Updates from அக்டோபர், 2009 Hide threads | Keyboard Shortcuts

  • பன்றிக்காய்ச்சலும் பதினேழாம் பதிகமும் 

    பொன்.சுதா 6:17 am on October 20, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    நாளுக்கு இரண்டு மூன்று முறை கடந்து சென்றும் கண்ணில் படாமலேயே போயிருக்கிறது. நண்பர் ஒருவருக்காக அந்த இடத்தில் காத்திருக்கும் போது தான் பார்க்க நேர்ந்தது.

    பன்றிக் காய்சலுக்கு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் என்னென்னவெல்லாம் செய்தார்கள்.

    இன்னுமொரு மாபெரும் மார்க்கமிருப்பதை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டே இப்பதிவை சமர்பிக்கிறேன்.
    swine1
    சென்னை சைதாப்பேட்டையில் என் இல்லத்தினருகில் உள்ள திருவாசக மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஃப்ளெக்ஸில் கண்டடைந்தது இது.

    7ம் நூற்றாண்டில் திருஞான சம்பந்தர் எழுந்தருளி இருந்த போது குளிர்சுரம் என்னும் கொடிய நோய் மக்களைத் தாக்கியதாம். மக்கள் கூடி சம்பந்தரிடம் முறையிட்ட போது அவர் சில பதிகங்கள் பாடித் தந்தாராம். அதைப் பாடி மக்கள் குளிர்சுரத்திலிருந்து தப்பித்தார்கள் என்ற செய்தியோடு, அந்த பதிகத்தின் பாடல்களும் அதில் பதிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல அப்பதிகங்களை திருநீறு அணித்து தினமும் பாடினால் சிக்கன்குனியா, பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போன்றவை வராது என்று எழுதி இருந்தது.

    இதன் நம்பகத் தன்மை குறித்து வல்லுனர்கள் ஆதாரபூர்வமாக விளக்கினால் நன்றாக இருக்கும். பன்றிக் காய்ச்சல் வந்தவர்கள் யாராவது ஒருவருக்கு இதை முயற்சித்து பலன் இருப்பின் உலகெங்கும் பரப்பலாமே. நமது அரிய கண்டுபிடிப்பை. அப்படி செய்கின்ற போது தமிழ் தவிர இந்திய மற்றும் உலக மொழியினர் இப்பதிகத்தை உச்சரிக்க முடியுமா? எனவே தமிழாசியர்களை உலகெங்கும் பயிற்சியாளர்களாக அனுப்பி சம்பாதிக்கச் செய்யலாம். கற்ற தமிழால் வாழட்டுமே.
    swine3
    மற்ற மொழியினர் இதை அப்படியே பாட வேண்டுமா? அல்லது இதை மொழி பெயர்த்து அவர்கள் மொழியில் சொல்லலாமா? சொன்னால் பலனிருக்குமா? தெரியவில்லை. யாரிடம் கேட்பது? மருந்தும், மருத்துவர்களும் இதன் மூலம் செயலிழந்து போவதால் அவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது? மருத்துவக் கல்லூரிகளை என்ன செய்வது என்பதை அரசுகள் தீர்மானிக்க வேண்டிவரும்.

    இப்பதிகத்தை தெரிந்து கொள்ள உலகெங்கும் உள்ள அனைவரும் பறந்தோடி வந்தால் சைதை தாங்குமா என்று ஒருபுறம் கவலையாகவும் இருக்கிறது.

    முக்கியமாக ஒன்று, ஃப்ளெக்ஸில் 17 வது பதிகம் கிடைக்கவில்லை என்று குறிபிடப்பட்டு இருக்கிறது. அதைத் தவிர்த்துப் படிப்பதால் பலன் எதாவது குறையுமாவென்றும் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.

    அப்பதிகத்தைத் தேடித் தர ஆய்வு மேற்கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    - பொன்.சுதா

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
  • ஒரே நாளில் இரண்டு லட்சம் 

    மீனாட்சி சுந்தரம் 11:10 pm on October 16, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    தீபாவளிக்கு ரெண்டுநாள் முன்பு மாலை டிவியில் சேனல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த போது ஒரு செய்திச் சானலை cross செய்ய நேர்ந்தது.

    சாலையில் டிவி செய்தி நிருபரின் மைக்கில் அந்த common man “ ஆமா சார்… என்ன சார் பண்ணுறது? இந்த வருஷம் இப்படி ஆயிடுச்சு. அன்னைக்கு இல்லாட்டி என்ன? அடுத்த நாள் பார்த்துக்கிட வேண்டியது தான்..” என்று வருத்தத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்.
    MeatShop
    தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவர் பேசியதைக் கேட்டதும் ஒரு சுவாரஸ்யம் தொற்றிக் கொள்ள … ரிமோட்டில் வால்யூம் அதிகம் செய்தேன்.

    அடுத்து ஒரு கோவில் புரோகிதர் அதே மைக்கில் “ பொதுவாவே சனிக்கிழமை விசேஷமானது தான். அதுல புரட்டாசி சனிக்கிழமை ரொம்ப விசேஷம். அதுலயும் ரொம்ப முக்கியம் புரட்டாசியின் கடைசி சனி. அன்னிக்கு பகவானை கும்பிட்டா ஒரு வருஷம் கும்பிட்ட பலன், கும்பிட்டவாளுக்கு” என்றார்.

    புரட்டாசி கடைசி சனி, சாமிகளின் ஜம்போ பேக் போல.

    அடுத்து ஒரு கறிக்கடைக்காரர். “ஆமா சார். இந்த வருஷம் கடைசி சனியில தீபாவளி வருது. அதுனால வியாபாரம் கொஞ்சம் டல்தான். போன வருஷம் சென்னையில மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள் வெட்டுனம். இந்த வருஷம் அஞ்சு, ஆறாயிரம் போனா அதிகம். அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை மறுவியாபாரத்துல கொஞ்சம் நடக்கும்னு நம்புறோம்.” என்றார்.

    வீட்டில் அனைவரும் சைவம். நான் அசைவம் சாப்பிடுவேன்…எப்பவாவது. என்றாலும் ஒரு நாளில் ரெண்டு லட்சம் ஆடுகள் என்றதும் திக்கென்றிருந்தது. கவனிக்கவும்! இது ஆடுகளின் கணக்கு மட்டும்.

    எனக்கு ஒன்று மட்டும் புரிவதேயில்லை.

    புகையிலை, புகையிலைப் பொருள்கள் கேடு என்று சொல்லும் அரசு புகையிலை பயிரிடுவதைத் தடுப்பதே இல்லை.

    குடித்தால் கேடு என்னும் அரசே அதை விற்பனை செய்கிறது.

    குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது. ஆனால் பார் இருக்கும். அதில் வண்டி நிறுத்தமும் இருக்கும்.

    வாகனங்களில் ஏர் ஹார்ன் தடை செய்யப் பட்டது. அதன் உற்பத்தி தடை செய்யப்படவில்லை. எனில் உற்பத்தியாகும் ஏர் ஹார்னை யார் உபயோகிக்கிறார்கள்?

    அளவிடும் மீட்டர் டேப்புகள் மொத்தமும் அரசாங்க முத்திரை வாங்கி வருவதில்லை.

    அதே போலத் தான்…

    சினிமாவில் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு நாயோ, குரங்கோ நடிப்பதை சித்ரவதை என்று மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யும் ப்ளூகிராஸ் இருக்கும் ஊரில் தான் இத்தனை மட்டன் கடைகள். பிரியாணி ஹோட்டல்கள்.

    யோசித்துப் பார்த்தால் குலை நடுங்குகிறது.

    ஒரே நாளில் சென்னையில் மட்டும் ரெண்டு லட்சம் ஆடுகள்.

    போதுமடா அசைவம்.

    - மீனாட்சி சுந்தரம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
    • kuttysamy 1:42 மு.பகல் on அக்டோபர் 17, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      ரசித்தேன் …தீபாவளி வாழ்த்துக்கள்

    • REKHA RAGHAVAN 1:47 மு.பகல் on அக்டோபர் 17, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சிந்திக்கவேண்டிய விஷயம். அருமையான பதிவு.

      ரேகா ராகவன்.

    • Vivek 11:17 மு.பகல் on அக்டோபர் 18, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கறிக்கடையில் , இறைச்சி வாங்கும் போது கூட இது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், குழம்பு கொதிக்கும் போது, கூடவே அந்த உணர்வும் கொதித்து ஆவியாகிவிடும். கறி சாப்பிடுவது மட்டுமே மிருகவதையா ? நம்ம அன்றாட வாழ்க்கைல எத்தனையோ இருக்கே! நாம் உபயோகிக்கும் செருப்பு, ஷு, பர்ஸ், பெல்ட், பை சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு வேளை அது செத்துப்போன மிருகத்தின் தோல் என்பதால் அதை வெஜிடேரியன் மக்களும் ஏற்றுக்கொள்கிறார்களோ ?

      • மீன்ஸ் 9:52 மு.பகல் on அக்டோபர் 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        300 வருசத்துக்கு ஒரு முறை தான் இப்படி வருமாம்.
        அப்படியாவது இரண்டு லக்‌ஷம் உயிரை காப்பாத்தியிருக்கார்னா கடவுள் இருக்கார் தானா?

    • Karthikeyan A 11:20 மு.பகல் on அக்டோபர் 23, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பேசாமல் தேசிய விலங்காக அறிவித்துவிட்டால் எப்படியிருக்கும்? பாருங்கள், இனிமேல் டால்பின்களை கொல்லமாட்டார்கள்.

  • நடந்த கதை 

    மீனாட்சி சுந்தரம் 6:25 am on October 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: pollachi, walking

    பொள்ளாச்சியில் ரவுண்டானா என்றொரு இடம் உண்டு. மகாலிங்கபுரத்தில் மிகப் பெரிய வட்ட வடிவமான மைதானம் அது.

    என்னுடைய ஹைஸ்கூல் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளையும், மே மாத வெயில்களையும் புறந்தள்ளி கிரிக்கெட் விளையாடின கிரவுண்ட் அது. இப்போது நேரு புறாவிடும் கத்திப்பாரா சிலை வைத்து, ரவுண்டாய் ரோடு போட்டு, சுற்றிலும் வேலி அமைத்து வாக்கர்ஸ் கிளப் ஆரம்பித்து ஹைடெக்காய் மாற்றியிருந்தார்கள்.roundana

    மைசூரில் இருந்து வரும் ஞாயிறு மாலைகளில் அங்கே போன போது வாக்கிங் போகிறவர்களைப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கும். அதிலும் பெண்கள்.

    கிட்டத்தட்ட பட்டுச் சேலை, ஒட்டியாணம் தவிர மற்ற நகைகள், பவுடர், லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுக் கொண்டு வியர்க்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் தான் போட்டிருக்கும் ரெபோக் ஷூ தெரிய சேலையை சாக்ஸூக்கு மேல் மிடி ஹைட்டில் கட்டியிருந்தது விநோதம். மாறாக ஹவாய் சப்பல் போட்டிருப்பவர்கள் அது மறையும் படி தழையத் தழைய சேலை கட்டி நடந்து கொண்டிருப்பார்கள். வாக்கிங் முடிந்ததும் நடைபாதைக் கடைகளில் பேல்பூரி, சில்லி காளான் ரெண்டு பிளேட் சாப்பிடுவது இவர்களது டயட்.

    ஒருமுறை 15 நாள் விடுமுறையில் காலையில் வாக்கிங் போன போது ஆண்களின் நடவடிக்கை இன்னும் விநோதம். சுகர், பிரஷர் பற்றிய பெருமைகளைப் பேசிக் கொண்டு வாக்கிங் போகும் டீம் ஒன்று, எனக்கு இதெல்லாம் இல்லை என்றவுடன் என்னுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள்.

    மற்றும் ஒருவர் தன்னுடைய டிராக்‌ஷூட், ஸ்னீக்கர்ஸ் இத்தியாதிகளுடன் காலை ஐந்தரைக்கே வந்துவிடுவார். ஒவ்வொரு இடமாய் மாற்றி மாற்றி உட்கார்ந்து நடப்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு டாண் என்று ஏழு மணிக்கு கிளம்பிவிடுவார்.

    இன்னொருவர் காரில் வருவார். முன் சீட்டில் இருக்கும் டிரைவர் இறங்கிக் கதவைத் திறந்துவிடவில்லை என்றால் அன்று வாக்கிங் கட். அவ்வளவு கெளரவம்.

    இதில் என்னுடைய பழைய க்ளாஸ்மேட் ஒருவன், இங்கிருந்து முன்னூறு மீட்டரில் வீடு. தொடர்ந்து வாக்கிங் வந்தவன் நான்கு நாட்கள் வரவில்லை. ஏன் என்று கேட்டதற்கு “ பைக் ரிப்பேர்டா மாப்ள…” என்றான்.

    - மீனாட்சி சுந்தரம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
    • kuttysamy 10:11 மு.பகல் on அக்டோபர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      nice..my wishes

    • REKHA RAGHAVAN 10:44 மு.பகல் on அக்டோபர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நான் 1975-76- ம் வருடங்களில் பொள்ளாச்சியில் அந்த ரௌண்டானாவை ஒட்டியிருந்த வெங்கட்ராமன் ரவுண்டு தெருவில் இருந்த மீன்துறை அலுவலகத்தில் பணிபுரிந்திருக்கிறேன். அந்த இடம் இப்போது ஹை-டெக்காக மாறியிருப்பது அறிந்து மகிழ்ச்சி. பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. நல்ல பதிவு.

      ரேகா ராகவன்.

      • மீன்ஸ் 9:47 மு.பகல் on அக்டோபர் 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        பொள்ளாச்சி தெரிந்தவர்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இது பாதிக்கும் இல்லையா?

    • soundr 7:13 மு.பகல் on அக்டோபர் 16, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //…பட்டுச் சேலை, ஒட்டியாணம் தவிர மற்ற நகைகள், பவுடர், லிப்ஸ்டிக்…..வியர்க்காமல் நடந்து கொண்டிருந்தார்கள். …..ரெபோக் ஷூ தெரிய சேலையை ….. மிடி ஹைட்டில் கட்டியிருந்தது ……..ஹவாய் சப்பல் …………மறையும் படி …..கட்டி நடந்து கொண்டிருப்பார்கள். ……நடைபாதைக் கடைகளில் பேல்பூரி, சில்லி காளான் சாப்பிடுவது ……டிராக்‌ஷூட், ஸ்னீகர்ஸ் இத்தியாதிகளுடன் …..உட்கார்ந்து நடப்பவர்களை வேடிக்கை பார்த்துவிட்டுகிளம்பிவிடுவார்…… டிரைவர் கதவைத் திறந்துவிடவில்லை என்றால் அன்று வாக்கிங் கட். //
      பெருமைக்கு ப.. மேய்பது, என்பது இது தானா…?

      • மீன்ஸ் 9:43 மு.பகல் on அக்டோபர் 22, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        பெருமைக்கு எருமை ஓட்டுவது என்பார்கள் எங்க பக்கம்.
        நன்றி

    • Lakshmi Narayanan 9:02 பிற்பகல் on அக்டோபர் 19, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Meens
      How are you?..Good to see you in bloggers world….Please keep blogging.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்