மைனஸ் அய்யனார்


பத்து வருடங்களுக்கு முன் கம்பம் அருகே ஒரு குக்கிராமம் சென்றது இன்று திடீரென ஞாபகம் வந்தது. நண்பரின் குலதெய்வம் கோயிலில் நேர்த்திக்கடன் பூஜை. கோயில் என்றதும் நான் நினைத்த மாதிரி கோபுரம் எதுவும் இல்லை. வறண்ட வெளியின் நடுவே பிரம்மாண்டமாய் ஓர் ஐயனார் சிலை. அருகே அடர்ந்த மரம் ஒன்று. துரத்தில் சில பனைமரங்கள். டிபிகல் பாரதிராஜா படத்தில் பார்க்கக் கிடைக்கும் மனிதர்கள். விறகுப் புகையினூடே பொங்கும் பொங்கல். பரிதாப கிடா மாலையிடப்பட்டு மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு ச்சத். இரண்டு பெண்களுக்கு அருள் வர, குறி கேட்க சிறிய க்யூ. நண்பர்கள். உறவினர்கள். சாப்பாடு. அரட்டை. சாயந்தரம் கூட்டம் கலைந்தது.

போன வார இறுதியில் மேரிலாண்ட் நேஷனல் ஸ்டேட் பார்க் சென்றிருந்தோம். அடர்ந்த மரங்களுக்கு நடுவில் – நண்பர்கள். குழந்தைகள். ஸ்நாக்ஸ். பானங்கள். விளையாட்டு. அரட்டை. குளிர்பதனப்படுத்தப்பட்ட கிடாவை போர்ட்டபிள் BBQ க்ரில்லில் வறுத்துக் கொறித்தோம். சாயந்தரம் கூட்டம் கலைந்தது. அய்யனார் மட்டும் இல்லை.