அந்த மூன்று மணி நேரம்


தென்றல் ஆறு மாதக் குழந்தை. அம்மா இல்லாமல் மூன்று மணி நேரங்கள் அவளை வைத்து சமாளிக்க முடியுமா என்பதே சவால். தென்றலின் அம்மாவுக்கு காய்ச்சல் வரும்போலிருந்ததால் உமாவின் பிறந்த நாள் பார்ட்டிக்கு நான் மட்டும் தனியாக அவளை எடுத்துச் செல்வதென்று முடிவு. துணைக்கு பெரியவன் அகில்.

டயப்பர், பாட்டில், பால் பவுடர் இத்யாதிகளோடு ஒரு கைப்பை. போர்க்களத்துக்குச் செல்வது போல அத்தனை முன்னேற்பாடுகளும் தயார். திடீரென அம்மாதான் வேணும் என்று அவள் அடம் பிடித்தால் என்ன செய்வது என்பது புரியாத புதிர். ‘ஸோ வாட்?’ என்று அலட்சியமாய்க் கேட்கும் குருட்டு தைரியம்.

Thendral - 6 months

கார் சீட்டில் தென்றலை பெல்ட் போட்டு இறுக்கி விட்டு ஸ்டார்ட் செய்தேன். ” அழுதா பால் பாட்டிலை வாயில் வைடா. ” என அகிலுக்குக் கட்டளை. கார் இரண்டு மைல் கடப்பதற்குள் சிணுங்க ஆரம்பித்தாள். பால் பாட்டில் அவளிடம் போணியாகவில்லை. சிணுங்கல் அழுகையாக மாறும் சாத்தியக் கூறுகள் தெரிந்தன.

NPR ரேடியோவை நிறுத்திட்டு வாஜி வாஜி போடுங்கப்பா. ” என்றான் அகில். மேஜிக்தான். கப்பென்று அமைதியாகி விட்டாள். பதினெட்டு மைல் தொலைவு. டோல் ரோடு எடுத்தால் அரை மணி நேரத்தில் போய் விடலாம். எட்டு மணிக்கெல்லாம் பார்ட்டியில் இருந்தோம். இரண்டு மூன்று குழந்தைகளைப் பார்த்ததும் உற்சாகமாய் விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஒன்பது மணி ஆன போது அம்மா ஞாபகமா இல்லை தூக்கமா தெரியவில்லை. வீர் வீர் என அழத் துவங்கினாள். இப்போது உதவிக்குப் பலர் இருந்தார்கள். ஒருவர் கிலுகிலுப்பையை ஆட்ட, இன்னொருத்தர் பால் பாட்டிலை வாயில் பொருத்த, மேலும் ஒருத்தர் ‘ஸ்விங்’கில் போட்டு ஆட்டி விட, ஆறாவது நிமிஷம் அயர்ந்து தூங்க ஆரம்பித்தாள்.

பதினோரு மணிக்கு பார்ட்டி முடிந்து மீண்டும் கார் ஸீட்டில் பெல்ட் போடும் போது மறுபடி விழித்துக் கொண்டாள் தென்றல். தூக்கம் கலைந்த கோபத்தில் மெதுவாய் அழுகைக் குரலை வெளியிட ஆரம்பிக்க, இப்போது எனக்குப் பதற்றமில்லை. மூன்று மணி நேர முன் அனுபவம் உள்ளதே !

வாஜி வாஜி போட்டு விட்டேன். ஒரு பால் பாட்டிலும், கொஞ்சம் ஏ ஆர் ரஹ்மானும் இருந்தால் இன்னும் பத்துக் குழந்தைகளை அழாமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது இன்று பட்டறிவு.