Updates from அக்டோபர், 2009 Hide threads | Keyboard Shortcuts

  • மில்லியன் காலத்துப் பயிர் 

    சத்யராஜ்குமார் 6:31 pm on October 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    கிழிந்த ஆடைகளுடன் அலங்கோலமாய் நின்றிருந்தாள்.

    அழக் கூட திராணி இல்லாமல் வற்றிப் போயிருந்தன கண்கள். உடம்பு பூராவும் சிகரட்டால் சுட்டதைப் போல வடுக்கள்.

    உடைந்து போன குரலில் சொன்னாள். ”அவனோட நான் பட்ட கஷ்டம் போதும்ப்பா. இனியும் என்னால பொறுமையா இருக்க முடியாது.”

    ‘பொறுத்துப் போம்மா.’ என்னும் அறிவுரை இனி செல்லுபடியாகுமா என்று சந்தேகமாய் இருந்தது.
    pencil_photos08_thumb
    கல்யாண நாள் இன்னும் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது. எவ்வளவு அழகாய் இருந்தாள். ஜரிகை நெளியும் பச்சைப் பட்டுப்புடவை உடம்பை சுற்றியிருக்க, மேனியெங்கும் மின்னும் ஆபரணம். சூரிய ஜொலிப்புடன் புன்னகை.

    இன்றைக்கு காய்ந்த கருவாடு போல பொலிவில்லாமல் நிற்கிறாள்.

    சே! புத்தியில்லாத அந்த பேராசைக்கார மனிதனுக்கு இவளை தாரை வார்த்திருக்கக் கூடாது.

    இவளை சீண்டி சீண்டி இன்றைக்கு ஒரு மூலையில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறான்.

    ”அம்மா, இன்னும் ஒரே ஒரு தடவை…”

    சொல்லி முடிக்கும் முன் அவள் வெடித்தாள். ”இதோட எத்தனை ஒரு தடவை ஆயிருச்சு? அவன் திருந்துவான்னு நம்பறிங்களா?”

    அவளுக்குள் தகிக்கும் கோபத்தின் உஷ்ணம் அனலாக மூச்சுக் காற்றில் வெளிப்பட்டது.

    அவ்வப்போது அவன் கொடுமை தாங்காமல் மிக லேசாய் அவள் வெளிப்படுத்தின சமிக்ஞைகள் கூட அவனுக்கு உறைத்த மாதிரி தெரியவில்லை.

    மவுனமாய் தலையசைத்தேன். ”இது நாள் வரை உன்னை பொறுமையா இருக்கச் சொன்னதுக்கு என்னை மன்னிச்சிடும்மா. அனுபவத்திலிருந்து பாடம் கத்துக்காதவனை காப்பாத்தி என்ன பிரயோஜனம்? உன் இஷ்டம் போல செய்.”

    பூமிகா வேகமாக திரும்பினாள். அவள் கோபத்தின் வெளிப்பாடு மாபெரும் பூகம்பமா அல்லது கடலைப் புரட்டிப் போடும் சுனாமியா என்று நான் கடவுளாயினும் இப்போது சொல்ல இயலாது.

    - சத்யராஜ்குமார்

    [உருவகக் கதை]


    சர்வேசன்500 – நச்னு ஒரு கதை 2009 – போட்டிக்காக எழுதிய கதை


     
    • REKHA RAGHAVAN 8:06 பிற்பகல் on அக்டோபர் 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கவிதை பாணியில் அருமையான கதை. சபாஷ் சரியான போட்டி! (கதைப்
      போட்டிக்கு).
      ரேகா ராகவன்.

    • சரசு ராம் 8:27 மு.பகல் on நவம்பர் 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      இந்த பூமியை மக்கள் படுத்தும் பாட்டைவழக்கமான கதை பாணியிலிருந்து விலகி சற்று வித்தியாசமான முயற்சியில் சொன்னதற்கு பாராட்டுக்கள்.

  • டூ லேட் 

    சத்யராஜ்குமார் 9:50 pm on September 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: சந்திப்பு

    சமீபத்தில்தான் என் கதைகளைப் படிக்க ஆரம்பித்த செந்தில் என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று விரும்பினார். எழுத்தாளர் சித்ரனுடன் பல வருஷங்களுக்கு முன் வேலை பார்த்தவர். தற்சமயம் நியூஜெர்சியில் இருக்கிறார்.

    வயலினிஸ்ட். பரத நாட்டிய கலைஞர். பல முறை அரங்கேறியிருக்கிறார். எனக்கும் அவரை சந்தித்துப் பேசும் ஆர்வமிருந்தது. அவருடைய கலை அனுபவங்கள் குறித்து விரிவாக பேசலாம் என்று எண்ணியிருந்தேன்.

    சம்பவ இடத்தில் எடுத்த படம்

    சம்பவ இடத்தில் எடுத்த படம்


    சென்ற சனிக்கிழமை காலையில் பத்து மணிக்கு என் வீட்டில் சந்திக்கலாம் என்று முடிவாகியிருந்தது. ஆறு மணிக்கு நியூஜெர்சியில் கிளம்பினார். புறப்பட்ட போது நன்றாக இருந்த வானிலை பத்தே நிமிஷத்தில் தலை கீழாக மாறி விட்டது. பயங்கர மழை.

    வழியில் ஒரு ப்ரிட்ஜுக்கடியில் தேங்கியிருந்த தண்ணீரில் மாட்டிக்கொண்டார். 911 அவசர கால சேவையை அழைத்தும் புண்ணியமில்லை. சில மணி நேர அவஸ்தைக்குப் பின் செல்போன், பர்ஸ் போன்ற முக்கிய பொருட்களை பிளாஸ்டிக் பையில் அள்ளிக் கொண்டு ஜன்னல் கண்ணாடியை இறக்கி தண்ணீருக்குள் பாய்ந்தார். நீந்திக் கரை சேர்ந்திருக்கிறார்.

    அதன்பின் ஒரு வாடகைக் கார் பிடித்து இரண்டு மணிக்கு என்னை வந்து சந்தித்தவர், இத்தனை களேபரத்தையும் விவரித்த போது ஒரு த்ரில்லர் படிக்கிற மாதிரி இருந்தது. அவசரகால சேவையை அழைத்தால் போதும், சூப்பர்மேன் போல உடனே யாரும் பறந்து வந்து நம்மைக் காப்பாற்றி விட மாட்டார்கள் என்ற உண்மை விளங்கியது. கொஞ்சமேனும் கொஞ்சம் நீச்சல் தெரிந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியமென்றும் புரிந்தது.

    வழக்கம் போல இந்தச் சம்பவத்தை சுற்றி ஒரு கற்பனை கோட்டிங் அடித்து ‘டூ லேட்’ என்று ஒரு சிறுகதை எழுதி விட்டேன். இந்த சிறுகதை ஏனோ எனக்கே கொஞ்சம் பிடித்திருந்தது. உங்களுக்கு எப்படியோ!


    டூ லேட்

    சிறுகதை

    ~ சத்யராஜ்குமார் ~


    அவர் என்னை நம்பினாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் நடந்த உண்மைகளை சொல்லித்தானே ஆக வேண்டும்.

    வெட்கமாயிருந்தது. அமெரிக்கா வந்த பின்னும் இண்டியன் பங்ச்சுவாலிட்டி. ஹெட்மாஸ்டர் தங்கதுரையின் அறுக்கும் பார்வையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    யார்க், பென்சில்வேனியாவில் காலை பத்து மணி்க்கு அவரை சந்திப்பதாக இருந்தது. இப்போது மணி மத்தியானம் இரண்டு.

    ”இன்னும் திருந்தலையா நீ?”

    ….

    தொடர்ந்து படிக்க…


     
    • பினாத்தல் சுரேஷ் 10:03 பிற்பகல் on செப்டம்பர் 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சம்பவத்தை இங்கே சொல்லிவிட்டீர்கள், கதை அதையே ரிப்பீட் செய்வது போரடித்தது, கடைசி வரி வரை!

    • இலவசக்கொத்தனார் 10:34 பிற்பகல் on செப்டம்பர் 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      தலைவர் பெனாத்தல் சொன்னதுக்கு ரிப்பீட்டே!!

      பதில் என்னும் சுட்டி மேல இருக்கு. படிச்ச பின் சொடுக்க வசதியா கீழ இருக்க வேண்டாமோ.

      • சத்யராஜ்குமார் 10:43 பிற்பகல் on செப்டம்பர் 5, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        பெனாத்தல் சொன்னது குட் பாயிண்ட். அதற்கப்புறம் ஏகதேச வரிகளை பதிவிலிருந்து நீக்கி விட்டேன். :-)

        /பதில் என்னும் சுட்டி மேல இருக்கு./
        சரசுராம், சித்ரன் என்று எல்லோரும் இங்கே எழுதுவதால் எந்தப் பதிவை யார் எழுதினார்கள் என தெளிவாய்க் காட்டும் இந்த டெம்ப்ளேட் வசதியாக இருக்கிறது.

        • சித்ரன் 11:22 மு.பகல் on செப்டம்பர் 6, 2009 நிரந்தர பந்தம்

          இனிமேல், ஒரு குறிப்பிட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறுகதையின் முன்னுரையாக/அறிமுகமாக அந்த நிகழ்வு என்ன என்று சொல்லாமல் ஒரு சஸ்பென்ஸோடு லிங்க் கொடுத்தால் சரியாக வருமா என்று பாருங்களேன். அப்புறமாய் கதையைப் படிக்கும்போது புதிதாக ஒரு சுவாரஸ்யம் வரும்.

          கதையின் முடிவு எதிர்ப்பார்க்க முடியாமல் வழக்கமான உங்கள் டச்.

          சித்ரன்
          http://chithran.com

        • சத்யராஜ்குமார் 2:53 பிற்பகல் on செப்டம்பர் 8, 2009 நிரந்தர பந்தம்

          சித்ரன் , அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் சில சமயம் எதிர்மறையான உண்மை சம்பவங்களை கதையாக எழுதும்போது நிகழ்வில் சம்பந்தப்பட்டவர் மனம் வருந்தாதிருக்க சில விளக்கங்கள் அளிக்க முயல்கையில் சறுக்கி விடுகிறது. ‘பாண்டேஜ்’ சிறுகதை எழுதும்போதும் இது நேர்ந்தது. தவிர்க்க முயல்கிறேன்.

    • REKHA RAGHAVAN 3:15 மு.பகல் on செப்டம்பர் 6, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நிகழ்வை கேட்டு அதை வேறு களத்தில் கொண்டு சென்று உங்கள் பாணியில் நச்சுன்னு முடிச்சிருப்பது மிகவும் அருமை.

      ரேகா ராகவன்.

    • என். சொக்கன் 1:16 மு.பகல் on செப்டம்பர் 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு ‘நச்’ கடைசி வரித் திருப்பம் – அசத்திட்டீங்க சத்யராஜ்குமார்!

      ‘டூ லேட்’ங்கற தலைப்புக்கு இப்போ வேறொரு அர்த்தம் தோணுது – ரொம்ப நன்றாக எழுதப்பட்ட கதை, பாராட்டுகள் :)

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

      • K.B.Janarthanan 4:51 மு.பகல் on செப்டம்பர் 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        ‘கொஞ்சம் நிஜம்’ உண்மையிலேயே கொஞ்சம் அதிர்ச்சி தான். ‘கொஞ்சம் கதை’ அதைத் தூக்கிச் சாப்பிடுவதாக இருந்தது. பிசகாத வினாடி பிரம்பு வாத்தியாரிடம் வசமாக மாட்டிக் கொள்வதாக ‘பின்னி’ட்டீங்க சார்! Too good! – கே. பி. ஜனார்த்தனன்

        • சத்யராஜ்குமார் 6:01 மு.பகல் on செப்டம்பர் 7, 2009 நிரந்தர பந்தம்

          தங்கள் மின்னஞ்சலுக்கும் டூ லேட் கதை பற்றிய கருத்துக்கும் நன்றி. உங்கள் வார்த்தை பிரயோகங்களை ரசித்தேன். :-)

      • சத்யராஜ்குமார் 6:02 மு.பகல் on செப்டம்பர் 7, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சொக்கன், நன்றி. சித்ரனும் தலைப்புக்கு வேறு அர்த்தங்கள் கண்டு பிடித்துச் சொன்னார் :-)

    • Sentil 11:03 மு.பகல் on செப்டம்பர் 8, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Thanks for another good story. Your title and story ending reminded me, the kovai traffic campaign during 90’s.
      “Better to be Mr. Late than being Late Mr.”

    • தகடூர் கோபி 7:55 மு.பகல் on செப்டம்பர் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கலக்கீட்டிங்க! கதை சூப்பர்…

      உங்க கிட்ட இருந்து த்ரில்லர் கதை எனக்கு ரொம்ப புதுசு…

      வினையூக்கி எழுதிய பேய் கதைகள் அருமையா இருக்கும். நேரமிருந்தா படிச்சுப் பாருங்க.

      • சத்யராஜ்குமார் 6:35 மு.பகல் on செப்டம்பர் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி கோபி. நான் ஸ்பெஷலைஸ் (?!) பண்ணிட்டிருந்ததே த்ரில்லர்ஸ் மற்றும் க்ரைம் கதைகள்தான் :-) அவை தீண்டத்தகாத வடிவங்களாய் பார்க்கப்படுவதால் அவ்வளவாக வலையேற்றவில்லை. இப்போது தெனாலியில் எழுதிவரும் SMS க்ரைம் தொடரை நேரமிருந்தால் பாருங்கள்.

        • தகடூர் கோபி 6:45 மு.பகல் on செப்டம்பர் 14, 2009 நிரந்தர பந்தம்

          ஓ..! நான் உங்க அமெரிக்க வாழ்வு சார் கதைகளை மட்டுமே வலையில் படித்ததால் உங்க ஸ்பெஷலைசேஷன் என்னன்னு தெரியாம போச்சி…

          எனக்கு த்ரில்லர்னா பயம் என்பதால் அதிகமாய் த்ரில்லர்/க்ரைம் கதைகள் படிக்கறதில்லை. திரைப்படங்கள் கூட Happy Ending ன்னா மட்டும் தான் பார்ப்பேன். :-)

          உங்கள் தெனாலி SMS தொடர் சுட்டியை கூகிளாண்டவர் துணையுடன் தேடிப் பிடித்தேன்: http://www.thenaali.com/thenaali.aspx?A=984 இது வரைக்குமே 27 பகுதிகளாயிடுச்சா! கொஞ்சம் கொஞ்சமா படிச்சி முடிச்சிடுறேன்.

          SMS மூலம் எழுதுவது என்பது புதிய முயற்சிதான்.

          தப்பா நினைக்கலைன்னா ஒரு கேள்வி.. செல்பேசி மூலம் பதிவிடுவது சாத்தியம் எனத் தெரியும். ஆனால் தமிழிலேயே எழுதி SMS அனுப்பிடுவீங்களா? இல்லை ஆங்கிலத்தில் நீங்க அனுப்புவதை தமிழில் மாற்றி பதிவிடுகிறார்களா?

        • சத்யராஜ்குமார் 5:36 மு.பகல் on செப்டம்பர் 15, 2009 நிரந்தர பந்தம்

          இல்லை கோபி, செல்போனில் அக்கதையை வெளியிடுவதாக சொல்லப்பட்டது.

  • திண்ணை 

    சத்யராஜ்குமார் 11:19 am on August 30, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    சில அறிமுகங்கள் நம் வாழ்க்கையை வெகுவாக மாற்றி விடும்.

    நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் பொறுப்பாளர் ஆனந்த் முருகானந்தம் எனக்கு அப்படித்தான். நினைவு தெரிந்த நாள் முதல் அவர் அமெரிக்காவில் இருக்கிறார். முப்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு இந்திய விஜயத்தின் போது ராத்திரி பனிரெண்டு மணிக்கு எங்கள் வீட்டுக் கதவைத் தட்டியதும், அப்போது புதிதாய் வாங்கியிருந்த வெட் கிரைண்டரை பார்த்து, “பரவாயில்லையே… இந்திய சமையலறைகளும் இயந்திர மயமாகி வருதே.” என்று வியப்பை தெரிவித்து விட்டுப் போனது சின்ன வயசு ஞாபகங்களில் ஒன்றாக இன்னும் மனதில் இருக்கிறது.

    அவர் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும், “போய் பார்த்து பேசிட்டு வா” என்று சொல்லி பக்கத்து ஊரிலிருக்கும் அவர் வீட்டுக்கு அம்மா என்னை அனுப்பி வைப்பாள். எனக்கு சில சமயம் கொஞ்சம் எரிச்சலாக கூட இருக்கும். பத்து பதினைந்து நாள் விடுமுறையில் வந்திருக்கும் அவரைப் பார்க்க பல பேர் வருவார்கள், போவார்கள். அங்கே என்னைப் போல பொடியனுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது. இதெல்லாம் அந்த விவரம் தெரியாத வயதில் நமக்குள் தோன்றும் எண்ணங்களே தவிர பக்கத்தில் உட்கார்ந்து பத்து நிமிஷமாவது அவர் பேசாமல் இருக்க மாட்டார். விடை பெறும்போது மறக்காமல் கொஞ்சம் சாக்லேட்டுகளும், சின்ன பரிசுப் பொருளும் தந்தனுப்புவார்.

    தெரிந்தோ தெரியாமலோ அந்த சந்திப்புகள் ஏற்படுத்திய பாதிப்பு ஏதோ ஒரு வெளிநாட்டில் என்றாவது வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையை மனதின் ஆழத்தில் ஒரு நீரோட்டம் போல ஓட விட்டிருக்கிறது. அடி மனதின் ஆசைகள்தான் கிடைக்கிற சந்தர்ப்பங்களை முழு வேகத்தில் பயன்படுத்திக் கொள்ளும் உத்வேகத்தை அளிக்கின்றன.

    ஆறேழு வருஷங்களுக்கு முன்பு நியூஜெர்ஸியில் அவர் வீட்டுக்குப் பக்கத்திலேயே வந்து சேர்ந்தது அதிசயம்தான். அப்போது என்னிடம் கார் இல்லை என்பதால் அவரே வந்து வீட்டுக்கு அழைத்துப் போனார். அன்றுதான் திண்ணை என்ற மின்னிதழை எனக்கு அறிமுகப்படுத்தினார். “என் நண்பர் ராஜாராம்தான் இதை நடத்தறார். இதிலே கதை எழுதறியா?”

    திண்ணையின் ஓரிரு இதழ்களை படித்துப் பார்த்தவன் அதிலிருந்த கட்டுரைகளையும், எழுதியவர்களின் பெயர்களையும் பார்த்து மிரண்டு போனேன். சிற்றிதழ்வாதிகளுக்கு இருப்பது போலவே வெகுஜன இதழ்களில் எழுதி வருபவர்களுக்கும் ஒருவகை சிற்றிதழ் அலர்ஜி உண்டு. அதற்கு நானும் விதிவிலக்கல்ல. குமுதம், விகடன், கல்கி போன்ற வாரப் பத்திரிகைகள் தவிர வேறெதிலும் நான் அதுவரை கதைகள் எழுதியதில்லை. ச. மஞ்சுளாதேவி நடத்தி வந்த ‘வேறு திசைகள்’ என்ற பத்திரிகை மட்டும் ஒரே ஒரு விதிவிலக்கு.

    ஆனந்த் அவர்களிடம் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. அதற்கப்புறம் சில வருஷங்களுக்குப் பிறகு ஒரு முறை சிந்தனை வட்டம் விழாவுக்குப் போன போது, ஆனந்த் வீட்டில் தங்க நேர்ந்தது. திரு ராஜாராம் அவர்களும் அன்று அங்கே தங்கியிருந்தார். நான் எழுதுவேன் என்று தெரிந்து, “திண்ணைக்கு அனுப்புங்க.” என்று அவரும் சொன்னார்.

    “இல்லைங்க நான் குமுதத்தில் எல்லாம் எழுதிட்டிருந்தவன். ரொம்ப இலக்கியத்தரமா எழுத வராது.” என்றேன்.

    ”அப்படி எல்லாம் இல்லை. நீங்க அனுப்புங்க.” என்றார்.

    துரதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் நான் எழுதுவது மிகவும் குறைந்து போயிருந்ததால் அப்போது திண்ணைக்கு அனுப்ப முடியவில்லை. வேறொரு சமயம் மறுபடியும் திரு. ராஜாராம் அவர்களை ஆனந்த் அவர்களின் வீட்டில் சந்திக்க நேர்ந்தது. கதைகளைப் பற்றி பேச்சு வந்த போது, “நான் கேட்டேன். நீங்கதான் அனுப்பவே இல்லை.” என்றார்.

    அப்போதிருந்தே எனக்கு உறுத்திக் கொண்டே இருந்ததால், பத்து நாளுக்கு முன்னால் மிச்சம் என்ற சிறுகதையை அனுப்பி வைத்தேன். திண்ணையில் இந்த வாரம் (28 ஆகஸ்ட் 2009) வெளிவந்துள்ளது.


    மிச்சம்
    சிறுகதை
    ~ சத்யராஜ்குமார் ~


    சுருக்கென்று ஒரு முள் குத்தியதைப் போல கேள்வி. சிரித்துக் கொண்டேதான் கேட்டான். இவனைப் போன்ற அமெரிக்கனுக்கு அது கை வந்த கலை.

    ”ஏன் இப்படி இருக்கிங்க?”

    வாஷிங்டன் டல்லஸ் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி சோதனைக்காக நீண்ட வரிசையில் நின்றிருந்தேன். மூன்று வருஷங்கள் கழித்து இந்தியா போகிற குறுகுறுப்பு மனசுக்குள் ஜில்லென்று பரவியிருந்தது.

    ”எப்படி இருக்கோம்?”

    ….

    மேலும் படிக்க…


     
    • என். சொக்கன் 12:00 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      :) )))))))))) அந்தக் கடைசி வரி சுய எள்ளலைவிட, அமெரிக்கனின் விமர்சனங்கள் ரொம்பப் பிடிச்சிருந்தது – இந்த ‘தனி’க் குணம் அமெரிக்காவில்மட்டுமில்லை, பெங்களூரிலும் உண்டு :) என்ன, இந்தியனுக்குபதில் இங்கே தமிழன், அவ்ளோதான்!

      சுஜாதாவின் ‘மீண்டும் மத்யமர் கதைகள்’ படிச்சிருக்கீங்களா? அந்த வரிசையில முதல் கதை – வருஷாவருஷம் அமெரிக்காவிலிருந்து செம அவஸ்தைப்பட்டு இங்கே சீஸனுக்கு வந்து போகும் ஒரு பாடகரைப்பற்றியது, அந்தக் கதையின் கடைசி வரியும் இப்படிதான் ‘நச்’சுன்னு முடியும் :)

      அழகான கதை, நன்றி சத்யராஜ்குமார்!

      - என். சொக்கன்,
      பெங்களூர்.

    • REKHA RAGHAVAN 12:17 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நீங்கள் போனில் சொன்ன உடனே தேடித் பிடித்து படித்துவிட்டேன். நிகழ்வை நேரில் பார்ப்பது போல வாசகனை கொண்டு வருகிறீர்கள் பாருங்கள் அதுதான் SRK!

      ரேகா ராகவன்

    • சித்ரன் 8:20 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கதையின் முற்பாதியில் டேவிட்டினுடன் நடக்கும் உரையாடல்களில் நீங்கள் சொல்லிவருகிற விஷயங்கள். இந்தியர்கள் எங்கு சென்றாலும் எப்போதும் போல கூட்டமாக ஆனால் அதே சமயம் ஒருவருக்கொருவர் நெருக்கமாகவும் அக்கறை கொள்பவர்களாகவும் உருவகப்படுத்தியதும், அதைப் பார்த்து டேவிட் புலம்புவது கூட அவனுக்கிருக்கும் பொறாமையால்தான் என்பதை பிரதான கதாபாத்திரம் வழியாகச் சொல்வதும் ஆக இந்தப் பகுதி நன்றாக வந்திருக்கிறது.

      //ஒவ்வொரு இந்தியனும் ஒரு இந்தியாவை இரும்பு வளையமா சுத்திகிட்டு அலையறிங்க//

      இந்த வரிகள் அருமை.

      • சத்யராஜ்குமார் 11:17 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி சித்ரன். கதையை படித்து விட்டு ஒரு வாசகர் இந்தியர்களை (குறிப்பாக இந்து மதத்தவர்களை) தாழ்த்தி எழுதியிருப்பதாக மின்னஞ்சலில் சிறிது காரத்துடன் குறிப்பிட்டிருந்தார். அது தவறான புரிதலாகும். சொக்கன் குறிப்பிட்டதைப் போல கதையில் எந்த race வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். இன்னொரு விஷயம் நம்மைப் பற்றி நமக்குள் நாம் எவ்வளவு உயர்வாக பேசிக் கொண்டாலும் மற்றவர்கள் பார்வையையும், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற நிஜத்தையும் மாற்ற முடியாது. அதற்கடுத்தபடியாக என்னைச் சுற்றி நடப்பதையும், நான் கேட்பதையும், பார்ப்பதையும் எழுதும்போது அது என்/நம் அடையாளத்தோடு இருப்பதை தவிர்க்க இயலாது. அது யார் மனதையும் புண்படுத்துமானால் மன்னிக்க வேண்டுகிறேன்!

    • சுபமூகா 9:59 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சூப்பர்!

      வழக்கமான அசத்துகிற நடை :-)

      பாராட்டுகள்.

      அன்புடன்,
      சுபமூகா

    • Ravishankar 10:04 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      கதை நல்லா இருக்கு சத்யா.

    • சுதாகர் 10:13 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      தங்க செயின், பெல்ட் போன்றவற்றை கழற்றி ஸ்கேன் செய்யவேண்டும்னு எல்லா செக் பாய்ண்ட்-லயும் போட்டிருப்பாங்க. இந்த மறதி எல்லோருக்கும் வரும்.

      நானும் அரைஞாண் கயிறு, மெட்டல் தாயத்து எல்லாம் போட்டிருக்கேன். முக்கியமான நாடுகளுக்கும் (இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய்) பல தடவ போயிட்டு வந்திருக்கேன். எங்கயுமே எனக்கு அலாரம் அடிச்சது இல்ல…

      உங்க லாஜிக் படி, அந்த மெயின் கதாபாத்திரம் அமெரிக்கா வந்தப்பவும், அவனுக்கு அலாரம் அடிச்சிருக்கணுமே?

      • சத்யராஜ்குமார் 10:39 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சுதாகர், நியாயமான கேள்விகள்! கதை எழுதும்போது இதைப் பற்றி யோசித்தேன். இரண்டு காரணங்கள் அதை ஜஸ்டிபை செய்வதாகப் பட்டது.

        1) முன்னமே அலாரம் அடித்திருக்கிறதா என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அவஸ்தைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரிய மிச்சங்களை சுமப்பது பற்றி அந்த பாத்திரத்துக்கு கவலையில்லை.

        2) ஸ்கேனர்கள் டெக்னாலஜி நாளுக்கு நாள் முன்னேறுபவை, அல்லது சந்தர்ப்பத்துக்கேற்ப முடுக்கி விடப்படுபவை. அவன் முன்னர் பயணித்த போதிருந்த அலர்ட் லெவல் வேறாக இருக்கலாம்.

    • சுதாகர் 10:15 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      உங்க கதயோட நோக்கம், உள்ளர்த்தம் புரியுது.. ஆனாலும், இந்த லாஜிக் எனக்கு இடிக்குது… அதான் கேட்டேன்! :)

      • சத்யராஜ்குமார் 10:39 மு.பகல் on ஆகஸ்ட் 31, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி. கண்டிப்பாக இதெல்லாம் கேட்க வேண்டும். :-)

        • SnapJudge 9:56 பிற்பகல் on செப்டம்பர் 3, 2009 நிரந்தர பந்தம்

          கதை என்றளவில் ரசித்துவிட்டு செல் என்றால், பகிர்விற்கு நன்றிகளும் வணக்கங்களும். :)
          ————
          முன்பின் தெரியாத அமெரிக்கர் இரண்டைக் குறித்துதான் பிறரோடு நெடு நேரம் அளவளாவுவார். 1. தட்பவெட்பம்; 2. விளையாட்டு போட்டி

          அதை மீறி யதார்த்தமின்றி இந்தக் கதை விரிகிறது. தன்னுடனேயே பேசிக் கொள்கிறவகை என்றாலோ, நெடுங்காலம் அறிமுகமான கீழ்வீட்டுக்காரர்களோடு சொல்லாடுவது என்றாலோ இந்த மாதிரி வரிகளை நெருடாமல் வாசிக்கலாம்:

          —”உங்களுக்கே தெரியாத உங்க கலாசாரத்தை உங்க குழந்தைகளுக்கு வீட்டுக்குள்ளே சொல்லித்தர முடியாம வெளியே அனுப்பி கத்து தர முயற்சிப்பதுதான் உறுத்துது.” —

          இதெல்லாம் ரொம்ப அதீதம். திண்ணை அத்தைகளும் தாத்தாக்களும் மட்டுமே இவ்வகை உரிமையோடு தீர்ப்பெழுதித் தருவார்கள்.

          Again, இந்த மாதிரி நிகழ்வு நிஜத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இயல்பாகவோ மனதில் சென்று சிம்மாசனம் அமைக்கும் விதமாகவோ நீண்ட காலம் அசை போடக் கூடிய வினாக்களை தீர்க்கமாக எழுப்பும் விதமாகவோ இல்லை.

        • சத்யராஜ்குமார் 10:06 பிற்பகல் on செப்டம்பர் 3, 2009 நிரந்தர பந்தம்

          //கதை என்றளவில் ரசித்துவிட்டு செல் என்றால்,//
          அப்படிச் சொல்ல முடியாது. :-) கொஞ்சம் அலசி ஆராயவோ சுட்டிக் காட்டவுமோதானே இந்த இடம் இருக்கிறது.

          கதையில் நீங்கள் குறிப்பிட்ட யதார்த்தம் மிஸ் ஆகிறதை ஒப்புக் கொள்கிறேன். இதில் வரும் அமெரிக்கனின் உரையாடல்கள் பெரும்பாலும் நெருக்கமான அமெரிக்கர்களிடமிருந்து வெளிப்பட்டவை. கதையை வேறு பாத்திரங்களுடன் அமைத்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது. அல்லது மனங்களின் உரையாடலாகவும் வைத்திருக்கலாம்.

          விமர்சனத்துக்கு நன்றி.

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
திருத்து
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
வேண்டாம்