RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • சத்யராஜ்குமார் 8:31 pm on September 14, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 2 

    சாவி, இதயம் போன்ற பத்திரிகைகளில் என் சிறுகதைகள் வெளிவர ஆரம்பித்த சமயம். நான் கோவையில் சேரன் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கிருந்த என் உறவினர் ஒருவர் நான் கதைகள் எழுதுவதை அறிந்து, ‘உங்களுக்கு பூங்கோதை தெரியுமா?’ என்று கேட்டார். பத்திரிகையாளர். சிறுகதைகள், புத்தகங்களும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் தொலைக்காட்சிகளில் தோன்றி குடும்ப நல ஆலோசனைகள் வழங்குவதைப் பார்த்ததுண்டு.

    ‘தெரியும்.’

    ‘அவரை சந்திச்சுப் பேச இஷ்டமிருந்தா சொல்லுங்க.’ என்றார்.

    ஒரு மாலை நேரம் ஆபிஸ் முடிந்ததும் சாயிபாபா காலனியிலிருந்த பூங்கோதையின் வீட்டுக்கு அழைத்துப் போனார். அவரை முன்னமே ஓரிரு சந்தர்ப்பங்களில் பிற இடங்களில் பார்த்திருந்தாலும், அந்த பத்தொன்பது வயதில் ஒரு எழுத்தாளனாக, எனக்கென்ற ஒரு தனி அடையாளத்தோடு போய் சந்திப்பது கொஞ்சம் பெருமிதமாய் இருந்தது.

    கம்பீரமான குரலில் பேசுவார். பேச்சில் தன்னம்பிக்கை இருக்கும். இன்ட்டெலக்ச்சுவல் தோற்றம்.

    அந்த சமயத்தில் எப்போதும் என் கையில் ஒரு புதிய சிறுகதை இருக்கும். படித்து அபிப்ராயம் சொல்வதற்காக அவரிடம் கொடுத்தேன். சிறுகதையை வாசித்து முடித்தவர், ”சிறுகதையின் வெற்றி படிச்சு முடிச்சவுடன் அது தரும் இம்ப்பாக்ட்டில் இருக்கு. இந்தக் கதையின் samsமுடிவில் இன்னும் கொஞ்சம் இம்பாக்ட் இருந்தா நல்லா இருந்திருக்கும்.” என்றார். இதைத் தவிர சிறுகதையின் முக்கிய திருப்பமாக ஒரு கதாபாத்திரம் இறந்து போவதற்கு வலுவான காரணங்களை கதையின் முன் பகுதியில் நான் குறிப்பிடாததையும் சுட்டிக் காட்டினார். அதுகாறும் பிரசுரமாகியிருந்த நாலைந்து சிறுகதைகளை எழுதிய போது அது தரும் தாக்கத்தைப் பற்றியோ, சம்பவங்கள் குறித்த தர்க்கத்தைப் பற்றியோ நான் யோசித்ததில்லை.

    அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் பிரசுரமான கதைகளையும், பிரசுரமாகாமல் திரும்பி வந்த கதைகளையும் படித்துப் பார்த்தேன். பிரசுரமான கதைகளில் இயல்பாகவே லாஜிக் சரியாக இருந்தது. கதையில் நல்ல இம்பாக்ட் இருந்தது. பிரசுரிக்க இயலாத கதைகளில் இயல்புத்தன்மை இல்லை. அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கரு இல்லை.

    பூங்கோதையின் ஆலோசனைகளுக்கேற்ப கதையை மாற்றி எழுதிய பின், திரு வலம்புரிஜான் ஆசிரியராக இருந்த தாய் வார இதழில் அக்கதை பிரசுரமானது. அதற்கப்புறம் பல வருஷங்களுக்குப் பின் குமுதம் நடத்திய மாவட்ட சிறுகதைப் போட்டி வளாகத்தில் எழுதுபவர் மத்தியில் ஓரளவு அறியப்பட்ட எழுத்தாளனாக அவரை மீண்டும் சந்தித்தேன். போட்டியில் பங்கு பெற வந்திருந்த லேகா ரத்னகுமார் உள்ளிட்ட அவர் தோழிகள் சிலருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த சந்திப்புகளில் என்ன சர்ப்ரைஸ்? அது இனிமேல்தான் வருகிறது. இங்கே அமெரிக்காவில் சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பு ஸாம்ஸ் க்ளப் என்னும் மொத்த அங்காடியில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தபோது என் எதிரே ஒரு ஷாப்பிங் கார்ட்டை தள்ளிக் கொண்டு வந்தார் பூங்கோதை.

    அவருக்கு என்னை அடையாளம் தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. நானே அவர் முன்னால் போய் நின்று, ”நீங்க பூங்கோதைதானே?” என்றேன். கடைத் தெருவில் தெரிந்தவர்களை எதேச்சையாய்ப் பார்ப்பது நம் ஊரில் அதிசயமில்லை. ஆனால் பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!

    அதற்கப்புறம் பேமிலி கெட்-டு-கெதர்களில் அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறோம். பத்திரிகைகளுடனான தொடர்புகள் தற்சமயம் முற்றிலுமாக இல்லை என்றார். என்னைப் போலவே!

    - சத்யராஜ்குமார்


    சர்ப்ரைஸ் சந்திப்புகள் – 1


     
    • REKHA RAGHAVAN 1:30 மு.பகல் on செப்டம்பர் 15, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //பத்தாயிரம் மைல்களுக்கப்பால் அமெரிக்காவில் ஒரு சிறு நகரத்தில் இந்த மாதிரி சந்திப்பது ஒரு மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி!//
      உண்மைதான். அடிக்கடி சந்திப்பதை விட சிறிது இடைவெளியில் நண்பர்களை சந்திப்பதில் உள்ள கிக் இருக்கிறதே அதை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது. அருமையான பதிவு.

      ரேகா ராகவன்.

  • சத்யராஜ்குமார் 8:15 pm on August 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்
    குறிச்சொற்கள்: உரையாடல், சிறுகதைப் போட்டி, ஜ்யோவ்ராம் சுந்தர், பின்னூட்டங்கள், பைத்தியக்காரன், முடிவுகள்   

    உரையாடல் முடிவுகள்: சலசலப்பு 

    பல சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்றிருக்கிறேன். பரிசுகள் கிடைத்துள்ளன. கிடைக்காமலும் போயுள்ளன. கிடைத்த போது மகிழ்ந்திருக்கிறேன். கிடைக்காத போது வருந்தியதில்லை.

    ஆரம்பத்தில் போட்டிகள் நடக்கும் திசையில் தலை வைத்துக் கூட படுக்காமல் இருந்தவன்தான். இத்தனைக்கும் வாரா வாரம் ஏதாவது ஒரு பத்திரிகையில் கதை வந்து கொண்டிருக்கும். மாத நாவல்களும் கொஞ்சம் எழுதினேன். வீடு தேடி வந்து சந்தித்துச் செல்லும் வாசகர்கள். தினமும் ஒரு கத்தை போஸ்ட் கார்டு கடிதங்கள். புகழின் ருசியை லேசாக அனுபவிக்க முடிந்தது.

    ஒரு வாசகர்தான் எனக்கு ஸ்பீட் ப்ரேக் போட்டார். சிந்தெடிக் கதைகளால் உங்களுக்கு பேர் கிடைக்கப் போவதில்லை. பத்து நல்ல சிறுகதைகளாவது எழுதுவது ரொம்ப முக்கியம். உங்களால் முடியும் என்பதால் சொல்கிறேன்.

    குமுதம் அப்போது மாவட்டம் தோறும் ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து பரீட்சை எழுதுவது போல கதை எழுதித் தர வேண்டும். போலீஸ் நிலைய வன்புணரலை மையமாக வைத்து வழக்கம் போல க்ரைம் கலந்த ஒரு கதை எழுதினேன். எனக்கு நன்கு அறிமுகமான க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமார் முக்கிய நடுவர். இருந்தும் எனக்கு பரிசு கிடைக்கவில்லை. சூசன் எழுதிய ‘அம்மாவும், சில கரப்பான் பூச்சிகளும்’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.

    ஒரு நல்ல சிறுகதைக்கான இலக்கணம் சூசனின் கதையில் இருந்தது. அதை நான் மறக்காமல் உள்வாங்கிக் கொண்டேன். அடுத்து பல நாட்களுக்கு கதை எதுவும் எழுதாமல் நிறைய சிறுகதைகளை தேடித் தேடி வாசித்தேன். மனசுக்குள் அச்சிறுகதைகளை போஸ்ட் மார்ட்டம் செய்து பார்ப்பது வாடிக்கையானது. அதற்கப்புறம்தான் கல்கியில் அந்நிய துக்கம், உள்காயம், ஒரு வினாடியும் ஒரு யுகமும், குறுநில மன்னர்கள் என வரிசையாய் பரிசுகள் கிடைத்தன. கலைமகள், அமுத சுரபியிலும் பரிசுகள் வாங்கினேன்.

    இங்கே நான் சொல்ல வந்தது கிடைத்த பரிசுகள் பற்றி அல்ல. கிடைக்காத பரிசு பற்றி. அன்றைக்கு நான் மனம் சோர்ந்திருந்தால் கல்கியில் இத்தனை சிறுகதைகள் எழுதியிருக்க மாட்டேன்.

    பத்திரிகையோ, வலைப்பதிவோ… சில போட்டி அறிவிப்புகளைப் பார்த்தால் கலந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது. பங்கேற்கிறேன். சில மாதங்களுக்கு முன் சிறில் அலெக்ஸ் நடத்திய விஞ்ஞான சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டேன். அமரர் சுஜாதா நினைவு சிறுகதைப் போட்டியிலும் பங்கெடுத்தேன். என் கதை இந்த இரு போட்டிகளிலும் தேர்வாகவில்லை. அதனாலென்ன, கலந்து கொண்டிருக்கா விட்டால் அந்த இரு கதைகளையும் எழுதியிருக்காமல் போயிருப்பேன்.

    யோசித்துப் பார்த்தால் பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்ட கதைகள்தான் எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்திருக்கின்றன. ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். இதையே உங்கள் கதை பற்றிய கடைசி தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்று சொல்லும் அந்த சின்ன சீட்டுக்கள் பத்து திருக்குறள் அதிகாரங்கள் போதிப்பதை மவுனமாக போதித்தன. ஏன் நிராகரித்தார்கள் என்று யாரையும் விளக்கமெல்லாம் கேட்க முடியாது. நாமாக புரிந்து கொள்ள வேண்டும்.

    எழுதுவது என் கடமை. அமைப்புகள் அவற்றை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவர்கள் சவுகரியம். இந்தப் பக்குவம் எழுத்தாளர்களுக்கு முக்கியம். பிரசுரிக்காத நிறுவனத்தை திட்டுவதும், பரிசு கொடுக்காத அமைப்புகளை கண்டிப்பதும் நம்மை வளர்த்தப் போவதில்லை. மேலும் மேலும் படிப்பதும், மேலும் மேலும் எழுதிக் கொண்டிருப்பதுமே நாம் தொடர்ந்து இயங்க வழி வகுக்கும்.

    வாய் பேசக் கூட தெரியாத குழந்தைகள் தட்டுத் தடுமாறி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, சிரித்து தானாகவே சகலமும் கற்றுக் கொள்ளும் வித்தையை கூர்ந்து பார்த்தால் புரியும் இதுதான் இயற்கையான Learning Process என்னும் சூட்சுமம். உங்கள் படைப்புகளுக்கு நீங்களே நீதிபதியாவது முக்கியம். நீதிபதி என்பவர் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தராமல் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி தீர்ப்பெழுதுபவர் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

    நம் கதையில் என்ன பிரச்சனை என்று நம்மைத்தான் நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறு யாரையும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அந்த நேரத்தில் பத்து சிறுகதைகள் படித்தால் அவை நமக்கு பதில் சொல்லும்.


    தொடர்புள்ள இடுகை:- சிதைவுகள்: சிறுகதைப் போட்டி முடிவுகள்


     
    • sureஷ் 8:38 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

    • புருனோ 8:50 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //அதனாலென்ன, கலந்து கொண்டிருக்கா விட்டால் அந்த இரு கதைகளையும் எழுதியிருக்காமல் போயிருப்பேன்.
      //

      :) :)

    • புருனோ 8:51 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //எழுதுவது என் கடமை. அமைப்புகள் அவற்றை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவர்கள் சவுகரியம். இந்தப் பக்குவம் எழுத்தாளர்களுக்கு முக்கியம். பிரசுரிக்காத நிறுவனத்தை திட்டுவதும், பரிசு கொடுக்காத அமைப்புகளை கண்டிப்பதும் நம்மை வளர்த்தப் போவதில்லை. மேலும் மேலும் படிப்பதும், மேலும் மேலும் எழுதிக் கொண்டிருப்பதுமே நாம் தொடர்ந்து இயங்க வழி வகுக்கும்.//

      சூப்பர்

    • SnapJudge 10:03 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வாழ்த்துகள்!

    • என். சொக்கன் 10:24 பிற்பகல் on ஆகஸ்ட் 10, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ்குமார்,

      இரண்டு நாள்களாக நானும் இதையேதான் நினைத்துக்கொண்டிருந்தேன் – இணையத்தில் எழுதுகிறவர்கள், வாசிக்கிறவர்கள் தங்கள் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்தவர்களாக இருப்பார்கள், வெற்றி, தோல்வி சகஜம் என்பதை உணர்ந்த முதிர்ச்சி அவர்களிடம் இருக்கும் என்பது என் கருத்து, அதனால்தான், என்னுடைய பத்திரிகைக் கட்டுரைகள் பலவற்றை இணையத்தில் இடுவதில்லை, இங்குள்ளவர்கள் அதையெல்லாம் கடந்தவர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

      ஆனால், இந்தப் போட்டி முடிவு ஏற்படுத்திய சலசலப்பும், குற்றம் சாட்டுதலும், போட்டி நடத்தியவர்கள்மீது எழுப்பப்படும் சந்தேகங்களும், பரிசு பெற்றவர்கள்மேல் சேறு வாரியிறைக்கப்படுவதும் ரொம்ப வேதனையாக இருக்கிறது. இருநூறு பேர் கலந்துகொள்கிற போட்டியில் இருபது பேர்மட்டும்தான் வெற்றி பெறமுடியும் எனும்போதே இத்தனை பிரச்னை என்றால், பத்திரிகைப் போட்டிகளில் ஆயிரத்துக்கு நாலு கதைதானே தேர்ந்தெடுப்பார்கள், மிச்சமுள்ள 996 பேர் இப்படி எதிர்மறையாகப் பேச ஆரம்பித்தால் அவர்களால் இன்னொரு நல்ல கதை எழுதமுடியுமா?

      போட்டிகளை எப்போதும் புதிதாகக் கதை எழுதுவதற்கான வாய்ப்பாக**மட்டுமே** கருதவேண்டும் என நினைக்கிறேன். பரிசு கிடைத்தால் மகிழ்ச்சி, கிடைக்காவிட்டால், நம் கதையில் இருக்கக்கூடிய தவறை அறிந்து திருத்தலாம், தவறில்லை என்று தோன்றினால் இன்னோர் இடத்துக்கு அனுப்பிப் பரிசு வாங்கிக்கொள்ளலாம், எப்படி யோசித்தாலும் தோல்வியை நினைத்துத் துவண்டுபோவது ஓர் அர்த்தமற்ற செயலாகத் தோன்றுகிறது.

      முக்கியக் குறிப்பு: நான் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளவில்லை, ஆகவே என் கருத்தைத் தோற்றவன் வேதாந்தமாகவோ, ஜெயித்தவரின் அலட்டலாகவோ நினைத்துவிடவேண்டாம் – சத்யராஜ்குமாரின் பதிவில் உள்ள நியாயமான கருத்துகளை, புதிதாக எழுதுகிறவர்கள்மீது அவர் காட்டியுள்ள உண்மையான அக்கறையை அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன், அவ்வளவே.

      • சத்யராஜ்குமார் 6:31 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சொக்கன், விரிவான கருத்தை வெளியிட்டதற்கு நன்றி. நானும் பல இடங்களில் பல ரூபங்களில் என் எழுத்து அனுபவங்களை பதிவிட்டு வருகிறேன். சொற்பம் பேருக்கேனும் அவை பயன்படலாம் என்ற நல்லெண்ணமே. எவ்வளவு பேர் அதை சரியான கோணத்தில் பார்த்து புரிந்து கொள்கிறார்கள் என்று தெரியாது. உங்கள் பின்னூட்டம் இப்பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதை தடுக்க உதவும். மறுபடி நன்றி.

    • sumazla 12:11 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      //வாய் பேசக் கூட தெரியாத குழந்தைகள் தட்டுத் தடுமாறி, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, சிரித்து தானாகவே சகலமும் கற்றுக் கொள்ளும் வித்தையை கூர்ந்து பார்த்தால் புரியும் இதுதான் இயற்கையான Learning Process என்னும் சூட்சுமம்//

      நல்ல போதிப்பு! இது போன்ற வாழ்க்கைப்பாடத்தை, கதையாற்றலை, எல்லாரும் அவரவர் கணிப்பில் தனியொரு ப்ளாகில் போட்டால்(தொகுத்தால்), என்னை போன்ற வளரும் ஆர்வமிக்க எழுத்தாளர்களுக்கு மிகவும் பயன் தரும், முயலுங்களேன்.

      • சத்யராஜ்குமார் 6:41 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        sumazla, நன்றி. என் எழுத்து அனுபவங்களையும், நான் பின் பற்றும் சில நுட்பங்களை பற்றியும் அவ்வப்போது இங்கே ‘இன்று -Today’-யிலும், பிற இடங்களிலும் பதிந்திருக்கிறேன். தமிழோவியத்தில் ‘என்னை எழுதியவர்கள்’ சிறு தொடரிலும் கொஞ்சம் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழோவியம் ஆசிரியர் சிறுகதைகள் குறித்து ஒரு சிறு தொடர் எழுத கேட்டுள்ளார். முடிந்தால் விரைவில் ஆரம்பிக்கலாம்.

        மற்றபடி உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் என்னும் தீயே போதும். உங்களை வளர்த்தெடுக்கும். வாழ்த்துக்கள்.

    • சித்ரன் 1:57 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் கூட ஒரு சிறுகதையை எழுதிமுடிப்பதற்குள் ஒரு மிகப்பெரிய பிரசவ வலியை அனுபவித்து விடுகிறார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டிருகிறேன். 100 தடவை திருத்தி எழுதுபவர்கள் இருக்கிறார்கள். தன்னை ஒரு மிகச் சிறந்த சிறுகதையாளன் என்று உணர்ந்து கொண்டிருப்பவன் கூட அதை இன்னும் சிறப்பாக செம்மையாகச் செய்வது எப்படி என்ற தேடலில் ஈடுபடும்போதுதான் மிகச் சிறந்த படைப்புகள் உருவாகின்றன என்பது எனது கட்சி.

      போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தன்னை ஒரு மிகப் பெரிய எழுத்தாளனாக அறிவித்துக் கொள்ள முடியும் என்கிற பாவனை புதிய எழுத்தாளர்களுக்கு இருப்பது ஆரோக்கியமான விஷயமல்ல. மாறாக SRK சொல்வது போல வெற்றி பெற்றவர்களின் கதைகளை உற்று நோக்கி நல்ல சிறுகதைகள் எவ்வாறு எழுதப்படுகின்றன என்பது பற்றிய சூட்சுமத்தைக் கற்றுக் கொள்ளலாம்.

      பரிசு கிடைக்காவிட்டாலும், படிக்கிறவரை உலுக்கும், கவரும், அல்லது பாதிக்கும் ஒரு வரியையாவது தம்மால் எழுத முடிந்தால் அதுதான் வெற்றி என்பதை போட்டியில் கலந்து கொள்கிறவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். படைப்புகள் நிராகரிக்கப் படுகிறதென்றால் அடுத்த படைப்பை இன்னும் வீரியமாய் எப்படி அளிக்கலாம் என்ற முனைப்புடன் செயல்படவேண்டும். நல்ல படைப்புகள் ஒரு போதும் சோரம் போகாது. ஒன்றிரண்டு எழுத ஆரம்பிப்பதற்குள்ளாகவே அவைகளை மிகச் சிறந்த படைப்புகளாக பாவித்துக்கொண்டு அரசியலை அவிழ்த்துவிடுவதை விட்டுவிட்டு நல்ல படைப்புகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன என்கிற நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தலாம்.

      முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிப் பிரசுரித்தபின்னும் கூட இன்னும் என் எழுத்தாள நண்பர்களிடமெல்லாம் “நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற கேள்வியை வீசியபடியேதான் இருக்கிறேன். ஏதாவது ஒரு புது விஷயம் யாரிடமிருந்து கிடைத்தாலும் அதை உள்வாங்கத் தயாராக இருக்கிறேன்.

      இது வரை இல்லாத ஒரு மிகச் சிறந்த சிறுகதையை என்றாவது ஒரு நாள் எழுதிவிட வேண்டுமென்பதற்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் மெனக்கெடலாம். தப்பில்லை.

      • சத்யராஜ்குமார் 6:48 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சித்ரன், பதிவின் சுருக்கம் கருதி நான் சொல்லாமல் விட்ட பல விஷயங்களை நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பழைய கல்கி இதழ்களில் ஆறுதல் பரிசு லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். சில மிகச் சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் கூட பரிசுக்குத் தேர்வாகாதிருப்பதைக் காணலாம். அவற்றில் சில பரிசு பெற்ற கதைகளை விட அருமையாக இருக்கும். பரிசு பெறாத கதைகள் சரியாக எழுதப்படாதவை என நினைப்பது மாயை.

    • பாரா 6:50 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அன்புள்ள சத்யராஜ்!

      வணக்கம். நலமா? இது மிக அவசியமான கட்டுரை. 1989-90 ஆண்டுகளில் கல்கியில் ஒரு சிறுகதை(யாவது) வெளிவரவேண்டுமென்ற வெறியில் தினசரி ஒரு கதை எழுதி அனுப்பியபடியே இருப்பேன். அநேகமாக 110 கதைகள் என்று நினைக்கிறேன். ஞாயிறுகள் தவிர தினசரி அஞ்சலில் ஒன்றைச் சேர்ப்பது வழக்கம். அந்த 110ல் ஒன்றுகூடப் பிரசுரமாகவில்லை. ஆனால் ஒழுங்காகப் பத்து நாள்களில் திரும்பி வரும்.[அப்போது குமுதத்துக்கு அனுப்பினால் - ஸ்டாம்ப்புடன் அனுப்பினாலும் - திரும்பி வராது.]

      ரொம்ப வெறுத்துப் போய் ஒருநாள் கிண்டியில் அப்போதிருந்த கல்கி அலுவலகத்துக்கு நேரில் சென்று திரு. பி.எஸ். மணி என்கிற குண்டு மணி அவர்களை [பிரதம உதவி ஆசிரியர்]சந்தித்து, சண்டை பிடித்தேன்.

      ‘நல்லா இருந்தா வரும் சார். திரும்பி வருதுன்னா சரியா இல்லைன்னு அர்த்தம். இன்னும் பெட்டரா எழுதப்பாருங்க’ என்று சொன்னார்.

      என்ன சரியாக இல்லை, எது சரியில்லை என்று விடாமல் அவரைக் குடைந்து, அவர்கள் என் கதைகளைப் படிக்கவேயில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டி, கிட்டத்தட்ட அவரைக் கொலைவெறிக்குத் தள்ளியது நினைவுக்கு வருகிறது.

      இறுதியில் ‘டிசைட் பண்ற பக்கம் உக்காந்திருக்கோம்ங்கற திமிர்ல பேசறிங்க சார். என்னிக்கானா ஒருநாள் உங்க இடத்துல நான் இருப்பேன்’ என்று வீரசபதம் செய்துவிட்டு வந்தேன்.

      திரு குண்டுமணி கோபித்துக்கொள்ளவில்லை. பிறகும் தொடர்ந்த என் முயற்சியில் ஒரு கதை கல்கியில் முதல் முதலாகப் பிரசுரமானது. பிரசுரித்தவர் அவர்தான். பிறகு நேரில் சந்தித்தபோது, ‘இதை ஏன் பப்ளிஷ் பண்ணிங்கன்னு கேக்க மாட்டிங்கல்ல? பண்ணலன்னா மட்டும் கோவம் பொத்துட்டு வந்துடுமே’ என்றார் சிரித்தபடி.

      நானும் சிரித்துக்கொண்டே ‘ஏன் பப்ளிஷ் பண்ணிங்க?’ என்றேன். ஒரு நல்ல சிறுகதைக்கான இலக்கணம் என்று அவர் அறிந்தவற்றை அப்போது எனக்குச் சொல்லி, அவை அந்தக் கதையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

      ஒரு நல்ல சிறுகதையின் இலக்கணத்தை அறியக்கூட ஒரு நல்ல சிறுகதையை முதலில் எழுதியாகவேண்டும்போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

      இரண்டே வருடங்கள். என் சிறுகதைகள்தாம் எனக்குக் கல்கியில் வேலை வாங்கிக்கொடுத்தன. வீம்புக்குப் போட்ட சபதம் எப்படியோ நிறைவேறியது. பிறகு நிதானத்துக்கு வந்து, பழைய 110 கதைகளைப் படித்துப் பார்த்தபோதுதான் குண்டுமணி சொன்னது புரிந்தது. வேறு யாராவது அந்த 110ஐ அனுப்பியிருந்தால் கண்டிப்பாக நிராகரிக்கவே செய்திருப்பேன். என் வாழ்வில் நான் வாசித்த மிக மோசமான கதைகள் கண்டிப்பாக அவையே.

      திரு. மணியிடம் ஒருவரி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று மிகவும் ஏங்கினேன். துரதிருஷ்டவசமாக அவர் அப்போது உயிருடன் இல்லை.

      • சத்யராஜ்குமார் 8:40 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        அன்புள்ள பாரா,

        வணக்கம்.

        நான் நலமே. நீங்கள் நலமா? விரிவான பதிவுக்கு நன்றி. உங்கள் அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொண்டது இந்தக் கட்டுரையில் முன் வைத்த கருத்துக்களுக்கு வலு சேர்க்கிறது. பார்க்கப் போனால் எல்லா எழுத்தாளர்களின் கதையும் இப்படித்தான் ஆரம்பிக்கிறதென்று புரிகிறது. ‘உச்சியிலிருந்தே துவங்கு!’ என்று ஜென்னில் சொல்வது போல் எழுத ஆரம்பிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

        அன்புடன்,
        சத்யராஜ்குமார்

    • sumazla 8:05 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நன்றி சார், உங்கள் தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் எழுதிய பயிற்சி சிறுகதை இங்கே:
      http://sumazla.blogspot.com/2009/08/blog-post_6112.html
      நேரமிருந்தால், படித்து கருத்து சொல்லுங்களேன்.

    • Balaji Manoharan 9:25 மு.பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      மிக்க பயனுள்ள பதிவு.

      இணையத்துல நானும் நிறைய போட்டிகள்ல கலந்து தோற்றுப் போயிருக்கிறேன். இந்த போட்டியில் கூட மூன்று கதைகள் எழுதி ஒன்று தான் வெற்றி. மீதம் இருக்கும் இரண்டு கதைகளையும் போஸ்ட் மார்ட்டம் செய்து கொண்டிருக்கிறேன். அதற்கான காரணமும் ஓரளவு தெரிந்து கொண்டுவிட்டேன்.

      ஒரு கதை நாடக பாணியில் அமைந்தது. அவ்வளவு நல்ல கருவை இதை விட எவரும் மோசமாக எழுத முடியாது என்று தோன்றியது. ஜெ.மோவின் நதிக்கரையில் பாணியில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். அதற்கு முன்பு நிறைய படிக்க வேண்டும்.

      மற்றொரு கதையில் (குட்டிப்பாப்பா) முடிவை இன்னும் அழகாக சொல்லியிருக்கலாம். இருந்தாலும் கை வைக்க மனம் வரவில்லை :)

      வெற்றி பெற்ற‌ க‌தையில் இருந்து க‌ற்றுக் கொண்ட‌ பாட‌ம், ஒரு கதையில் க‌தாசிரிய‌ன் த‌ன் மூக்கை நுழைக்காம‌ல் இருந்தால் போதும். இவ‌ர் ந‌ல்ல‌வ‌ர், இவ‌ர் பாவ‌ம் என்று த‌வ‌றுத‌லாக‌ எங்கேயும் சொல்ல முய‌ற்சிக்க‌ கூடாது. அப்ப‌டி சொல்லியிருந்தால் இந்த‌ க‌தை மோச‌மான‌ ஒரு சிறுக‌தைக்கு எடுத்துக்காட்டாக‌ இருந்திருக்கும்.

      உங்க‌ளுடைய‌ மைய‌வில‌க்கு கூட‌ என‌க்கு ஒரு பாட‌ம் தான். அது போல‌ நானும் ஒரு சிறுக‌தை முய‌ற்சி செய்திருந்தேன். க‌டைசி வ‌ரியில் க‌தாபாத்திர‌ம் த‌ன்னை தானே ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொள்வ‌து போல‌ வைத்து த‌வ‌று செய்திருந்தேன்.

      பாரா, சொக்க‌னுடைய‌ பின்னூட்ட‌ங்க‌ளும் எங்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கும்.

      பதிவிற்காக மீண்டும் ஒரு முறை நன்றி…

      • சத்யராஜ்குமார் 2:29 பிற்பகல் on ஆகஸ்ட் 11, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        பாலாஜி,

        உங்கள் விரிவான பதிலுக்கு நன்றி. சிறுகதை எழுதும் முயற்சிகளில் நீங்கள் சீரியஸாக இறங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சிறுகதைகள் இனி அவ்வளவுதான் என்று ஒரு சிலர் கருதுகிறார்கள். உரையாடல் போட்டிக்கும், பிற சிறுகதை போட்டிகளுக்கும் வந்திருக்கும் கதைகளை பார்த்தால் அப்படித் தோன்றவில்லை. Money Value இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் எழுத அல்லது படிக்க ஆர்வம் குறைந்த மாதிரி தெரியவில்லை. இதற்கென்று ஒரு வட்டம் எப்போதும் இருக்குமென்று நினைக்கிறேன். என்னைப் பொறுத்த வரை சிறுகதை எழுதுவது சதுரங்கம் விளையாடுவதைப் போல மகிழ்ச்சி அளிக்கிறது.

        அன்புடன்,
        சத்யராஜ்குமார்

    • சித்ரன் 8:13 மு.பகல் on ஆகஸ்ட் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      பரிசு பெற்ற சூசன் சிறுகதையின் முழுத் தலைப்பும் திடீரென்று ஞாபகத்துக்கு வந்தது. அது “புகை படிந்த அம்மாவும், சில கரப்பான் பூச்சிகளும்”. சரியா?

    • dYNo 10:36 மு.பகல் on ஆகஸ்ட் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      அங்கன சொன்னதுதான்… நீங்க சொல்றது 100% நிஜம்!
      http://twitter.com/dynobuoy/status/3235990238

      வெற்றிக்கு (மீண்டும்) வாழ்த்துகள்!!

    • யுவகிருஷ்ணா 12:01 பிற்பகல் on ஆகஸ்ட் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      நல்ல பகிர்வு!

      பெருசுகளின் அனுபவங்களைப் பார்த்தால் எனக்கெல்லாம் ரொம்ப ஈஸியாக அங்கீகாரம் கிடைத்து வருவதாக தெரிகிறது :)

      • சத்யராஜ்குமார் 12:13 பிற்பகல் on ஆகஸ்ட் 12, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        யுவகிருஷ்ணா, நன்றி! ஈசியாக அங்கீகாரம் கிடைக்கும் என்பதில் எனக்கு இன்னமும் நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு அங்கீகாரத்துக்குப் பின்னாலும் நிச்சயம் கண்ணுக்குத் தெரியாத உழைப்பு இருக்கவே செய்யும்.

    • Prakash 1:07 மு.பகல் on ஆகஸ்ட் 13, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      வாசிப்பு மட்டும் தான் உண்மையை காட்டுகின்றது. ஏன் டா இப்படி எழுதினோம் என்று நொந்து கொள்ளும் அளவிற்கு !

  • சத்யராஜ்குமார் 11:17 pm on July 2, 2009 நிரந்தர பந்தம் | பதில்  

    கதை vs தொழில்நுட்பம் 

    ஆரம்பம் தொட்டே கதை எழுதும் ஆர்வத்தை விட, அதில் தொழில்நுட்பத்தை நுழைக்கும் போக்கு என்னிடம் அதிகமாயிருந்தது.

    பேப்பரில் எழுதிக் கொண்டிருந்தவன் சட்டென ஒரு தட்டச்சு இயந்திரத்தை (ஹால்டா) வாங்கி தட்ட ஆரம்பித்தது அப்படித்தான். முறைப்படி டைப்பிங் பழகவில்லை. ஆனால் மனதின் வேகத்துக்கு தடதடவென தட்டி நொறுக்க சில நாட்களிலேயே பழகி விட்டேன். அப்புறம் கணினிக்கு தாவினேன். பாரதி போன்ற ஷெல் சார்ந்த மென்பொருட்களும், டாட்மேட்ரிக்ஸ் ப்ரிண்ட்டரும் என் கதை எழுதும் ஆர்வத்தை குறையாமல் பார்த்துக் கொண்டன.

    அந்த காலகட்டத்தில் சுஜாதா தவிர வேறு யாரெல்லாம் கம்ப்யூட்டரில் கதை தட்டிக் கொண்டிருந்தார்கள் என்று அவ்வளவாய் தெரியாது. (இரா. முருகன்?) கல்கியில் அப்போது என்னைப் பற்றி வெளியான சிறுகுறிப்பில் நான் கம்ப்யூட்டரில் கதை எழுதி வருவது குறித்து பிரசுரமாகி இருந்ததால், ஒரு விழாவில் சந்தித்த ஆர்னிகா நாசர், “கட்டுபடியாகுமா?” என்றார்.

    விண்டோஸ் 3.1 வந்த பின் தமிழைப் போல பாவ்லா காட்டும் ட்ரூ டைப் எழுத்துருக்கள் புழக்கத்துக்கு வந்தன. என்னிடமிருந்த கோரல் ட்ரா என்ற மென்பொருளில் கொஞ்சம் மெனக்கெட்டால் அப்படிப்பட்ட எழுத்துருக்களை உருவாக்கும் வசதி இருந்தது. மெனக்கெட்டேன். ஒரு எழுத்துரு உருவாக்கி அதற்கு ஸரஸ்வதி என பெயரிட்டேன். சமீபத்தில் யுனிகோட் பரவலாகும் வரை எனக்கும் என் நெருங்கிய கணினி நண்பர்களுக்கும் (சித்ரன்) ஸரஸ்வதிதான் ஆஸ்தான எழுத்துரு. 2003-ல் என்றுதான் நினைக்கிறேன், முப்பது முப்பத்திரண்டு தமிழ் வலைப்பதிவாளர்களில் ஒருவனாய் நானும் மாறிய போது, சித்ரன் மூலமாக என்னை யாஹூ அரட்டையில் பிடித்த எழுத்தாளர் பாரா நானும், சித்ரனும் தமிழில் உரையாட ஸரஸ்வதியை உபயோகிக்கிறோம் என்றதும், “என்னது சிம்ரனா?” என்று கிண்டலடித்தார். எனக்கு ஏன் ஸ்ரீதேவி, கவுதமி என்று கவர்ச்சியாய் நடிகை பெயர் வைக்கத் தோணவில்லை என்று நொந்து கொண்டேன்.

    டயரி போன்ற வலைப்பதிவு தொழில்நுட்பத்தை கதை எழுதி கெடுத்த முன்னோடி வில்லன் நான். அதற்கு முக்கிய காரணம், சுவாரஸ்யமான சமாசாரங்களை பதிய எனக்குத் தெரிந்த ஒரே சவுகரியமான வடிவம் சிறுகதை. அமெரிக்காவில் இந்தியர்களின் சின்ன சின்ன அனுபவங்களை சுவாரஸ்யம் கலந்த கதையாக்கி துகள்கள் என்னும் தலைப்பில் வெளியிட, நல்ல வரவேற்பு. அப்போது ப்ளாகரில் இருந்ததால், அது தந்த சுதந்திரத்தை பயன்படுத்தி கதைகளில் கொஞ்சம் DHTML மேஜிக் செய்தேன். அதாவது ஒரு கதை முடிந்த இடத்தில் லின்க் கொடுத்து மவுசை மேலே வைத்தால், கதையின் இன்னொரு முடிவு பிரசன்னமாகும். இது போல பல கதைகளுக்கு இரண்டு முடிவுகள் வைத்திருந்ததையும், DHTML தொழில்நுட்பத்தை அதற்கு பயன்படுத்தியதையும் பாரா அப்போது இமெயிலில் மனசார கீழ்கண்டவாறு பாராட்டினார்.

    அன்புள்ள சத்யராஜ்குமார்

    உங்களது பிளாக்ஸ்பாட் வலைப்பதிவையும் பைட்ஸ் ஆனையும் இன்றுதான் முழுக்கப்
    படித்து முடித்தேன். என் முதல் பாராட்டு, உங்களது தொழில்நுட்ப
    வேலைகளுக்கு.
    மிக அழகாகப் பல விஷயங்களைச் செய்திருக்கிறீர்கள். ஒரு
    கதைக்கு இரண்டு முடிவு கொடுக்கிறபோது சட்டென்று இன்னொரு பேரா
    உதயமாகிறதும் உங்களைப் பற்றிய சிறு குறிப்பு தனி பக்கமாக மேலே
    விழுவதுவும் அழகாக உள்ளன. நேர்த்தியான வடிவமைப்பில் கவர்கிறீர்கள்.

    விஷயத்துக்கு வருகிறேன்.

    மொழியின் அத்தனை சாத்தியங்களும் உங்களுக்கு வசப்படுகின்றன. ‘குமார்’ரக
    எழுத்தாளர்கள் யாருமே மொழி விஷயத்தில் இந்த உயரங்களைத் தொட்டதில்லை;-)
    நிச்சயமாக நீங்கள் மசாலா எழுத்தாளர் இல்லை என்று எல்லா கதைகளும்
    சொல்லிவிட்டன.

    அன்புடன், வாழ்த்துகளுடன்
    பாரா

    இதன் பின் Purist வலைப்பதிவர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் எனக் கருதி கதைகளை தொகுத்து இணையதளமாக்கி விட்டு, “இன்று – Today” என்னும் இந்த வலைப்பக்கத்தை வலைப்பதிவுகளின் ஒரிஜினல் நோக்கத்துக்கானதாக ஆரம்பித்தேன். சமீபத்தில் போட்டியின் பொருட்டு இரண்டொரு கதைகள் இங்கே இட வேண்டியதாயிற்று.

    நான் வலைப்பதிவில் தலை காட்டிய சில நாட்களிலேயே தமிழோவியம் கணேஷ் சட்டென்று பழக்கமாகி விட்டார். “ஏதாவது பண்ணுங்க.” என்று அடிக்கடி அன்புக்கட்டளை இடுவார். தட்டையான கதைகள் அச்சு ஊடகத்துக்கு சரி. ஹைப்பர் லின்க் போன்ற அற்புத சாத்தியங்கள் கொண்ட இணைய ஊடகத்துக்கும் அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென எண்ணியவன், ஹைப்பர் லின்க் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரே கதை ஆறு தடங்களில் பிரிந்து ஆறும் ஆறு வெவ்வேறு கதைகள் போல தனித் தனியே படிக்க முடியும்படி கறுப்பு வெள்ளை கனவுகள் எழுதிக் கொடுத்தேன். இதற்கும் இணைய அன்பர்களிடமிருந்து பலத்த வரவேற்பு. 3D கதைகள் என்று கணேஷ் அதற்குப் பெயர் வைத்தார்.

    இப்போது ட்விட்டர் வந்ததும் அதையும் விட்டு வைக்காமல் அங்கும் என் கதை முயற்சி தொடர்ந்ததை என் சமீபத்திய பதிவொன்றின் மூலம் அறிந்திருப்பீர்கள். அதை ட்விட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது – என்னிடம் பழகும் ஒரு சிலர் இது கொஞ்சம் ஓவரா இல்லையா என்றார்கள். சோதித்துப் பார்ப்பதில் என்ன தவறு? உண்மையில் அந்த ட்விட்டர் முயற்சி சில காலம் கழித்து நான் செய்ய உத்தேசித்திருந்த இன்னொரு புதிய முயற்சியின் வெள்ளோட்டம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

    தெனாலி இணைய பத்திரிகை ஆசிரியர் குழு கொஞ்ச நாள் முன்பு என்னிடம் தொடர்பு கொண்டு, SMS மீடியாவில் ஒரு தொடர்கதை எழுத முடியுமா என கேட்டிருந்தார்கள். அதற்கான வடிவம் பிடிபட ட்விட்டர் அழகான பயிற்சிக் களம். போன்சாய் மாதிரி ஒரு தொடர் அமைத்து தருவது எனக்கு சவாலாகவும், சுவாரஸ்யமாகவும் தோன்றவே சம்மதித்தேன்.

    இதோ அந்த தொடர்கதை ஆரம்பமாகி விட்டது. முதலில் ஒரு க்ரைம் கதை. வரவேற்பை பொறுத்து பல வகை கதைகளையும் தர எண்ணம். தமிழில் இந்த புது ஊடக முயற்சியை நீங்களும் ருசித்துப் பாருங்கள்.

     
    • சித்ரன் 2:07 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      PDA-வில் கதை எழுதியதை விட்டுட்டீங்களே..

      ஸரஸ்வதி எழுத்துருவை நான் கொஞ்சம் மாற்றி இன்னும் ரெண்டு எழுத்துரு தயாரித்தேன். ஞாபகமிருக்கிறதா?

      தெனாலி முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

      • சத்யராஜ்குமார் 6:02 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        சித்ரன், ஏற்கெனவே பதிவில் சுயபுராணம் தூக்கலாக தெரிந்ததால் நிறைய விஷயங்கள் சொல்லாமல் விட்டு விட்டேன். :-) உங்கள் மனைவி, மகன் பெயரில் தயாரித்த எழுத்துருக்கள்தானே? ஞாபகம் இருக்கிறது.

    • என். சொக்கன் 5:45 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சத்யராஜ்குமார்,

      அட்வான்ஸ் வாழ்த்துகள். ஆனால் 2 வரி படிப்பதற்காக ஒரு க்ளிக் என்றால் கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது, ட்விட்டரில் போட்டு ஒரு RSS feed கொடுத்தால் பின்பற்றுகிறவர்கள் அதிகமிருப்பார்கள் என்பது என் கருத்து :)

      சித்ரன்,

      PDA என்றதும் சுவாரஸ்யப்பட்டு வந்தேன் – செல்பேசியில் தமிழ் எழுத வழி உண்டா? (யுனிகோட், வேறுகோட் எதுவானாலும் பரவாயில்லை)

      - என். சொக்கன்,
      பெங்களூர்

    • சத்யராஜ்குமார் 6:18 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      சொக்கன், வாழ்த்துக்கு நன்றி. இந்த கதை முற்றிலும் SMS மீடியாவுக்காக. ஒரு reference-க்காக இணையத்திலும் உள்ளது. இது முற்றிலும் தெனாலியின் சோதனை முயற்சியாகும். presentation உத்திகள் இன்னும் முழுதாய் தீர்மானமாகவில்லை. இந்த கதை முடிவதற்குள் சோதனைகள் செய்து பார்த்து தீர்மானிப்பதாக தெனாலியில் சொன்னார்கள். எழுதி தருகிற சின்ன கடமையை நான் செய்து விட்டேன் :-)

      PDA குறித்து – அப்போது ஒரு Casio கைக்கணினி வைத்திருந்தேன். அதில் TTF Fonts நிறுவ முடியும் என்பதால், என்னுடைய(!) ஸரஸ்வதியை அதில் நிறுவி, ரயிலில் செல்லும் நேரத்தில் சிறுகதைகள் எழுத பயன்படுத்தினேன். அதிலே எழுதின ‘சினிமா, சினிமா’ போன்ற கதைகள் குமுதத்தில் வெளி வந்த போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

      • என். சொக்கன் 6:56 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

        நன்றி சத்யராஜ்குமார் – TTF Fonts நிறுவும் வசதியுடன் ஒரு செல்ஃபோன் வந்தால் நன்றாக இருக்கும்!

        - என். சொக்கன்,
        பெங்களூர்.

        • சத்யராஜ்குமார் 7:26 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம்

          சொக்கன் , நான் முன்னர் வைத்திருந்த HP iPAQ செல்ஃபோனில் கூட ஸரஸ்வதி போட்டு வைத்திருந்தேனே! Windows Mobile OS அடிப்படையிலான எந்த செல்பேசியிலும் சுலபமாக TTF நிறுவலாம். Samsung, HTC போன்ற நிறுவனங்களின் மாடல்கள் மார்க்கெட்டில் உள்ளன. Smart Phone அல்லாத சாதாரண செல்போன்களிலும் அந்த வசதி இருந்தால் தேவலாம் என நீங்கள் ஆதங்கப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

        • என். சொக்கன் 11:09 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம்

          நான் வைத்திருப்பது நோகியா E75, அதில் TTF Fonts நிறுவும் வசதி இல்லை (என்று நினைக்கிறேன்), அதனால்தான் ஆதங்கம் :)

          - என். சொக்கன்,
          பெங்களூர்.

    • blj 10:13 மு.பகல் on ஜூலை 3, 2009 நிரந்தர பந்தம் | பதில்

      Well done and best wishes for the future.

c
புதிய பதிவு எழுதுக
j
அடுத்த பதிவு / அடுத்த மறுமொழி
k
previous post/previous comment
r
பதில்
e
திருத்து
o
மறுமொழிகளை காண்பி / மறை
t
மேலே செல்க
l
புகுபதிகைக்கு செல்ல
h
உதவி காட்டு/மறை
esc
வேண்டாம்