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நன்றி இளா, பெரியசாமி, சத்யராஜ்குமார், ரேகா ராகவன்.

      @பெரியசாமி: வி.பீடியாவை ஓரளவுதான் நம்பலாம்.
      @சத்யராஜ்குமார் @ரேகா ராகவன்: நான் விக்கிபீடியா நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூட சொல்லலாம். அடுத்த டெக்னாலஜி வரும் வரைதான். அப்புறம் சரியாகிவிடும்.

    • Prakash 4:30 மு.பகல் on செப்டம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அதனுடைய chemical name-ஐ வைத்து விக்கிப்பீடியாவில் தேடி இன்னதுக்குத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டு வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணமடைந்தேன்.//

      இது தவறான பழக்கம். இனிமே செய்யாதீங்க.

      • சித்ரன் 4:54 மு.பகல் on செப்டம்பர் 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி பிரகாஷ். நான் வி.பீடியாவில் சரிபார்த்துக் கொண்டது டாக்டர் எழுதிக்கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன் மருந்துதான். சந்தேகமும் ஆர்வக்கோளாறும் கலந்த ஒரு நிலையில் அதை செய்யவேண்டியிருந்தது. இந்த மாதிரி அவசர நேரத்தில் சிலசமயம் நமக்கு நாமே டாக்டராகியும் விடுகிறோம். முடிந்தவரை இதைத் தவிர்க்க வேண்டும்.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்