மூன்று வருடங்கள் கழித்து மூன்று வார மின்னல் விடுப்பில் தென்னிந்திய விசிட். ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்ததுமே பார்த்த பைக் விபத்து மனதைப் பிசைந்தது. தூக்கினால் காகிதம் போல மடங்கும் உடல். ஆம்புலன்ஸில் ஏற்றப்படும் ஜீன்ஸ் அணிந்த அந்த பைக் இளைஞன் காதில் மாட்டியிருக்கும் வெள்ளை நிற ஐபாட் ஒயரோடு இன்னமும் கண்ணுக்குள் இருக்கிறான்.
அர்த்த ராத்திரியிலும் மூச்சைத் திணறடிக்கும் டிராபிக். சென்னைக்கு இன்னும் நிறைய பாலங்கள் தேவை. ஏட்டிக்குப் போட்டியாய் போட்டுக் கொண்ட வாகன ஹை பீம் விளக்கு வெளிச்சத்தி்ல் கண் கூசுமளவுக்கு இந்தியா ஒளிர்கிறது. விலைவாசி ஸ்பென்சர் ப்ளாஸா மொட்டை மாடியிலிருந்து, ” ஹாய் ” என்கிறது. அகல வழி இணையத் தொடர்பு பரவலாகி விட்டதால் ஆங்காங்கே Pay and use Wi-Fi Hotspot-கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.
பொதுக் கழிப்பறையில் சிறுநீர் கழிக்க ஐம்பது பைசா என்று போர்டு மாட்டியிருக்க, வழக்கம் போல ஒரு ரூபாய் அடாவடி வசூல். ” ஏங்க இப்படி ? ” என்று கேட்டதுதான் தாமதம். நாலு தடியாட்கள் சூழ்ந்து கொண்டு மிரட்டும் தொனியில் அது அப்படித்தான் என எனக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள். தமிழ்ப்படத்தில் இங்கே ஒரு சண்டைக்காட்சி வைக்கலாம். இயற்கை உபாதையோடு அங்கே வாக்குவாதம் பண்ணிக்கொண்டிருக்க இயலவில்லை. மாநகராட்சி அலுவலக குப்பைத்தொட்டிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதிப்போட்டேன்.
எங்கள் ஊர்ப்பக்கம் அடர்ந்த தென்னை மரங்கள் அசைந்த இடங்கள் தோறும் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம் வரை காற்றாலைகள் அழகாய்ச் சுழல்கின்றன. இரண்டு நாள் முன்புதான் ஒரு ராட்சஸ காற்றாலை உயிர்ச்சேதம் ஏதுமின்றி இரண்டாய் முறிந்து விழுந்ததாம்.
ஐகாரஸ் பிரகாஷ், நரேன், பாரா போன்றவர்களை சந்திக்க முயன்று முடியவில்லை. சென்னையில் இருந்த சொற்ப நாட்களில் அவர்கள் நேரமும், என் நேரமும் ஒத்து வரவில்லை. காசியை மட்டும் ஏர்போர்ட் போகிற வழியில் கத்திப்பாரா பாலத்தினடியில் ஒண்ணரை நிமிஷம் சந்தி்த்துப் பேச முடிந்தது.
எங்கள் மாவட்டத்தில் அரசு பஸ்கள் முதற்கொண்டு அத்தனை வாகனங்களிலும் பட்டப்பகலில் A படக்காட்சிகளை கர்ண கடூரமாய் ஸ்பீக்கர்கள் அலற வீடியோ காண்பிக்கிறார்கள். சிறார்கள் பிஞ்சிலேயே ஜூஸாவது உறுதி. தவிர 2020-ல் இந்தியா வல்லரசாகும் போது கோவை பகுதியில் பாதிப்பேர் செவிடாகியிருப்பார்கள்.
கோவையில் மனைவி மக்கள் பந்துக்கள் துணிக்கடைக்குள் புகுந்த அவகாசத்தில் நான் புத்தகக்கண்காட்சிக்கு நழுவினேன். நிறைய ஸ்டால்கள். நிறைய மக்கள். இது மகிழ்ச்சி்க்குரிய விஷயம். அடுத்த வாரம் பொள்ளாச்சியில் கண்காட்சியாம். ‘புத்தக உலகம்’ என்ற பெயரில் பொள்ளாச்சியில் கடை வைத்திருக்கும் அன்பர்கள் சொன்னார்கள். அவர்கள் கடைக்கு நாஸரும், மணிவண்ணணும் ரெகுலர் வாடிக்கையாளர்களாம். ஷூட்டிங் வரும்போதெல்லாம் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு அங்கே எட்டிப் பார்த்து விட்டுப் போகிறார்கள் என்றனர். மார்க்சிஸ புத்தகங்கள் அவர்கள் விருப்பத்துக்குரியன என்பது உபரி தகவல்.
ஜெயா டிவியிலோ, மக்கள் டிவியிலோ எனது இணைய தளத்தைக் காட்டினார்கள் என்று ஒன்று விட்ட அண்ணன் சொன்னார். காண்பித்த புண்ணியவானுக்கும், ஒரு வேளை மின்சார பகவான் அருளி இருந்து அதைப் பார்த்தவர்களுக்கும் நன்றி.
எனது ஆரம்பப் பள்ளி ஆசிரியை ஒருவரை சந்தித்தபோது, ” சில வருஷம் முன்னால் எம்.ஏ தமிழ் இலக்கியம் தொலைதூரக் கல்வி முறையில் படித்தேன். உன்னோட கதை எனக்கு ஆன்ஸிலரி பாடமாக வைத்திருந்தார்கள் ! ” என்றார். மண்டைக்குள் ஜில்லென்று ஒரு பரவசம்.
நண்பர்கள் அறிவுறுத்தி உதவியதன் பேரில் திருமகள் நிலையம் எனது சிறுகதை தொகுப்பு ஒன்றை செப்டம்பரில் வெளியிடுகிறது. இலக்கிய சிந்தனை விருது கிடைக்கப்பெற்ற ‘ஒரு விநாடியும் ஒரு யுகமும்’ என்ற சிறுகதையின் தலைப்பையே புத்தகமும் தலைப்பாகக் கொண்டுள்ளது. கல்கி, விகடன், அமுதசுரபி, கலைமகள் போன்ற இதழ்களில் பரிசு பெற்ற கதைகளுடன் பிற கதைகளும் தொகுப்பில் உள்ளன. இந்த வலைப்பூவின் வலதுபுறம் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் பார்க்கலாம்.
சிறப்பாக ஒரு வெளியீட்டு விழா வைக்க ஆசைப்பட்டார்கள். குழந்தைக்கு காதுகுத்து விழா வேறு நான் வைத்திருந்ததால் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
சித்ரன் 12:17 பிற்பகல் on ஜூலை 12, 2009 நிரந்தர பந்தம் |
’இலக்கியத்துக்கும் எனக்கும் ரொம்ப தூரம்’-கிற ஒரு சின்ன வரியை வெச்சுக்கிட்டு இம்புட்டு அம்சமா ஒரு சிறுகதை குடுக்கறதுக்கு உங்களாலதான் முடியும் ராஜா. கெளப்பீட்டீங்க. க்ளைமாக்ஸ்-ல வாய்விட்டுச் சிரிச்சுட்டேன்.
சத்யராஜ்குமார் 5:40 மு.பகல் on ஜூலை 13, 2009 நிரந்தர பந்தம் |
சித்ரன், கதை உங்களுக்குப் பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
Vino 8:52 பிற்பகல் on ஜூலை 12, 2009 நிரந்தர பந்தம் |
nice story.
சத்யராஜ்குமார் 5:38 மு.பகல் on ஜூலை 13, 2009 நிரந்தர பந்தம் |
Thank you Vino!
செல்வராஜ் 9:50 பிற்பகல் on ஜூலை 12, 2009 நிரந்தர பந்தம் |
வேடிக்கை தான். கடைசி வரியில் புன்சிரிப்பு வந்தது உண்மை. நானெல்லாம் திசை மாறி ஒரு இருபது முப்பது மைல் தூரத்தில் விழித்துக் கொண்டுவிட்டேன்! (அதை விட விரைவாகவே தெரிந்தாலும், அடுத்த இறக்கத்தில் இறங்கித் திரும்ப அவ்வளவு தொலைவு ஆகிவிடும்).
நிற்க. உங்கள் நயாகரா இடுகை உதவியாய் இருக்கிறது. அநேகமாக எங்கள் யாத்திரை அடுத்த வாரம் இருக்கலாம்.
சத்யராஜ்குமார் 5:37 மு.பகல் on ஜூலை 13, 2009 நிரந்தர பந்தம் |
செல்வராஜ், சுவாரஸ்யத்துக்காக முன்னூறு மைல் வைத்தது அதிகம்தான் என்றாலும் சாத்தியமில்லாமலில்லை என்று நினைக்கிறேன். நயாகரா டிப்ஸ் உபயோகமாயிருப்பதறிந்து மகிழ்ச்சி.
SnapJudge 8:54 மு.பகல் on ஜூலை 13, 2009 நிரந்தர பந்தம் |
—கதை படித்தால் என்ன கிடைக்கும், அஜாக்ஸ் படித்தால் அடுத்த வேலை கிடைக்கும் என்று திருப்பியடித்தார்கள். —
அது
சத்யராஜ்குமார் 5:48 பிற்பகல் on ஜூலை 13, 2009 நிரந்தர பந்தம் |
பா.பா,
Karthick 4:06 பிற்பகல் on ஜூலை 14, 2009 நிரந்தர பந்தம் |
Super and I like it. I am learning driving now. I feel that a lot of people who driving in this country do not have patience.
They honk at a small mistake of others.
சத்யராஜ்குமார் 4:13 பிற்பகல் on ஜூலை 14, 2009 நிரந்தர பந்தம் |
கார்த்திக், நன்றி. வரிசைகளில் பொறுமை காட்டும் இவர்கள் காரில் உட்கார்ந்தால் மட்டும் அதை இழந்து விடுகிறார்கள். நண்பர் காசி எழுதிய இந்த பதிவுகள் புதிய US ஓட்டுனர்களுக்கு உபயோகமானது. http://kasilingam.com/wiki/doku.php?id=on_us_roads
k.b.janarthanan 12:32 பிற்பகல் on ஜூலை 21, 2009 நிரந்தர பந்தம் |
சத்யராஜ் சார், சூப்பர் சிறுகதைக்கும் உங்களுக்கும் தூரம் அதிகமில்லை! நல்ல ரசித்தேன். -கே.பி.ஜனார்த்தனன்
சத்யராஜ்குமார் 9:20 பிற்பகல் on ஜூலை 21, 2009 நிரந்தர பந்தம் |
@ஜனார்த்தனன், வாங்க. உங்கள் கருத்துக்கு நன்றிகள் பல.