வந்தபின் காத்தல்


Case 1: சில நாள் முன்பு, பின் புறத்தில் உட்காருமிடத்தில் வந்த ஒரு கட்டியினால் வேதனை மற்றும் அசெளகரியத்தால் மிக அவஸ்தையுற்ற என் நண்பனொருவன் மருத்துவரை அணுகினான். நன்கு ஆராய்ந்த பிறகு அவர் அவனிடம் உடனடியாக அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றாவிட்டால் பின்னால் பெரிய பிரச்சனை என்று சொல்லி சென்னை போரூரிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு காலை ஏழு மணிக்கு வரச்சொன்னார். ரூ.10000 செலவாகுமென்றும் சொன்னார். அறுவை சிகிச்சை என்றதும் பயந்து குழப்பமான நண்பன் எதற்கும் ஒரு “Surgical opinion”- க்காக இன்னொரு டாக்டரைப் பார்த்தான். 100 ரூபாய் கட்டணம் வாங்கிக்கொண்டு, அவர் எழுதிக் கொடுத்த 28 ரூபாய் 50 பைசா மருந்தில் அவன் கட்டி காணாமல் போய்விட்டது.

Case 2: சிக்குன் குனியா சென்னையை பாடாய் படுத்திக்கொண்டிருந்த சமயத்தில் அலுவலகத்தில் என்னுடன் வேலை செய்யும் பெண்மணிக்கு கழுத்தில் ஒரு பகுதியில் ஒரு சின்ன தக்காளி அளவு திடீரென்று வீங்கிவிட்டது. டாக்டரைப் போய்ப் பார்த்தபோது அவரும் Case 1-ல் கண்டதுபோலவே ஆபரேஷனுக்குப் பரிந்துரைத்திருக்கிறார். பயந்துபோன அந்தப் பெண்மணியை, நான் மூன்றாவது சிக்னலுக்கு வலப்புறம் திரும்பினால் இடதுபுறம் இரண்டாவது ரோட்டில் உள்ள இன்னொரு டாக்டரைப் போய்ப் பார்க்கச் சொன்னேன். அவர் இரண்டு மாதம் வெறும் மாத்திரைகள் மட்டும் சாப்பிடச் சொல்லி கட்டியைக் கரைத்து விட்டார். கழுத்து கத்தியிலிருந்து தப்பித்தது.

Case 3: என் அக்காவின் குழந்தை ஒரு வருடமாய் அடிக்கடி வயிற்றுவலி என்று புகார் சொல்லியபடி இருக்க, கோவையில் நன்கு தெரிந்த ஒரு மருத்துவமனையின் பிரதான டாக்டர் ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்து வயிற்றுக்குள் ஏதோ சின்ன கட்டி மாதிரி இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் அதை அறுவை சிகிச்சை மூலம் சரிபண்ணிவிடலாம் என்றும் உத்தரவாதமளித்தார். Case 1 மற்றும் Case 2 கொடுத்த அனுபவத்தால் அக்காவை இன்னொரு டாக்டரிடம் அதேபோல் Surgical Opinion கேட்கச் சொன்னேன். என்ன நடந்திருக்கும் என்று நீங்களே ஊகித்துக்கொண்டீர்களா? இன்னொரு டாக்டர் அறுவை சிகிச்சையெல்லாம் பண்ணாமலே குட்டியின் பிரச்சனையை சரிபண்ணிவிட்டார்.

தம்மிடம் வருகிறவர்களுக்கு என்ன பிரச்சனை, என்ன நோய் என்றெல்லாம் பகுத்தாராய்ந்து சரியான ட்ரீட்மெண்ட்க்கு பரிந்துரைக்கிற சரியான டாக்டர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பது நகர வாழ் மக்களுக்கு கொஞ்சம் கடினமான வேலைதான் என்பது கொஞ்சம் பயமூட்டக்கூடிய விஷயமாகத்தான் இருக்கிறது.

நல்ல டாக்டர் மாட்டினால் நீங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.