ஏழு சக்கரங்கள்


யோகா சென்டரில் நடந்த ஒரு நாள் தியானப் பயிற்சி முகாமில் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நம் உயிராற்றலின் மையச் செயலகங்களாய் இந்த ஏழு சக்கரங்களும் விரிந்திருக்கின்றன என்கிற விஷயத்தை புதிய ஆச்சரியத்துடன் தெரிந்து கொள்ள முடிந்தது. வகுப்பு முடிந்ததும் சுவரில் மாட்டியிருந்த flex போஸ்டரைப் பார்வையிடும்போது, அதில் ஒரு பத்மாசன ஆளும் சுற்றிலும் கட்டங்களில் கலைடாஸ்கோப் வகையறா மாதிரி கலர் கலராய் சக்கரங்களின் படம். போட்டோஷாப்பில் வரைந்ததா? என்று மாஸ்டரிடம் கேட்டபோது, மேற்சொன்ன மனித உடல் சக்கரங்களின் உண்மையான புகைப்படம் என்றார்.

ஆச்சரியமாய் மேற்கொண்டு சம்பாஷனையை வளர்த்தியபோது, கிர்லியன் போட்டோகிராபி என்று ஒன்று இருப்பதாகவும், அதன் மூலம் வெறும் கண்ணுக்குப் புலப்படாத இந்த மனித உடற்சக்கரங்களை படம் பிடிக்கமுடியும் என்று மட்டும் சொன்னார்.

அப்புறம் கூகுளில் மேய்ந்தபோது இது பற்றி நிறைய தகவல்கள் கிடைத்தன. ஆரா (Aura) போட்டோகிராபி என்று தனியாக வேறு ஒன்று இருக்கிறதாம்.

கூகுள் மற்றும் விக்கிபீடியாவில் முற்றிலும் மூழ்கி இதையெல்லாம் பற்றிப் படிப்பதற்கே ஒரு தியான மனப்பான்மை வேண்டும் போலும். இது போல விஷயங்களைக் கேள்விப்படும்போதெல்லாம் ‘தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் அது சிலைதான். ‘ என்ற கண்ணதாசனின் வரிகளே எனது நினைவுக்கு வரும்.