பூச்சாண்டி நண்பன்
எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்த காலம். “கல்யாணத்துக்கு இப்ப என்னம்மா அவசரம்? இன்னும் ஒரு வாரம் போகட்டும்…” என்ற என் காமெடி சென்ஸ் தாங்காமல் அம்மா ஒரு மாசம் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள்.
வாரம், மாதம், வருடம் என காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது?
ஆல் இன்டியா ரேடியோ மட்டும் கேட்டுக் கொண்டிருந்த ஊரில் ஆயிரத்தெட்டு FM ஸ்டேஷன்கள்.
தூர்தர்ஷன் பார்க்க பொது டிவி போன வீடுகளில் ரிமோட் அழுத்தி அழுத்தி வலது பெருவிரல் வலிக்கிறது.
போஸ்டல் கொரியராகிவிட்டது. போன் செல்லாகிவிட்டது.
LP ரெக்கார்டுகளில் கேட்ட பாடல்கள் ரீமிக்ஸாய் ஐபாட்களில் அலறுகிறது.
பையனாய் இருந்த நான் ஆள் ஆகி எனக்கு 2 வயதில் பையன் இருக்கிறான்.
டிவிகளின் ஸிக்னேச்சர் மியூஸிக், சீரியல்களின் டைட்டில் பாடல்களுக்கு தலையாட்டிக் கொண்டிருந்த என் பையன், இப்போது டிவிடியிலோ, சிஸ்டத்திலோ, “வர்றான் வர்றான் பூச்சாண்டி ரயிலு வண்டியில…” பாட்டைத்தான் எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இந்தப் பாடல் வந்த பின்பு சாப்பிட அடம்பிடிக்கும் என் மகனுக்கு சோறூட்டுவது எளிதாகிவிட்டது இப்போது.
முன்பெல்லாம் இருட்டைக் காட்டி ‘பூச்சாண்டி வந்துருவான்’ என்று சோறூட்டினாள் அம்மா. இப்போதோ கரண்டு இல்லாத இருட்டுகளில் பூச்சாண்டி வராததால் மகனுக்கு சோறூட்ட முடியாமல் திணறுகிறாள் என் மனைவி.
காலம் மாறித்தான் போச்சு. எனக்கு பூதமாய் இருந்த பூச்சாண்டி என் மகனுக்கு ஃப்ரண்டாகிவிட்டான்.
-மீனாட்சி சுந்தரம்
கருத்து சொல்ல பதிவின் தலைப்புக்கருகே உள்ள ‘பதில்’ என்னும் சுட்டியை க்ளிக்கவும்.


எனது சமையல் அறையில் சற்று உயரத்தில் ஒரு ஜன்னல் இருக்கிறது. அதற்கு கதவெல்லாம் இல்லை. குறுக்காய் மூன்று கம்பிகள் மட்டும் உண்டு. அந்த இடைவெளியில் பூனைகள் நுழையலாம். ஆகவே அவ்வப்போது பூனைகள் நுழைவதுண்டு. பேச்சிலர் அறையில் சாம்பிளுக்குகூட எதுவும் கிடைக்காமல் அவைகள் கோபமாய் திட்டிக்கொண்டு போவது எனக்கு அடிக்கடி நடக்கிற சம்பவம். அது மாதிரி சமீபத்திலும் ஒரு பூனை நுழைந்தது. வழக்கம் போல் என நான் நினைக்க, வந்த பூனை போகவில்லை. தனித்துக் கேட்ட அதன் குரல் பிறகு கோரஸாய் ஒலிக்கத் தொடங்கியது. நான் புரியாமல் உள்ளே போனேன். லாஃப்ட்டில் இருந்த பழைய பெட்டிகளை நகர்த்தி எட்டிப் பார்க்க நான் திடுக்கிட்டு போனேன். அங்கே கறுப்பு வெள்ளையில் ஒரு தாய்ப் பூனையும் மிக அழகாய் பிரவுன் மற்றும் வெள்ளை கலந்த நிறத்தில் அதன் இரண்டு குட்டிகளும் இருந்தன. தாய் பூனை நான் பார்ப்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்து என்னைப் பார்த்து கோபமாய் சீற நான் பயந்து போய் இறங்கிக் கொண்டேன்.
பெரும்பாலும் மூடிக்கிடக்கிற கதவுகளைக் கொண்ட அபார்ட்மெண்ட் வீடுகள். சாத்திய கதவுகளுக்குப் பின் தங்களுக்கென ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்டு அதில் ராஜாவாக ராணியாக இளவரசர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள். அடுத்தவர் வீடுகளிலிருந்து வருவது பிரியாணி வாசமானாலும், எலெக்ட்ரிக் ஒயர் கருகுகிற வாசமானாலும் கவலைப்படாமல் மானாட மயிலாட-வில் மூழ்குபவர்கள். சென்னைப் பெருநகரில் இந்த மாதிரி அபார்ட்மெண்ட் ஒன்றில் வேறு வழியில்லாமல் வசிக்க நேர்ந்துவிடுகிற அவலத்தில் சின்னச் சின்ன சந்தோஷங்களும் உண்டு. அவைகளில் மிக முக்கியமாய் குழந்தைகள்.
சரசுராம் 9:52 மு.பகல் on நவம்பர் 12, 2009 நிரந்தர பந்தம் |
அளவாய் இருந்தாலும் அழகான பதிவு. மீன்ஸ்.. உன் எழுத்தை மீண்டும் படிப்பதில் இன்னும் சந்தோசம். தொடர்ந்து எழுது. உன்னிடம் நல்ல சிறுகதைகளையும் எதிர் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
Karthik 5:56 மு.பகல் on நவம்பர் 15, 2009 நிரந்தர பந்தம் |
உங்கள் மகனின் பதிவிற்க்கு, பதில் எழுதும் காலம் தூரத்தில் இல்லை….
காலம் Proportional-ஆக மாறுகிறது, டெக்னாலஜி Exponential-ஆக வளறுகிறது !!!