RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சரசுராம் 12:44 pm on November 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: bachelor, cats   

    பேச்சிலர் அறையில் ஒரு பூனைக் குடும்பம் 

    bachelorஎனது சமையல் அறையில் சற்று உயரத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதற்கு கதவெல்லாம் இல்லை. குறுக்காய் மூன்று கம்பிகள் மட்டும் உண்டு. அந்த இடைவெளியில் பூனைகள் நுழையலாம். ஆகவே அவ்வப்போது பூனைகள் நுழைவதுண்டு. பேச்சிலர் அறையில் சாம்பிளுக்குகூட எதுவும் கிடைக்காமல் அவைகள் கோபமாய் திட்டிக்கொண்டு போவது எனக்கு அடிக்கடி நடக்கிற சம்பவம். அது மாதிரி சமீபத்திலும் ஒரு பூனை நுழைந்தது. வழக்கம் போல் என நான் நினைக்க, வந்த பூனை போகவில்லை. தனித்துக் கேட்ட அதன் குரல் பிறகு கோரஸாய் ஒலிக்கத் தொடங்கியது. நான் புரியாமல் உள்ளே போனேன். லாஃப்ட்டில் இருந்த பழைய பெட்டிகளை நகர்த்தி எட்டிப் பார்க்க நான் திடுக்கிட்டு போனேன். அங்கே கறுப்பு வெள்ளையில் ஒரு தாய்ப் பூனையும் மிக அழகாய் பிரவுன் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் அதன் இரண்டு குட்டிகளும் இருந்தன. தாய் பூனை நான் பார்ப்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாய் சீற நான் பயந்து போய் இறங்கிக் கொண்டேன்.

    என்ன செய்வதென யோசித்தேன். அதற்குள் விஷயம் காம்பெளண்டின் ஃப்ளாஷ் நியுஸில் வந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வரத் தொடங்கினார்கள். ஆளாளுக்கு அதைப் போய் எட்டிப் பார்ப்பதும் தாய்ப் பூனை சீறுவதுமாய் காட்சி தொடர்ந்தது. அதை எப்படி விரட்டுவது என அவர்களிடம் ஐடியா கேட்டேன். இப்படி தொல்லை தந்தால் அதுவே இடம் மாறிவிடும் என்றார்கள். அது மட்டுமல்ல. “பூனையெல்லாம் குட்டி போட்டு குடும்பம் நடத்துது.. நீங்களும் இருக்கீங்களே..?” என்று கமெண்ட் வேறு போட்டு விட்டு போனார்கள். ஆகா என்னமா யோசிக்கறாங்க. ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்று நான் வடிவேல் மாதிரி யோசித்து விட்டு பதில் சொல்லாமல் அமைதி காப்பேன். பூனைகளின் வரவால் பக்கத்து வீட்டு குழந்தைகளுக்கு உற்சாகம் தாங்க முடியவில்லை. அவர்களை உயரத் தூக்கி அவைகளைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தார்கள். இவர்களின் தொல்லையில் நான்தான் இடம் மாறிவிடுவேன் போலிருந்தது. பூனைகள் சுகமாய் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தன. அதன் அதிகபட்ச இடமாற்றம் இடது மூலையிலிருந்து வலது மூலைக்கு வந்ததுதான்.

    விரட்ட நினைத்து முடியாமல் கடைசியாய் நானும் அதை ரசிக்க ஆரம்பித்தேன். அந்த குட்டிகளின் குறும்புகள் ஒவ்வொன்றும் கவிதையாய் இருந்தது. அந்த குட்டிகள் அந்த தாய் பூனைகளை படுத்துகிற பாடும் தாய் பூனையின் பொறுமையும் ஆச்சரியம் தந்தது. இதற்கிடையில் அந்த அப்பா பூனையின் தொல்லை வேறு. ஜன்னல் பக்கம் நின்று அவைகளை வீட்டிற்கு வரச் சொல்லி ஆனமட்டும் கத்திப் பார்க்கும். ஊஹூம். அதனிடம் எந்த பதிலும் வராது. கடைசியாய் தாய்ப் பூனைக்கு கோபம்தான் வரும். வந்த கோபத்தில் பதிலுக்கு சீற அது தலை தெறிக்க ஓடிப்போகும்.

    நான் தாய்ப் பூனை இல்லாத சமயத்தில் குட்டிகளை எடுத்துக் கொஞ்சுவேன். குழந்தைகளிடம் கொடுத்து விளையாட விடுவேன். அதன் அழகிய அசைவுகளை என் செல்போனில் பதிவாக்கினேன். எப்போதாவது கொஞ்சம் பால். எப்போதாவது பிஸ்கட் வைக்க அதுகள் ஆரம்பத்தில் தயங்கி பிறகு என் அன்பின் மீது நம்பிக்கை வந்து என்னிடம் நெருங்கியது. அதன் பிறகு என் அதிகபட்ச அன்பே தொல்லையாய் மாறிவிட்டதோ தெரியவில்லை. ஒரு நாள் அதன் சத்தத்தை காணவில்லை. அவசரமாய் போய் லாஃப்ட்டில் எட்டிப் பார்க்க பூனைகள் இல்லாமல் இடம் வெறுமையாய் இருந்தது. எனக்கு மனசு சட்டென கனத்து போனது. எங்கே போனது? வந்துவிடும் என காத்திருக்க அதற்கு பிறகு அது வரவேயில்லை. ரோட்டில் போகிற போது அந்த மாதிரி கலரில் பூனைகளைப் பார்க்கிறபோது என் அறையில் இருந்த பூனைகளோ என என் மனசு எப்போதும் தேட ஆரம்பித்தது. எனக்கு சமாதானம் ஆகவில்லை. வெறுப்புதான் வந்தது.

    பிறகு வீட்டிற்கு வந்தேன். கம்பிகள், கயிறுகள் கட்டி அந்த ஜன்னலை மூடினேன். இனிமேல் இந்த மாதிரி உறவே வேண்டாமெனத் தோன்றியது. ஆனாலும் அந்த வருத்தம் மட்டும் தீரவில்லை. பிரிவென்றால் துயரம்தானே. அது பூனையானாலும்..!

    -சரசுராம்

    கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.

     
  • சரசுராம் 6:09 am on September 16, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    காற்றில் பேசும் மனிதர்கள் 

    இந்த மனிதர்களை நீங்களும் பார்த்திருக்கலாம். ரோட்டில் நடந்தபடி ரயிலின் கதவோரங்களில் பார்க்கில் தனியே பென்ஞ்சில் அமர்ந்தபடி என அவர்களை பார்த்திருக்கலாம். ஒருமுறை சிக்னலில் அந்த மனிதர்களில் ஒருவரைப் பார்த்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. அவர் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். நான் திரும்பி பார்த்தேன். பெரியதாய் மண்டையை ஆட்டிக்கொண்டிருந்தார். அப்புறம் தனது வண்டியில் அழுத்தமாய் ஒரு குத்து விட்டு மீண்டும் ஏதோ பேசினார். அவர் போனில்தான் பேசுகிறாரென ஹெட்போன் தேடினேன். talking-to-windஆனால் ஹெட் மட்டும்தான் இருந்தது. போனெதுவும் இல்லை. சிக்னலில் எந்த பிரச்சனையும் இல்லை. இவரிடம்தான் ஏதோ பிரச்சனை என்று தோன்றியது. அன்று நான் அவரை குழப்பமாய் பார்த்துவிட்டுப் போனேன்.

    சரசுராமின் முதல் பதிவில் அவரைப் பற்றிய அறிமுகம் ஏன் இல்லை என்று சித்ரன் கேட்டார். முதல் காரணம் அப்போது எனக்கு நேரமில்லை. இரண்டாவது சரசுராம் பற்றியும், அவர் கதைகள் பற்றி என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றியும் முன்னரே இன்றுவில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. உங்கள் வசதிக்காக அந்தப் பதிவுக்கான லின்க் இதோ: சரசுராம் என்றொரு எழுத்தாளர்
    - சத்யராஜ்குமார்

    இன்னொரு நாள். என் நண்பனின் பிறந்தநாள் பார்ட்டி. அவசரமாய் பஸ் ஏறினேன். சீட்டில் இடம் பிடித்து உட்கார மீண்டும் அதே மாதிரி மனிதரை அந்த பஸ்ஸில் சந்தித்தேன். அருகில் இருந்த அந்த ஜன்னல் மனிதர் ஏதோ கேட்ட மாதிரி இருக்க என்ன சார் என்றேன். அவர் என்னை இலேசாய் முறைத்து விட்டு திரும்பி மீண்டும் ஜன்னல் வழியே பார்வையை தொடர்ந்தார். ஆள் நன்றாகவே இருந்தார். வயது கிட்டதட்ட ஐம்பது இருக்கலாம். சதுர கண்ணாடி. ஷேவ் செய்த சாந்தமான முகம். நல்ல உடை. கையில் லன்ச் பேக். மிக சாதாரணமாய் ஒரு ஆபிஸிற்கும் போகும் சகல அடையாளங்களுடன் இருந்தார். கொஞ்ச நேரத்தில் அவர் கைகளை மெல்ல அசைக்க ஆரம்பித்தார். அவர் முகத்தில் நிறைய எரிச்சல். சட்டென அவரிடமிருந்து கோபம் வெடித்தது. சரளமாய் ஒரு கெட்ட வார்த்தையை தயக்கமின்றி விட்டார். முடியெல்லாம் முன்னால் விழாமல் திடீரென அவர் ஒரு அந்நியனாய் மாறிப்போனார். நான் அவரை இலேசான பயத்துடன் பார்த்தேன். பிறகு சில நிமிட மெளனம். சில நிமிடம் உரையாடல் என அவரிடம் தொடர்ந்து கொண்டிருந்தது. எல்லாமே எதிரே ஆள் இருப்பதாய் பாவித்து அவர் செய்யும் விஷயங்கள் என மெல்ல புரிய ஆரம்பித்தது. என்ன பிரச்சனை சார் என்று கேட்க நினைத்தேன். கேட்டால் நிச்சயம் அடி விழும் எனத் தோன்ற வெறும் கவனிப்போடு நிறுத்திக் கொண்டேன்.

    எனக்கு சட்டென மனசு கனமானது. ஏதேதோ யோசனைகள் வழியெங்கும் என்னைத் துரத்தியது. இதை என்னவென்று நினைப்பது? என்னவென கணிப்பது? பகிர்தலே இல்லாததன் விளைவா? உனக்கு என்ன பிரச்சனை என அவர் தோள் தொட்டு சொல்ல ஒரு சினேகிதம் கூடவா இல்லை? என்ன கொடுமை இது? வீடென்று எதுவும் இல்லையா அவருக்கு? அல்லது வீடுதான் பிரச்சனையா? அப்படியென்றால் வீடு என்பதன் அர்த்தம்தான் என்ன? பிரச்சனைகளின் துரத்தல் யாருக்குத்தான் இல்லை? இரவைவிட பகல் அதிகம் பயமுறுத்துகிறது. அப்படியென்றால் எது ஆறுதல்? எந்த இடம் சந்தோஷம் என ஏதேதோ யோசனைகள்.

    இதுதான் சந்தோஷமென எப்படி குறிப்பிட்டு சொல்ல முடியும்? ஒவ்வொருவருக்கு ஒரு சந்தோஷம். ஒருவருக்கு படிப்பதில். ஒருவருக்கு பாடுவதில். ஒருவருக்கு உதவி செய்வதில். ஒருவருக்கு உபத்திரவம் செய்வதில். ஆனால் எல்லோருக்கும் ஏதோவொரு சந்தோசம் தேவைப்படுகிறது. மன ஆறுதல் தேவைப்படுகிறது. நம் பிரச்சனைகளை நம்பிக்கையானவர் என் நினைத்து ஒருவரிடம் சொல்லி அதை அப்படியே வேறொருவர் வாயிலிருந்து கேட்க நேர்ந்தாலும் பகிர்தல் அவசியம் என்றே தோன்றுகிறது. இல்லையேல் நான் பார்த்த சந்தித்த அந்த காற்றில் பேசும் மனிதர்கள் மாதிரி நாமும் ஆகிவிடுவோம் என்று உறுதியாய் தோன்றியது.

    பஸ்ஸை விட்டு இறங்க இறங்க அந்த பர்த்டே நண்பனிடமிருந்து போன் வந்தது. மச்சான் இன்னும் எங்கடா இருக்க? கேக் வெட்டாம எல்லாரும் உனக்காக வெயிட்டிங். சீக்கிரம் வந்து தொலை என்று அவன் திட்டினாலும் எனக்கு கேட்க சந்தோசமாய்தான் இருந்தது!

    - சரசுராம்

     
    • சித்ரன் 8:21 மு.பகல் on செப்டம்பர் 16, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      மனிதர்கள் இப்படி ஆகிவிடுவதற்கு, மன உணர்வுகளை வெளியே சொல்ல ஆளில்லாத நிலை, அல்லது எதையும் யாரிடமும் சொல்ல விரும்பாத தன்மை – இவை இரண்டுமே காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. மனதளவில் தனக்குத்தானே இறுக்கமாய் இருக்கும் நபர்களுக்கும் இந்த மாதிரி நிகழும் என்று நம்புகிறேன்.

      நல்ல பதிவு சரசுராம்.

      சித்ரன்
      http://chithran.com

    • REKHA RAGHAVAN 11:13 பிற்பகல் on செப்டம்பர் 16, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //நம்பிக்கையானவர் என் நினைத்து ஒருவரிடம் சொல்லி அதை அப்படியே வேறொருவர் வாயிலிருந்து கேட்க நேர்ந்தாலும் பகிர்தல் அவசியம் என்றே தோன்றுகிறது. இல்லையேல் நான் பார்த்த சந்தித்த அந்த காற்றில் பேசும் மனிதர்கள் மாதிரி நாமும் ஆகிவிடுவோம்//

      உண்மைதான். அலசி ஆராய்ந்து மிக அருமையாக எழுதப்பட்ட பதிவு. படித்ததை உள்வாங்கி அதன்படி நடந்து கொண்டால் நமக்கு நல்லது.
      ரேகா ராகவன்
      http://rekharaghavan.blogspot.com

    • Gowtham 6:01 மு.பகல் on செப்டம்பர் 17, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //எனக்கு சட்டென மனசு கனமானது. ஏதேதோ யோசனைகள் வழியெங்கும் என்னைத் துரத்தியது. இதை என்னவென்று நினைப்பது? //

      I felt the same way many times. Just sharing what I heard from my Dr. friends and from Internet here.

      It depends on the persons mental state. If the person is talking to themselves but is in good mental condition, it’s probably just to help them remember things better or because they are primarily auditory learners. However, if someone is in a serious mental state or has a mental condition, talking to themselves is often associated with schizophrenia, bipolar disorder, etc. and other mental conditions like that where the person believes that there is either another person inside their head or someone invisible who follows them around. (Schizophrenia is also where there is another personality to them, which can make them seem like they are talking to themselves when they are really channeling the other person.)

    • subhashreeramakrishnan 3:33 பிற்பகல் on செப்டம்பர் 17, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      i felt very sad while reading this…people who have come out due to employment and some other reasons..they really face this..in the sense no one to share their feelings…but now a days in india there are people like this….and recently i have seen one old person very quite and calm lady…but now a days if some one goes…she doesnt leave them…she talks like anything….non stop….some thing unusual scene for us…because generally she is such a quite lady…i felt very sad…this shows we dont spend time with anyone just to listen to their feelings…really scary even for us one day no one will be there and we will be talking to ourselves…

  • சரசுராம் 6:35 pm on September 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    மணியின் மரணம் 

    மணி இறந்து விட்டதாக காலை என்னை எழுப்பியது. விபத்தில் இறந்து விட்டானாம். அவன் இத்தோடு நான்காவது தடவை இறந்து போகிறான். இந்த முறை உண்மையாக. மணி. முழுப்பெயர் மணிமாறன். நல்ல உயரம். நல்ல நிறம். அழகான மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை. மனைவியும் ஏதோவொரு வேலை பார்க்கிறார்கள். மணியிடம் சரளமாய் வெளிப்படும் ஆங்கிலம் ஆச்சர்யப்படுத்தும். ஒரு பிரபல வங்கியில் பணி. ஆனால் அடிக்கடி எல்லோரிடமும் அவன்தான் கடன் கேட்பான். பொழுதுபோக்கு குடிப்பது. மேலும் போரடித்தால் விழுவது. எப்பொழுதாவது என்னை வழியில் நிறுத்தி பேசுவான். நான் சினிமாவில் வேலை பார்ப்பதால் பேச்சுக்கள் அது குறித்து தொடங்கி பிறகு அவன் எதற்காக நிறுத்தினானோ அதில் வந்து முடியும்.
    mani
    “என்ன ஸார் ஒரு கட்டிங்கு ஏற்பாடு பண்ணக்கூடாதா..” என்பான்.

    “நிச்சயமா.. எனக்குத் தெரிஞ்ச நண்பந்தான் பக்கத்தில சலூன் வச்சிருக்கான்.. வாங்க போலாம்..” என்பேன்.

    “அட போங்க ஸார்.. “ என்று சிரித்தபடி நகர்ந்து போவான்.

    மணியின் மகள் சமீபத்தில் பெரிய மனுஷியாக இனிமேல் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ள வீட்டில் விவாதம் நடந்ததாம். மணி உறுதியாக தலையசைத்தாக நம்பத் தகுந்த இடத்திலிருந்து தகவல் வந்தது. உடனே ஒரு சாமிக்கு வேண்டி கழுத்தில் மாலையுடன் அவனை பார்க்க முடிந்தது. பேச்சில் இன்னும் மரியாதையும் அன்பும் தெரிந்தது. அதற்கெல்லாம் ஆயுள் அற்பநாட்கள்தான். அதற்கு பிறகு ஒரு வாரத்திலேயே குடித்த நிலையிலேயே இருந்தான். நான் சிரித்தபடி அவனை பார்த்தேன். அவன் கழுத்தில் அந்த மாலை இல்லை. அவன் வழக்கம் போல் என்னிடம் நின்று பேசிவிட்டு நகர்ந்தான்.

    இதுதான் மணி. அடிக்கடி எங்காவது குடித்துவிட்டு விழுந்து விட்டதாக தகவல் வரும். இறந்து விட்டதாகவும் பேசிக்கொள்வார்கள். அவனது அம்மாவும் மனைவியும் தலைதெறிக்க ஓடுவார்கள். அவனது குழந்தையும் அழுதபடி ஓடிப்போய் கேட் அருகே நின்று அவர்கள் வரும்வரை நின்று அழும். ஒரு ஆட்டோவில் போட்டு மணியை தூக்கி வருவார்கள். உயிர் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவு நினைவு தப்பியிருப்பான். அவனது கனத்த உடம்பை இறக்கமுடியாமல் உதவிக்கு ஆள் கூப்பிடுவார்கள். நானும் போய் இருக்கிறேன். இந்த அனுபவங்கள் அடிக்கடி நடக்க எல்லோருக்கும் பழகிவிட்டது. இவனுக்கான விஷயங்களை அனைவரும் பதட்டமின்றி பார்த்தோம். ஒரு முறை கீழே விழுந்து மரண தருவாயில் ஆஸ்பிடலில் அனுமதிக்கப் பட்டு காப்பாற்றப்பட்டான். செய்த ஆபரேசனில் உடம்பெங்கும் பிளேட்டுகள் வைக்கப்பட்டது. இரும்பு கடையில இவனை விலைக்கு போட்ட நல்ல காசு கிடைக்கும் என்று ஜோக்கடிக்கும் அளவுக்கு பிளேட்டுகள். பல லட்சம் செலவானது. பிழைத்து வந்த போது அவன் நடை முற்றிலும் மாறி இருந்தது. அடிபட்ட தழும்புகளில் முகம் லட்சணம் போயிருந்தது. அவன் பேச்சிலும் தெளிவில்லை. இனி ஆளே மாறி விடுவான் என்று நானும் உறுதியாய் நம்பினேன்.

    அதற்கு பிறகு அவர்கள் இருந்த வீடு ராசி இல்லையேன வேறு வீடு மாறி போனார்கள். ஆனால் அவன் மாறவில்லை. குடித்து கண்கள் சிவந்த நிலையில் அவனை மீண்டும் பார்த்தேன். எல்லாம் அடிபட்டால் திருந்துவிடுவார்கள் என்பார்கள். பல முறை அடிபட்டும் அவன் திருந்தவில்லை. திருந்துகிற அளவிற்கு அவன் அடிபடவில்லையோ என்று எனக்கு தோன்றியது. நான் பேசவில்லை. பேச பிடிக்கவில்லை. நகர்ந்து போனேன். அவன் மனைவி கோபித்துக்கொண்டு அவள் அம்மா வீட்டிற்கு போனார்களாம். அவர்கள் வீட்டில் அதைவிட பிரச்சனை போலும் உடனே திரும்பி வந்துவிட்டார்கள். எல்லாம் செய்தியாய் கேட்டுக்கொண்டேன்.

    சில நாட்களுக்கு பிறகு மணி இறந்து விட்டதாக செய்தி என்னை எழுப்பியது. அதுவும் நேற்று இரவு மழை நேரத்தில் ராயப்பேட்டை ஆஸ்பிடல் அருகில் ஒரு கவர்மெண்ட் பஸ்ஸில் அடிபட்டும் அவன் பிழைக்கவில்லை. இறந்து விட்டானாம். எனக்கு வழக்கம் போல் எந்த பதற்றமும் இல்லை. அவனை பற்றிய மோசமான நினைவுகள் மட்டும் என்னை மீறி வந்து போனது. என்ன சொல்வது?

    குடிப்பது மட்டுமே வாழ்க்கையாய் இருந்து பல முறை அடிப்பட்டு திருந்தாமல் மீண்டும் அதே நிலையில் பஸ்ஸில் அடிப்பட்டு இறந்ததை எப்படி விபத்தென்று சொல்ல முடியும்? என்னை பொறுத்தவரையில் மணி செய்துக்கொண்டது தற்கொலை.!

    - சரசுராம்

     
    • என். சொக்கன் 12:36 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சரசுராம் – குறிப்பாக அந்தக் கடைசி வரி!

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • சித்ரன் 4:00 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //செய்த ஆபரேசனில் உடம்பெங்கும் பிளேட்டுகள் வைக்கப்பட்டது. இரும்பு கடையில இவனை விலைக்கு போட்ட நல்ல காசு கிடைக்கும் என்று ஜோக்கடிக்கும் அளவுக்கு பிளேட்டுகள்.//
      :-)

    • கவிதா 6:36 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பாசிட்டிவ்வான உங்கள் கதைகளைப் படித்து விட்டு இப்படி ஒரு எதிர்மறை பதிவைப் பார்க்க அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது கதை அல்ல; நிஜம் என்பது புரிகிறது.

    • REKHA RAGHAVAN 7:09 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இதே நிலை என் எழுத்தாளர் நண்பருக்கும் ஏற்பட்டது. அனால் அவர் விபத்தை சந்திக்காமல் உடல் உறுப்புகள் செயலிழந்து போய் மரணத்தை தழுவினார். அவருடைய மனைவி ” அண்ணா நீங்களாவது சொல்லி திருத்தக்கூடாதா?” என்று ஒரு முறை கேட்டது இன்னும் என் மனதிலிருந்து நீங்காமல் உள்ளது. குடி குடியைக் கெடுக்கும் என்பது நிஜம்.

      ரேகா ராகவன்.

      • சரசுராம் 8:37 மு.பகல் on செப்டம்பர் 4, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி ரேகா ராகவன். என்ன செய்வது ஞானோதயங்கள் அதிகபட்சம், பாதித்தவர்களை விட பார்வையாளனுக்கே அதிகம் கிடைக்கிறது.

    • SUBHASHREE 3:29 பிற்பகல் on செப்டம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      too good..and touching..i can understand in mani’s house what they have undergone with mani..because..i have seen how people behave when they are drunk..and how it disturbs their family especially small childern and old parents..its pathetic…hmm…its individual’s decision to come out of it and stick to right path..THEEDUM NANDRUM PERAR THARA VAARAA…how true..

c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்