சிவப்புக் கொடி


மணல் அழகைப் பற்றிய பதிவு என்றால் இது அதே களத்தின் ஆபத்தைப் பற்றியது. முதல் நாள் இரவு நிலா ஒளியில் கடலில் குளித்து உற்சாகித்த நாங்கள், அடுத்த நாள் சூரிய வெப்பத்தில் கடல் நீராட விரும்பினோம்.

நல்ல வெய்யில். பீச் குடையை மணலில் நட்டு விட்டு, சுற்றிலும் பார்த்த போதுதான் இருநூறடிக்கு ஒன்றாக அமைக்கப் பட்டிருந்த Life Guard Booth-களின் உச்சியில் சிவப்புக் கொடி பறந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். இது ‘ரெட் அலர்ட் டே’ என்றார்கள். உற்சாக மிகுதியில் கடலின் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று விடுபவர்களைப் பார்த்து விசில் சப்தமெழுப்பியும், சைகை மூலமாகவும் எச்சரித்தபடி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள் உயிர் காக்கும் சேவையர்கள்.

நேற்றைய அலையின் வருடலுக்கும், இன்றைய அலையின் ஆவேசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை என்னால் தெளிவாக உணர முடிந்தது. ஒரு நிமிடம் இடுப்பளவு ஆழமாய் இருக்கும் இடம் மறு நிமிடம் மார்பளவு ஆழமாய் மாறி விடுகிற விபரீதம் புரிந்தது. சற்று நேரத்தில் வெய்யிலின் நிறம் மங்கி கரு மேகங்கள் சூழ ஆரம்பிக்க, எல்லோரையும் கடலை விட்டு வெளியே வரச் சொல்லி விட்டார்கள். அத்தனை நேரமாக வண்ண வண்ணப் புள்ளிகளாய்க் கடலுக்குள் தெரிந்த மனிதர்கள் மறைந்து இப்போது வெறும் கடல்.

Board Walk அருகே இருந்த திறந்த வெளி ஷவரில் கடல் உப்பைக் கழுவிக்கொண்டிருந்த போது பலத்த இடியும் மின்னலும் கண்ணை வெட்டி காதைத் தொட்டன. தூரத்து வானத்தையே சற்று நேரம் வெறித்திருந்த அகில் (மகன். 4th Grade முடித்துள்ளான்), ” அப்பா, மழை பதினைந்து மைல் தூரத்தில் இருக்கு. ” என்றான்.

நான் சிரித்தேன். ” உனக்கெப்படித் தெரியும் ? ”

” அதை அளவிட எனக்குத் தெரியும். மின்னல் அடித்து எவ்வளவு விநாடிகள் கழித்து இடியின் சத்தம் கேக்குதோ அவ்வளவு தூரத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது என்று அர்த்தம். ”

அவன் சொல்வது சரியோ தவறோ தெரியாது. கேட்க சுவாரஸ்யமாய் இருந்தது.