சட்டம் ஒழுங்கு


அமெரிக்காவில் போலிஸுடனான அநுபவம் ஓரிரு முறை ஏற்பட்டிருக்கிறது.

வீட்டுக்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையை எட்டிப் பிடிக்க முனையும்போதுதான் சற்று நேரமாகவே என் காரைப் பின் தொடர்ந்தபடி வந்து கொண்டிருந்த ஒரு ஷெரிப் கார் மண்டையில் மாட்டியிருக்கும் பட்டை விளக்கை ஜிகுஜிகுவென எரிய விட ஆரம்பித்தது. அதன் அர்த்தம் நான் காரை ஓரங்கட்டி நிறுத்த வேண்டும்.

சரியான வேகத்தில்தான் வந்து கொண்டிருந்தேன், ஒவ்வொரு சிக்னலை கடக்கும்போதும் சிவப்பு விழுந்திருந்தால் நிறுத்தி, பச்சை பார்த்த பின்புதான் காரை நகர்த்தினேன். ரெஜிஸ்ட்ரேஷன் சரியாயிருக்கிறது. என்னிடம் என்ன தவறு என்று காரணம் எதையும் யோசிக்க முடியவில்லை. காருக்குள் இருந்தபடியே என் காரை புகைப்படம் எடுதுக் கொண்டு, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பி விட்டு, பதிவு எண்ணை வைத்து குத்து மதிப்பாக என் ஜாதகத்தைக் கணித்துக் கொண்ட பின், இடுப்பிலிருந்த துப்பாக்கியில் ஒரு கையைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டே என் கார் ஜன்னல் அருகே குனிந்து, மடக்கிய விரலால் கண்ணாடியில் தட்டினார்.

ஜன்னலை இறக்கினதும் – லைசன்ஸ் வாங்கி சோதித்த பிறகு, ” Sir, do you know why did I pull over you here ? ” என்றார் மிகவும் மரியாதையாக. அமெரிக்காவில் ‘ஸார்’ உபயோகிக்க மாட்டார்கள் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை.

உதட்டைப் பிதுக்கி, ” தெரியாது. ” என்பது போல் தலையசைத்தேன்.

” உங்கள் காரில் பின்புறம் ப்ரேக் லைட் எரியவில்லை. அது உங்களுக்கு மட்டுமல்ல, சாலையில் செல்லும் ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்குகிறது. இப்படி நீங்கள் செல்வது சட்டப்படி தவறு. ”

” ஐயாம் ஸாரி. ப்ரேக் லைட் எனக்குத் தெரிந்து சரியாகவே இருந்தது. பின் புறம் இருக்கும் அந்த விளக்கு எரியவில்லை என்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லையே. இதற்காக அபராதம் விதிக்கப் போகிறீர்களா? ” என்றேன்.

” உங்கள் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. At the same time we are here for your safety. ஆகவே அபராதம் ஏதும் விதிக்காமல் நட்பு ரீதியான எச்சரிக்கை (Friendly Warning) மட்டும் அளிக்கிறேன். Please repair this as soon as possible. ” என்று சொல்லி ஒரு மஞ்சள் காகிதத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.

பின்னர் ஒரு முறை நண்பரின் பாஸ்போர்ட் தொலைந்து போனதால் புகார் தர போலிஸ் நிலையம் சென்றிருந்தேன். ஏதோ ஒரு MNC கம்பெனியின் வரவேற்பறை போலத்தான் இருந்தது. குதிரை வால் ஜடை போட்ட அழகான பெண் போலிஸ் அதிகாரி, ” ஸாரி. நாங்கள் எல்லோருமே ஒரு எமர்ஜென்ஸி கேஸில் கவனமாய் இருக்கிறோம். முப்பது நிமிஷங்களாவது நீங்கள் காத்திருக்க நேரிடும். பரவாயில்லையா ? ” என்றார்.

அங்கே காத்திருந்த வேளையில் கன்ட்ரோல் பேனலில் பல்வேறு முக்கிய தெருக்களை சின்னச் சின்ன திரைகளில் சிறியதும் பெரியதுமாக லைவாக அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. போலிஸ் – மக்கள் உறவை பலப் படுத்தும் விவரணக் காகிதங்கள், உங்கள் உரிமை என்ன, உங்கள் கடமை என்ன என்பதை விவரிக்கும் சிறு அட்டைகள் போன்றவற்றைப் படிக்க முடிந்தது.

சொன்னது போலவே சரியாக முப்பது நிமிஷம் கழித்து பேனாவும் பேப்பருமாய் வந்த அந்தக் காவல் தேவதை ‘ காபி சாப்பிட்டுப் போங்க ! ‘ என்று சொல்லாததுதான் பாக்கி என்கிற அளவுக்கு hospitality காண்பித்து புகாரை பதிவு செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன்பு அலுவலகம் போகும் வழியில் எனது கார் விபத்துக்குள்ளாகி விட, இன்னுமோர் போலிஸ் அனுபவம். அந்த ஆஜானுபாகுவான போலிஸ் அதிகாரி ஸ்தலத்துக்கு வந்த போது நான் விபத்து குறித்து இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தோடு கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.

” கொஞ்சம் இருங்க. ” என்று அவருக்கு சைகையால்தான் தெரிவித்தேன். மனிதர் பத்து நிமிஷத்துக்கும் மேல் நான் இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்தோடு பேசி முடிக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தார். ” என்ன திமிர் இருந்தா நான் ஒருத்தன் இங்க வந்து நிக்கறப்போ போன் பேசிட்டிருப்பே பேமானி ! ” என்று அவர் மனசுக்குள் கூட திட்டின மாதிரி தெரியவில்லை.

குற்றவாளிகளிடம் எப்படி நடந்து கொள்ளும் என்று தெரியாது. ஆனால் பொதுமக்களிடம் சட்டம் ரொம்ப ஒழுங்குடன் நடப்பது ரசிக்கத் தகுந்தது.