வரிக்கு வரி


நூலகங்கள் என்பது புத்தகங்களாலானது என்று இங்கே வரும் வரை நம்பிக் கொண்டிருந்தேன். அச்சுப் புத்தகங்கள் தவிர ஒலி ஒளி நாடாக்கள் உள்ளன. DVD உள்ளன. Cannes, Oscar – ல் பங்கு பெற்ற, பரிசு பெற்ற பல படங்களை நூலகங்களில்தான் எடுத்துப் பார்த்திருக்கிறேன். இணைய டெர்மினல்களும் உள்ளன. இந்த தேசத்துக்கு வந்த புதிதில் அந்த டெர்மினல்கள் எனக்கு மிகவும் உபயோகப்பட்டன. Reading Success, Writing Success போன்று சிறியவர்களுக்கும், பெரியவர்களுக்குமான பட்டறைகளும் வருடம் பூராவும் நடக்கின்றன.

இரண்டு புத்தகங்கள்தான் எடுக்க முடியும் என்ற என் ஜீன் வழி எண்ணமும் பத்துப் பன்னிரண்டு புத்தகங்களை அடுக்கிக் கொண்டு செல்பவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போனது. குழந்தைகள், பதின்மர், பெரியவர்கள் என்று குடும்பத்தில் அத்தனை பேருக்குமாக அள்ளிக் கொண்டு போகலாம். ஒரு மாதம் படிக்கலாம். முடியவில்லை என்றால் இணையம் வழியாகவோ, தொலைபேசி வழியாகவோ இன்னொரு மாதத்துக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

அன்றைக்கு அலுவலத்திலிருந்து வீடு திரும்பும் போது புத்தகங்களையும் DVD-க்களையும் ரிட்டர்ன் பண்ணி விட்டு மேலும் எடுத்துக் கொண்டதைப் பார்த்து Car Pool இந்திய நண்பர் ஆச்சர்யப்பட்டார்.

” பரவாயில்லை. அரசாங்கம் உங்களிடம் வசூலிக்கும் வரிப் பணத்தை நீங்க முழுமையா உபயோகிக்கறிங்க. ”

வரிக்கு வரி விடாமல் படிப்பது என்பதற்கு இரண்டாவது அர்த்தம் இருப்பது அன்றைக்குத் தெரிந்தது.