வாயும் பாயும்


அது அடிக்கடி கேட்கிற குரல்தான். பாய் விற்பனைக்காரனுடைது. பாய்….பாயேய்ய்ய்ய்ய்ய்…. என்று குறிப்பிட்ட இடைவெளிகளில் தெருவிலிருந்து உச்சஸ்தாயியில் கிளம்பி என் அபார்ட்மெண்ட் ஜன்னலை அடைகிற அந்தக் குரலுக்குச் சொந்தக்காரனை நான் ரொம்ப நாள் பார்த்திருக்கவில்லை. உயிரைக் கொடுத்து கத்தியபடி இப்படி தெருவில் பொருள் விற்கிறவனிடம் இந்த ரெஸிடென்ஷியல் ஏரியாவில் யாராவது வாங்குகிறார்களா என்பதைப் பற்றியும் அடிக்கடி யோசித்திருக்கிறேன்.

இன்று அலுவலகம் கிளம்பும்போது அவனைப் பார்த்தேன். ஒரு சைக்கிளும் அதன் கேரியரில் சில பாய்களும் அவனிடம் இருந்தன. கருத்து மெலிந்த தேகத்துடன் காணப்பட்டான். அவன் என்னைப் பார்த்ததும் “பாய்…. பாயேய்ய்ய்ய்ய்ய்….” என்றான். நான் உடனே திடுக்கிட்டுப் பார்த்ததற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 1. இவ்வளவு சின்ன உருவத்திலிருந்து இத்தனை பெரிய குரலா?. 2. கத்தும்போது அவன் வாய் அசையவேயில்லை.

கூர்ந்து கவனித்த போது அவன் ஹாண்டில் பாரில் அடிக்கடி ஒரு ஸ்விட்சை அழுத்துவதையும், அதன் விளைவாக அடுக்கப்பட்டிருந்த பாய்களுக்கு அடியில் மறைவாய் ஒரு ஸ்பீக்கர் (அவன் குரலிலேயே) பாய் விற்பதையும் பார்த்தேன்.

Innovative Business Thinking பார்த்து புல்லரித்துவிட்டது.