தேடல்


இப்போது 7 வயதாகும் என் மகனுக்கு ABCD தெரிய ஆரம்பித்தபோதே Google தெரிந்து விட்டது. மில்கி வே என்றால் என்ன? ஸோலார் ஸிஸ்டத்தில் உள்ள கோள்கள் எவை எவை? இந்தியாவிலுள்ள முக்கியமான லேண்ட்மார்க்குகள் என்னென்ன? Igloo எப்படியிருக்கும், டைட்டானிக் எப்படி மூழ்கியது? தீவுகள் எனப்படுபவை உண்மையில் எப்படி இருக்கும்? போன்ற விஷயங்களை என் பக்கத்தில் அமர்ந்து இணையத்தில் தேடி தெரிந்துகொண்டான்.

ஸ்கூலில் Activity Sheets என்று சிலது கொடுத்து இன்ட்டர்னெட் உபயோகத்தைத் தூண்டுகிறார்கள். அதிகம் சொல்லிக்கொடுக்காத ஆனால் மாணவனையே கண்டுபிடித்து எழுதச் சொல்லும் வகையில் அதில் நிறைய விஷயம் இருக்கிறது. உதாரணம் சில சாப்பாட்டு அயிட்டங்களின் பெயர் எழுதி அவை இந்தியாவில் எந்த மாநிலங்களில் உட்கொள்கிறார்கள் என்று கட்டங்களில் நிரப்ப வேண்டும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் குழந்தைகளுக்கு என்றில்லை, பெரியவர்களாகிய நமக்கே தெரியாதுதான். இருக்கும் குறைந்த அவகாசத்தில் Activity Sheets பூர்த்தி செய்ய, இட்லி, தோசை என்று எல்லாவற்றையும் பற்றி பக்கம் பக்கமாய் விவரங்கள் கொடுக்கும் wikipedia – வை பயன்படுத்தி விடை காண்கிறோம்.

வீட்டில் இன்டெர்நெட் இருந்தால் பசங்களுக்கு வசதிதான். சொல்லாமலே இன்ட்டர்னெட் பற்றி அறிந்து கொள்ளும் இந்தப் பசங்களுக்கு அதன் உண்மையான உபயோகம் பற்றி சொல்லிக் கொடுப்பது அவசியம் என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட வயது வரும்வரை parental guidance ரொம்ப முக்கியம்.

ஒருநாள் மகனை என் பக்கத்தில் உட்காரவைத்து பறவைகளின் வகைகளை Google Image-ல் தேடி காண்பித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று சேவல் பார்க்கவேண்டுமென்று சொன்னான். நானும் உற்சாகமாய் உடனே டைப் பண்ணப் போய் ஒரு சந்தேகத்தின் பேரில் நிறுத்தி, “போதும் நீ போய் படி” என்று சொல்லிவிட்டேன்.

தேடல் மோட்சம் தரும் என்பார்கள். இந்த மின்சாரத் தேடல் என்ன தரும் என்று யாருக்குத் தெரியும்.