மூவர் – குறுங்கதைகள்.


வலைப்பூக்களுக்கு டெம்ப்ளேட் மாற்றுவதைப் போல கதைக் கருக்களுக்கும் சுலபமாய் மாற்றலாம். இதோ ஒரே கதைக் கரு இரண்டு வேறு டெம்ப்ளேட்களில்:


Black & White Classic Template (கொஞ்சம் பழசு):
காரை கராஜுக்குள் சொருகி விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் அனிதா. வீடு முழுக்க சாம்பார் மணம். காரப்பெட் எங்கும் வேக்வம் க்ளீனர் ஓடின தடம். கிச்சனிலிருந்து அவளுக்காகத் தயாரித்த காபிக் கோப்பையை நீட்டியபடி. அவளருகே அமர்ந்தான் கார்த்திக். ” அனிதா, என்னோட ஜாப் கான்ட்ராக்ட் முடிஞ்சு இன்னியோட ஆறு மாசமாச்சு. இன்னும் வேற வேலை கிடைக்கலை. இப்ப எனக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை நீதான். ”

” நானா ? ”

” ஆமா. உன் ஃப்ரெண்ட் சித்ரா கூட இன்னிக்குப் பேசினேன். உங்க காலேஜ்மேட் நரேன் நீ வேலை பார்க்கிற அதே கம்பெனியில் பெரிய பதவிக்கு வந்திருக்காராம் ? அவர் பார்த்து தலையசைச்சு பலருக்கும் வேலை கிடைச்சிருக்காம். நீ அவர் கிட்டே எனக்காகப் பேசிப் பாரேன். ”

அனிதா கவலையுடன் அவனைப் பார்த்தாள். ” கார்த்திக், உங்களுக்கு வேலை கிடைக்க ஒரு வாய்ப்பு என் மூலமா இருக்குன்னா இந்நேரம் அதை நான் முயற்சி பண்ணிப் பார்க்காம இருப்பேனா? நரேன் முந்தி மாதிரி இல்லை. நிறைய மாறிட்டான். ஏற்கெனவே அவன் கிட்டே பேசிட்டேன். ஆறு மாசமா சும்மா இருக்கிறவருக்கு என்னால வேலை குடுக்க முடியாதுன்னு திமிரா பதில் சொல்லிட்டான். ”

சொல்லி விட்டு சட்டென்று வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அவள் மனசு நரேனிடம் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டது. ” ஸாரி நரேன், இவரோட நிலைமை அறிஞ்சு நீயா என் கிட்டே அவருக்கு வேலை ஏற்பாடு பண்ணப் போறதா சொன்னே. உனக்கு வேலை இல்லைங்கிற காரணத்துக்காக அஞ்சு வருஷம் முன்னாடி நம்ம காதலையே சாகடிச்சிட்டு கார்த்திக்கைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட குற்ற உணர்ச்சியால அந்த உதவியை நான் மறுத்துட்டேன். இப்ப இவர் கிட்டே உன்னை திமிர் பிடிச்சவனா காட்டறதுக்கு என்னை மன்னிச்சிடு ப்ளீஸ். ”


Contemporary Template (சற்றே புதுசு):
நரேன் காட்டிய இருக்கையில் கார்த்திக் சற்றே மரியாதையோடு அமர்ந்தான். சிகரட்டை வாயில் பொருத்திக் கொண்டே நரேன் புன்னகைத்தான்.” கார்த்திக், நான் ரொம்ப ஃப்ளக்சிபிள்! மேனேஜர்ங்கற பந்தா எல்லாம் காட்ட மாட்டேன். நீ’ங்க என் கிட்ட ஃப்ரீயா பழகலாம். உங்களைப் பத்தி சொல்லுங்க. ”

” அஞ்சு வருஷமா இங்கே வேலையில் இருக்கேன்…. நாலு ப்ராடக்ட் ரிலீஸ்க்கு அடிமட்டத்திலிருந்து உதவியிருக்கேன்…. ”

நரேன் கையமர்த்தினான். ” உங்க ஜாப் ஹிஸ்டரி ஏற்கெனவே பார்த்துட்டேன். குடும்பம் பத்தி சொல்லுங்க. சொந்த ஊர் எது? கல்யாணம் ஆயிருச்சா ? குழந்தைங்க எத்தனை ? ”

” கல்யாணம் ஆயிருச்சு. இன்னும் குழந்தை இல்லை. ஒய்ப் பேர் அனிதா. ”

” அனிதா ? ” நிமிர்ந்தான். ” எந்த ஊர் ? ”

” பொள்ளாச்சி. ஏன் கேக்கறி’ங்க ? ”

” இல்லை என் கூட ஒரு அனிதா படிச்சா. அந்த அனிதாவோட கணவர் பேரும் கார்த்திக்தான் அதான் கேட்டேன். உங்க மனைவி அனிதாவுக்கு சிஸ்டர்ஸ் யாரும் இருக்காங்களா ? ”

” வனிதான்னு ஒரு அக்கா இருக்கா. ”

” ஓ. அப்ப நான் செரல்ற அனிதா வேற. ” என்றவன் பேச்சை வேறு திசைக்கு மாற்றினான்.

அன்றைக்கு சாயந்திரம் மேனேஜிங் டைரக்டருடனான ஒன் ஆன் ஒன் மீட்டிங்கில் நரேன் சொன்னான். ” கார்த்திக்கோட வேலையில் நிறைய ஓட்டைகள் இருக்குங்கறதைக் கண்டு பிடிச்சிருக்கேன். அவர் இத்தனை வருஷமா எல்லாரையும் சாமர்த்தியமா ஏமாத்தியிருக்கார். இன்னியோட அவரை வேலையிலிருந்து தூக்கிரலாம். “

Advertisements