Updates from ஜூலை, 2009 Hide threads | Keyboard Shortcuts

  • கதை vs தொழில்நுட்பம் 

    சத்யராஜ்குமார் 11:17 pm on July 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    ஆரம்பம் தொட்டே கதை எழுதும் ஆர்வத்தை விட, அதில் தொழில்நுட்பத்தை நுழைக்கும் போக்கு என்னிடம் அதிகமாயிருந்தது.

    பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் சட்டென ஒரு தட்டச்சு இயந்திரத்தை (ஹால்டா) வாங்கி தட்ட ஆரம்பித்தது அப்படித்தான். முறைப்படி டைப்பிங் பழகவில்லை. ஆனால் மனதின் வேகத்துக்கு தடதடவென தட்டி நொறுக்க சில நாட்களிலேயே பழகி விட்டேன். அப்புறம் கணினிக்கு தாவினேன். பாரதி போன்ற ஷெல் சார்ந்த மென்பொருட்களும், டாட்மேட்ரிக்ஸ் ப்ரிண்ட்டரும் என் கதை எழுதும் ஆர்வத்தை குறையாமல் பார்த்துக் கொண்டன.

    அந்த காலகட்டத்தில் சுஜாதா தவிர வேறு யாரெல்லாம் கம்ப்யூட்டரில் கதை தட்டிக் கொண்டிருந்தார்கள் என்று அவ்வளவாய் தெரியாது. (இரா. முருகன்?) கல்கியில் அப்போது என்னைப் பற்றி வெளியான சிறுகுறிப்பில் நான் கம்ப்யூட்டரில் கதை எழுதி வருவது குறித்து பிரசுரமாகி இருந்ததால், ஒரு விழாவில் சந்தித்த ஆர்னிகா நாசர், “கட்டுபடியாகுமா?” என்றார்.

    விண்டோஸ் 3.1 வந்த பின் தமிழைப் போல பாவ்லா காட்டும் ட்ரூ டைப் எழுத்துருக்கள் புழக்கத்துக்கு வந்தன. என்னிடமிருந்த கோரல் ட்ரா என்ற மென்பொருளில் கொஞ்சம் மெனக்கெட்டால் அப்படிப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கும் வசதி இருந்தது. மெனக்கெட்டேன். ஒரு எழுத்துரு உருவாக்கி அதற்கு ஸரஸ்வதி என பெயரிட்டேன். சமீபத்தில் யுனிகோட் பரவலாகும் வரை எனக்கும் என் நெருங்கிய கணினி நண்பர்களுக்கும் (சித்ரன்) ஸரஸ்வதிதான் ஆஸ்தான எழுத்துரு. 2003-ல் என்றுதான் நினைக்கிறேன், முப்பது முப்பத்திரண்டு தமிழ் வலைப்பதிவாளர்களில் ஒருவனாய் நானும் மாறிய போது, சித்ரன் மூலமாக என்னை யாஹூ அரட்டையில் பிடித்த எழுத்தாளர் பாரா நானும், சித்ரனும் தமிழில் உரையாட ஸரஸ்வதியை உபயோகிக்கிறோம் என்றதும், “என்னது சிம்ரனா?” என்று கிண்டலடித்தார். எனக்கு ஏன் ஸ்ரீதேவி, கவுதமி என்று கவர்ச்சியாய் நடிகை பெயர் வைக்கத் தோணவில்லை என்று நொந்து கொண்டேன்.

    டயரி போன்ற வலைப்பதிவு தொழில்நுட்பத்தை கதை எழுதி கெடுத்த முன்னோடி வில்லன் நான். அதற்கு முக்கிய காரணம், சுவாரஸ்யமான சமாசாரங்களை பதிய எனக்குத் தெரிந்த ஒரே சவுகரியமான வடிவம் சிறுகதை. அமெரிக்காவில் இந்தியர்களின் சின்ன சின்ன அனுபவங்களை சுவாரஸ்யம் கலந்த கதையாக்கி துகள்கள் என்னும் தலைப்பில் வெளியிட, நல்ல வரவேற்பு. அப்போது ப்ளாகரில் இருந்ததால், அது தந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கதைகளில் கொஞ்சம் DHTML மேஜிக் செய்தேன். அதாவது ஒரு கதை முடிந்த இடத்தில் லின்க் கொடுத்து மவுசை மேலே வைத்தால், கதையின் இன்னொரு முடிவு பிரசன்னமாகும். இது போல பல கதைகளுக்கு இரண்டு முடிவுகள் வைத்திருந்ததையும், DHTML தொழில்நுட்பத்தை அதற்கு பயன்படுத்தியதையும் பாரா அப்போது இமெயிலில் மனசார கீழ்கண்டவாறு பாராட்டினார்.

    அன்புள்ள சத்யராஜ்குமார்

    உங்களது பிளாக்ஸ்பாட் வலைப்பதிவையும் பைட்ஸ் ஆனையும் இன்றுதான் முழுக்கப்
    படித்து முடித்தேன். என் முதல் பாராட்டு, உங்களது தொழில்நுட்ப
    வேலைகளுக்கு.
    மிக அழகாகப் பல விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். ஒரு
    கதைக்கு இரண்டு முடிவு கொடுக்கிறபோது சட்டென்று இன்னொரு பேரா
    உதயமாகிறதும் உங்களைப் பற்றிய சிறு குறிப்பு தனி பக்கமாக மேலே
    விழுவதுவும் அழகாக உள்ளன. நேர்த்தியான வடிவமைப்பில் கவர்கிறீர்கள்.

    விஷயத்துக்கு வருகிறேன்.

    மொழியின் அத்தனை சாத்தியங்களும் உங்களுக்கு வசப்படுகின்றன. ‘குமார்’ரக
    எழுத்தாளர்கள் யாருமே மொழி விஷயத்தில் இந்த உயரங்களைத் தொட்டதில்லை;-)
    நிச்சயமாக நீங்கள் மசாலா எழுத்தாளர் இல்லை என்று எல்லா கதைகளும்
    சொல்லிவிட்டன.

    அன்புடன், வாழ்த்துகளுடன்
    பாரா

    இதன் பின் Purist வலைப்பதிவர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் எனக் கருதி கதைகளை தொகுத்து இணையதளமாக்கி விட்டு, “இன்று – Today” என்னும் இந்த வலைப்பக்கத்தை வலைப்பதிவுகளின் ஒரிஜினல் நோக்கத்துக்கானதாக ஆரம்பித்தேன். சமீபத்தில் போட்டியின் பொருட்டு இரண்டொரு கதைகள் இங்கே இட வேண்டியதாயிற்று.

    நான் வலைப்பதிவில் தலை காட்டிய சில நாட்களிலேயே தமிழோவியம் கணேஷ் சட்டென்று பழக்கமாகி விட்டார். “ஏதாவது பண்ணுங்க.” என்று அடிக்கடி அன்புக்கட்டளை இடுவார். தட்டையான கதைகள் அச்சு ஊடகத்துக்கு சரி. ஹைப்பர் லின்க் போன்ற அற்புத சாத்தியங்கள் கொண்ட இணைய ஊடகத்துக்கும் அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென எண்ணியவன், ஹைப்பர் லின்க் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரே கதை ஆறு தடங்களில் பிரிந்து ஆறும் ஆறு வெவ்வேறு கதைகள் போல தனித் தனியே படிக்க முடியும்படி கறுப்பு வெள்ளை கனவுகள் எழுதிக் கொடுத்தேன். இதற்கும் இணைய அன்பர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. 3D கதைகள் என்று கணேஷ் அதற்குப் பெயர் வைத்தார்.

    இப்போது ட்விட்டர் வந்ததும் அதையும் விட்டு வைக்காமல் அங்கும் என் கதை முயற்சி தொடர்ந்ததை என் சமீபத்திய பதிவொன்றின் மூலம் அறிந்திருப்பீர்கள். அதை ட்விட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது – என்னிடம் பழகும் ஒரு சிலர் இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றார்கள். சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு? உண்மையில் அந்த ட்விட்டர் முயற்சி சில காலம் கழித்து நான் செய்ய உத்தேசித்திருந்த இன்னொரு புதிய முயற்சியின் வெள்ளோட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

    தெனாலி இணைய பத்திரிகை ஆசிரியர் குழு கொஞ்ச நாள் முன்பு என்னிடம் தொடர்பு கொண்டு, SMS மீடியாவில் ஒரு தொடர்கதை எழுத முடியுமா என கேட்டிருந்தார்கள். அதற்கான வடிவம் பிடிபட ட்விட்டர் அழகான பயிற்சிக் களம். போன்சாய் மாதிரி ஒரு தொடர் அமைத்து தருவது எனக்கு சவாலாகவும், சுவாரஸ்யமாகவும் தோன்றவே சம்மதித்தேன்.

    இதோ அந்த தொடர்கதை ஆரம்பமாகி விட்டது. முதலில் ஒரு க்ரைம் கதை. வரவேற்பை பொறுத்து பல வகை கதைகளையும் தர எண்ணம். தமிழில் இந்த புது ஊடக முயற்சியை நீங்களும் ருசித்துப் பாருங்கள்.

     
    • சித்ரன் 2:07 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      PDA-வில் கதை எழுதியதை விட்டுட்டீங்களே..

      ஸரஸ்வதி எழுத்துருவை நான் கொஞ்சம் மாற்றி இன்னும் ரெண்டு எழுத்துரு தயாரித்தேன். ஞாபகமிருக்கிறதா?

      தெனாலி முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

      • சத்யராஜ்குமார் 6:02 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சித்ரன், ஏற்கெனவே பதிவில் சுயபுராணம் தூக்கலாக தெரிந்ததால் நிறைய விஷயங்கள் சொல்லாமல் விட்டு விட்டேன். :-) உங்கள் மனைவி, மகன் பெயரில் தயாரித்த எழுத்துருக்கள்தானே? ஞாபகம் இருக்கிறது.

    • என். சொக்கன் 5:45 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ்குமார்,

      அட்வான்ஸ் வாழ்த்துகள். ஆனால் 2 வரி படிப்பதற்காக ஒரு க்ளிக் என்றால் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது, ட்விட்டரில் போட்டு ஒரு RSS feed கொடுத்தால் பின்பற்றுகிறவர்கள் அதிகமிருப்பார்கள் என்பது என் கருத்து :)

      சித்ரன்,

      PDA என்றதும் சுவாரஸ்யப்பட்டு வந்தேன் – செல்பேசியில் தமிழ் எழுத வழி உண்டா? (யுனிகோட், வேறுகோட் எதுவானாலும் பரவாயில்லை)

      - என். சொக்கன்,
      பெங்களூர்

    • சத்யராஜ்குமார் 6:18 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சொக்கன், வாழ்த்துக்கு நன்றி. இந்த கதை முற்றிலும் SMS மீடியாவுக்காக. ஒரு reference-க்காக இணையத்திலும் உள்ளது. இது முற்றிலும் தெனாலியின் சோதனை முயற்சியாகும். presentation உத்திகள் இன்னும் முழுதாய் தீர்மானமாகவில்லை. இந்த கதை முடிவதற்குள் சோதனைகள் செய்து பார்த்து தீர்மானிப்பதாக தெனாலியில் சொன்னார்கள். எழுதி தருகிற சின்ன கடமையை நான் செய்து விட்டேன் :-)

      PDA குறித்து – அப்போது ஒரு Casio கைக்கணினி வைத்திருந்தேன். அதில் TTF Fonts நிறுவ முடியும் என்பதால், என்னுடைய(!) ஸரஸ்வதியை அதில் நிறுவி, ரயிலில் செல்லும் நேரத்தில் சிறுகதைகள் எழுத பயன்படுத்தினேன். அதிலே எழுதின ‘சினிமா, சினிமா’ போன்ற கதைகள் குமுதத்தில் வெளி வந்த போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

      • என். சொக்கன் 6:56 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி சத்யராஜ்குமார் – TTF Fonts நிறுவும் வசதியுடன் ஒரு செல்ஃபோன் வந்தால் நன்றாக இருக்கும்!

        - என். சொக்கன்,
        பெங்களூர்.

        • சத்யராஜ்குமார் 7:26 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம்

          சொக்கன் , நான் முன்னர் வைத்திருந்த HP iPAQ செல்ஃபோனில் கூட ஸரஸ்வதி போட்டு வைத்திருந்தேனே! Windows Mobile OS அடிப்படையிலான எந்த செல்பேசியிலும் சுலபமாக TTF நிறுவலாம். Samsung, HTC போன்ற நிறுவனங்களின் மாடல்கள் மார்க்கெட்டில் உள்ளன. Smart Phone அல்லாத சாதாரண செல்போன்களிலும் அந்த வசதி இருந்தால் தேவலாம் என நீங்கள் ஆதங்கப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

        • என். சொக்கன் 11:09 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம்

          நான் வைத்திருப்பது நோகியா E75, அதில் TTF Fonts நிறுவும் வசதி இல்லை (என்று நினைக்கிறேன்), அதனால்தான் ஆதங்கம் :)

          - என். சொக்கன்,
          பெங்களூர்.

    • blj 10:13 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Well done and best wishes for the future.

  • ஆதிமூலம் 

    சத்யராஜ்குமார் 8:34 pm on May 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    பூச்சி புழுக்கள் தோன்றி, பிறகு நானும் நீங்களுமாக ஆனதற்குக் காரணம் DNA இல்லையாம். DNA-வின் ஒன்று விட்ட அண்ணன் RNA என்று ஒரு ஆங்கிலேய ரசாயனக்காரர் கண்டுபிடித்துச் சொல்லி விட்டார்.

    குளம் குட்டை ஓரமாய் ஒரு வெம்மையான மாலைப்பொழுதில் சூரியனின் புற ஊதா கதிர்களோடு நிகழ்ந்த ரசாயன மாற்றத்தில் முதல் முதலாய் ஒரு RNA எப்படி தோன்றியிருக்கும் என சோதனைக் குடுவையில் செய்து காட்டியிருக்கிறார்.

    DNA நிரவகிக்கும் பரம்பரை தகவல்களை ஆதி காலத்தில் RNAதான் கையாண்டிரு்க்கும் என்பது இவர் வாதம்.

    DNA, RNA இதெல்லாம் என்னண்ணே என்று கேட்டால் செல்களை ஆக்கவும் அழிக்கவுமான ஜெனட்டிக் சங்கதிகளை DNA சேமித்து வைத்திருக்கிறதாம். தபால்காரர் கணக்காக அந்தத் தகவல்களை எடுத்துக் கொண்டு போய் செல்களிடம் சேர்ப்பதோடன்றி சிக்கலான ஜெனட்டிக் சங்கேத தகவல்களை செல்களுக்குப் புரியும்படி மொழிபெயர்த்துச் சொல்லும் வேலையையும் RNA பார்த்துக் கொள்கிறதாம்.

    4 பில்லியன் வருடங்களுக்கு முன்பு உயிர்கள் தோன்றிய போது பரம்பரை தகவல்களை சேமிப்பது, பரிமாறுவது என இரண்டு வேலையையும் RNA பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் வேலைப்பளு தாங்காமல் DNA-விடம் பாதி வேலையைப் பிரித்துக் கொடுத்து விட்டதால் இத்தனை நாளாய் விஞ்ஞானிகள் டிராக் மாறி DNA-தான் உயிர்கள் தோன்றவும், பரிமாண விருத்திக்கும் காரணமாயிருக்கும் என்று தப்பாட்டம் ஆடி வந்திருக்கிறார்கள் என்கிறார் John D. Sutherland என்னும் இந்த ராசாயனவியலாளர்.

    புரட்சிகரமான இந்த ஆய்வு முடிவை வெளியிட்டவர் எதற்கும் இருக்கட்டுமென, “இன்னும் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் நிறைய இருக்கிறது. நான் சொன்ன அத்தனையுமே தப்பாகக் கூட இருக்கலாம்.” என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டு விட்டார். இதுதான் விஞ்ஞானிகள் டச்சா?

     
  • ஒளி வட்டம் 

    சத்யராஜ்குமார் 6:11 pm on May 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    சுஜாதா இருந்திருந்தால் இந்த வார கற்றதும் பெற்றதும்-ல் இதைப் பற்றி ஒரு பத்தி நிச்சயம் எழுதியிருப்பார்.

    இனி எங்கே சென்றாலும் உங்களை சுற்றி ஒரு ஒளி வட்டம் சுழலும் சாத்தியம் இருக்கிறது. ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ’ என்று ஒரு அந்தரங்க இணையக் குமிழி உங்களை சுற்றிச் சுற்றி வரும். Wi-Fi Network இனிமேல் பழசு. Mi-Fi என்னும் இந்த Personal Network புதுசு. விசிட்டிங் அட்டை சைசில் இருக்கும் ஸ்மார்ட் கார்ட் செய்யும் மாயம் இது.

    Mi-Fi Card

    Mi-Fi Card

    இந்த ஸ்மார்ட் கார்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டால் அது 3G அலைவரிசை வழியே இணைய இணைப்பு பெற்று உங்களைச் சுற்றி முப்பது அடி வட்டத்துக்குள் வலுவுடன் ஒரு Wi-Fi Network உருவாக்கித் தருகிறது. ஹாட் ஸ்பாட் தேடி காபிக் கடை காபிக் கடையாய் அலைய வேண்டியதில்லை. நீங்கள் அனுமதித்தால் இந்த இணைய வட்டத்துக்குள் இன்னும் ஐந்து பேர் இணைந்து தளங்களில் உலாவலாம். அல்லது உங்கள் லாப் டாப், ஐ-பாட், ஐ-போன் என்று ஐந்து கருவிகள் வரைக்கும் இணைத்துக் கொள்ளலாம்.

    அடுத்து இந்த ஸ்மார்ட் அட்டையை ஒரு சில்லு அளவுக்கு சிறிதாக்கி உங்கள் தோலுக்கடியில் வைத்து தைத்து விடுவதைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். (என்று நான் சரடு திரித்தால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்