Updates from ஓகஸ்ட், 2007 Toggle Comment Threads | விசைப்பலகை சுருக்கவிசைகள்

  • சத்யராஜ்குமார் 6:12 am on August 31, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    சட்டம் ஒழுங்கு 

    அமெரிக்காவில் போலிஸுடனான அநுபவம் ஓரிரு முறை ஏற்பட்டிருக்கிறது.

    வீட்டுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையை எட்டிப் பிடிக்க முனையும்போதுதான் சற்று நேரமாகவே என் காரைப் பின் தொடர்ந்தபடி வந்து கொண்டிருந்த ஒரு ஷெரிப் கார் மண்டையில் மாட்டியிருக்கும் பட்டை விளக்கை ஜிகுஜிகுவென எரிய விட ஆரம்பித்தது. அதன் அர்த்தம் நான் காரை ஓரங்கட்டி நிறுத்த வேண்டும்.

    சரியான வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன், ஒவ்வொரு சிக்னலை கடக்கும்போதும் சிவப்பு விழுந்திருந்தால் நிறுத்தி, பச்சை பார்த்த பின்புதான் காரை நகர்த்தினேன். ரெஜிஸ்ட்ரேஷன் சரியாயிருக்கிறது. என்னிடம் என்ன தவறு என்று காரணம் எதையும் யோசிக்க முடியவில்லை. காருக்குள் இருந்தபடியே என் காரை புகைப்படம் எடுதுக் கொண்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பி விட்டு, பதிவு எண்ணை வைத்து குத்து மதிப்பாக என் ஜாதகத்தைக் கணித்துக் கொண்ட பின், இடுப்பிலிருந்த துப்பாக்கியில் ஒரு கையைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டே என் கார் ஜன்னல் அருகே குனிந்து, மடக்கிய விரலால் கண்ணாடியில் தட்டினார்.

    ஜன்னலை இறக்கினதும் – லைசன்ஸ் வாங்கி சோதித்த பிறகு, ” Sir, do you know why did I pull over you here ? ” என்றார் மிகவும் மரியாதையாக. அமெரிக்காவில் ‘ஸார்’ உபயோகிக்க மாட்டார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.

    உதட்டைப் பிதுக்கி, ” தெரியாது. ” என்பது போல் தலையசைத்தேன்.

    ” உங்கள் காரில் பின்புறம் ப்ரேக் லைட் எரியவில்லை. அது உங்களுக்கு மட்டுமல்ல, சாலையில் செல்லும் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இப்படி நீங்கள் செல்வது சட்டப்படி தவறு. ”

    ” ஐயாம் ஸாரி. ப்ரேக் லைட் எனக்குத் தெரிந்து சரியாகவே இருந்தது. பின் புறம் இருக்கும் அந்த விளக்கு எரியவில்லை என்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லையே. இதற்காக அபராதம் விதிக்கப் போகிறீர்களா? ” என்றேன்.

    ” உங்கள் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. At the same time we are here for your safety. ஆகவே அபராதம் ஏதும் விதிக்காமல் நட்பு ரீதியான எச்சரிக்கை (Friendly Warning) மட்டும் அளிக்கிறேன். Please repair this as soon as possible. ” என்று சொல்லி ஒரு மஞ்சள் காகிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.

    பின்னர் ஒரு முறை நண்பரின் பாஸ்போர்ட் தொலைந்து போனதால் புகார் தர போலிஸ் நிலையம் சென்றிருந்தேன். ஏதோ ஒரு MNC கம்பெனியின் வரவேற்பறை போலத்தான் இருந்தது. குதிரை வால் ஜடை போட்ட அழகான பெண் போலிஸ் அதிகாரி, ” ஸாரி. நாங்கள் எல்லோருமே ஒரு எமர்ஜென்ஸி கேஸில் கவனமாய் இருக்கிறோம். முப்பது நிமிஷங்களாவது நீங்கள் காத்திருக்க நேரிடும். பரவாயில்லையா ? ” என்றார்.

    அங்கே காத்திருந்த வேளையில் கன்ட்ரோல் பேனலில் பல்வேறு முக்கிய தெருக்களை சின்னச் சின்ன திரைகளில் சிறியதும் பெரியதுமாக லைவாக அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. போலிஸ் – மக்கள் உறவை பலப் படுத்தும் விவரணக் காகிதங்கள், உங்கள் உரிமை என்ன, உங்கள் கடமை என்ன என்பதை விவரிக்கும் சிறு அட்டைகள் போன்றவற்றைப் படிக்க முடிந்தது.

    சொன்னது போலவே சரியாக முப்பது நிமிஷம் கழித்து பேனாவும் பேப்பருமாய் வந்த அந்தக் காவல் தேவதை ‘ காபி சாப்பிட்டுப் போங்க ! ‘ என்று சொல்லாததுதான் பாக்கி என்கிற அளவுக்கு hospitality காண்பித்து புகாரை பதிவு செய்து கொண்டார்.

    சில மாதங்களுக்கு முன்பு அலுவலகம் போகும் வழியில் எனது கார் விபத்துக்குள்ளாகி விட, இன்னுமோர் போலிஸ் அனுபவம். அந்த ஆஜானுபாகுவான போலிஸ் அதிகாரி ஸ்தலத்துக்கு வந்த போது நான் விபத்து குறித்து இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தோடு கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.

    ” கொஞ்சம் இருங்க. ” என்று அவருக்கு சைகையால்தான் தெரிவித்தேன். மனிதர் பத்து நிமிஷத்துக்கும் மேல் நான் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தோடு பேசி முடிக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தார். ” என்ன திமிர் இருந்தா நான் ஒருத்தன் இங்க வந்து நிக்கறப்போ போன் பேசிட்டிருப்பே பேமானி ! ” என்று அவர் மனசுக்குள் கூட திட்டின மாதிரி தெரியவில்லை.

    குற்றவாளிகளிடம் எப்படி நடந்து கொள்ளும் என்று தெரியாது. ஆனால் பொதுமக்களிடம் சட்டம் ரொம்ப ஒழுங்குடன் நடப்பது ரசிக்கத் தகுந்தது.

     
  • சித்ரன் ரகுநாத் 6:01 am on August 30, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    ஏழு சக்கரங்கள் 

    யோகா சென்டரில் நடந்த ஒரு நாள் தியானப் பயிற்சி முகாமில் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நம் உயிராற்றலின் மையச் செயலகங்களாய் இந்த ஏழு சக்கரங்களும் விரிந்திருக்கின்றன என்கிற விஷயத்தை புதிய ஆச்சரியத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. வகுப்பு முடிந்ததும் சுவரில் மாட்டியிருந்த flex போஸ்டரைப் பார்வையிடும்போது, அதில் ஒரு பத்மாசன ஆளும் சுற்றிலும் கட்டங்களில் கலைடாஸ்கோப் வகையறா மாதிரி கலர் கலராய் சக்கரங்களின் படம். போட்டோஷாப்பில் வரைந்ததா? என்று மாஸ்டரிடம் கேட்டபோது, மேற்சொன்ன மனித உடல் சக்கரங்களின் உண்மையான புகைப்படம் என்றார்.

    ஆச்சரியமாய் மேற்கொண்டு சம்பாஷனையை வளர்த்தியபோது, கிர்லியன் போட்டோகிராபி என்று ஒன்று இருப்பதாகவும், அதன் மூலம் வெறும் கண்ணுக்குப் புலப்படாத இந்த மனித உடற்சக்கரங்களை படம் பிடிக்கமுடியும் என்று மட்டும் சொன்னார்.

    அப்புறம் கூகுளில் மேய்ந்தபோது இது பற்றி நிறைய தகவல்கள் கிடைத்தன. ஆரா (Aura) போட்டோகிராபி என்று தனியாக வேறு ஒன்று இருக்கிறதாம்.

    கூகுள் மற்றும் விக்கிபீடியாவில் முற்றிலும் மூழ்கி இதையெல்லாம் பற்றிப் படிப்பதற்கே ஒரு தியான மனப்பான்மை வேண்டும் போலும். இது போல விஷயங்களைக் கேள்விப்படும்போதெல்லாம் ‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். ‘ என்ற கண்ணதாசனின் வரிகளே எனது நினைவுக்கு வரும்.

     
  • சத்யராஜ்குமார் 6:57 am on August 29, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி  

    நாய்களின் மறுபக்கம் 

    வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் தெரு நாய்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல நாய்கள் சொகுசாக வாழ்கின்றன.

    நான் சென்னையில் இருந்த போது, அதிகாலையில் மெரினா கடற்கரையோரம் வாக்கிங் போவது வழக்கம். காரில் வந்திறங்கி பணக்கார எஜமானர்களோடு வாக்கிங் செல்லும் அல்சேஷன்களையும், ஜெர்மன் ஷெப்பர்ட்களையும் தினமும் பார்ப்பதுண்டு. Come. Stop. Sit. Quiet. சின்னச் சின்ன ஆங்கில வார்த்தைகளால் அவர்கள் அதட்டுவதைப் புரிந்து அவைகள் கீழ்ப்படிவதைப் பார்த்து ஆச்சரியப்படுவேன்.

    கடற்கரைச் சாலைக்கு எதிர்ப்புறம் கசகசப்பான குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. அங்கே வசிக்கும் பல தெரு நாய்கள் கார்களும், பஸ்களும் விரையும் அகலமான கடற்கரைச் சாலையை இரண்டு பக்கமும் பார்த்து விட்டு அநாயசயமாக விருட்டென்று க்ராஸ் பண்ணுவதையும் அதை விட ஆச்சர்யமாய்க் கவனித்திருக்கிறேன்.

    அன்றைக்கு காரில் வந்த அல்சேஷன், ஒரு தெரு நாயின் சாகசம் பார்த்து உற்சாகமடைந்து, பிணைக்கயிறை விடுவித்துக் கொண்டு அதே போல் பீச் ரோட்டைக் கடக்க முயன்றது. பாதி ரோட்டுக்கு வந்ததும், இங்குமங்கும் பறந்த கார்களைப் பார்த்து மிரண்டு போனது. செய்வதறியாமல் உறைந்து போய் நின்றிருந்த அந்த மேட்டுக்குடி நாயை கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு லாரி ச்சத்தென்று தேய்த்தது.

     
    • johan paris 8:35 முப on ஓகஸ்ட் 29, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      மேட்டுக்குடி நாயென்றில்லைப் பிள்ளைகள் கூட தவித்துத்,தனித்துவிடும் சம்பவம் பல உண்டு.
      சில வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள்; அதனால் இயல்பான வாழும் கலை மறக்கப்பட்டவர்கள்.

    • சத்யராஜ்குமார் 8:41 முப on ஓகஸ்ட் 29, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      நிச்சயமாக johan paris ! அதைச் சொல்லத்தான் இந்தப் பதிவு. தங்கள் வரவுக்கு நன்றி.

    • gowtham 3:07 முப on செப்ரெம்பர் 3, 2007 நிரந்தர பந்தம் | மறுமொழி

      This is true with us also.A pampered(domesticated in case of dogs) kid gets hurt for small discomforts and take wrong directions.

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
மறுமொழி
e
தொகு
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
நிராகரி