நாய்ப் பிழைப்பு


சமீபத்தில் இரண்டு நாய்ச் செய்திகள் காதில் விழுந்தன.

ஒன்று உள்ளூர் செய்தி. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் காருக்குள் தனியாய் விடப்பட்ட இரண்டு வளர்ப்பு நாய்கள் ஏசி நின்று போனதால் வெப்பம் தாங்காமல் இறந்து போயின. இந்த மாதிரி பரிதாப முடிவு நாய்களுக்கு ஏற்பட்டிருப்பது எங்களுக்குத் தெரிந்து இதுவே முதல் முறை என்று போலிஸ் இலாகா தெரிவிக்கிறது.

இன்னொன்று தேசியச் செய்தி. NFL விளையாட்டு வீரர் மைக்கேல் விக் சட்டவிரோதமாக நாய்ச் சண்டை நடத்தி வரும் நிறுவனத்தோடு தொடர்புள்ளவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி குற்றத்தை ஒப்புக் கொண்டும் இருக்கிறார். $305,200 அபராதமும், ஐந்து வருட சிறைத் தண்டனைக்கும் வாய்ப்பிருக்கிறதாக மீடியாக்கள் குறி சொல்கின்றன.

இங்கே நாய்கள் ஏசியில் வசித்து மெத்தையில் உறங்குகின்றன. காரில் ஓட்டுநரின் மடியில் அமர்ந்து கொண்டு சொகுசாகப் பயணிக்கின்றன. அள்ளுவதற்கு சிறிய ப்ளாஸ்டிக் முறத்தோடு பின்தொடரும் அழகான பெண்களுடன் அப்பார்ட்மென்ட்டைச் சுற்றி காலையும், மாலையும் பெருமிதமாய் உலா வருகின்றன. ” ஹனி. ” என்று செல்லமாய்க் கொஞ்சப்படுகின்றன. ” ஏங்க உங்க நாயைக் கொஞ்சம் பார்த்துப் பிடிச்சிக்கங்க. எங்க பையன் பயந்துக்கறான். ” என்றால், ” Are you calling him a dog? Don’t be rude. ” நாயை நாய் என்று சொன்னதற்காக அப்பாவிகள் வாங்கிக் கட்டிக் கொள்வதை வாலாட்டியபடி ரசிக்கின்றன.

என்னுடன் வேலை பார்த்த ஒரு பெண் இரண்டு டாலருக்கு காபி வாங்கக் கூட யோசிப்பவள். நாய்க் குட்டிக்கு மெடிக்கல் எமர்ஜென்சி ஏற்பட்டுப் போய் இருபதாயிரம் டாலர்கள் செலவழித்து ஆபரேஷன் செய்துள்ளாள்.

தாராளமாய் அமெரிக்காவில் நாய்ப் பிழைப்பு பிழைக்கலாம்.