அறுந்த இழைகள்


பத்துப் பனிரெண்டு வருடங்களை ஒரு நொடிக்குள் மீட்டுத் தருகிற வித்தையை மின்னஞ்சல் அடிக்கடி செய்கிறது.

இன்றைக்கு இன் பாக்ஸில் கணேஷ் ராமசாமி என்ற இமெயிலைப் பார்த்ததும் விரல் நுனியில் ஒரு பரபரப்பு. இளையராஜாவோ, ஏ ஆர் ரஹ்மானோ பின்னணியில் மெலிதாய் இழைய – தேநீர் பருகியபடி பல மணி நேர அரட்டை. குளிர் காற்றைக் கிழித்துக் கொண்டு கோவைக்கு பைக் பயணம். மாருதி ஆம்னியில் கர்நாடகா மஹாராஷ்ட்ரா வழியாக கோவா வரை பத்து நாட்கள் Road Trip. இரண்டு செகண்ட் இடைவெளி தரப்பட்ட ஸ்லைடு ஷோ போல கணேஷுடனான காட்சிகள் மாறி மாறி ஓடிக் கொண்டே இருக்கின்றன. எல்லாமே பதினைந்து வருடங்களுக்கு முந்தைய காட்சிகள்.

கணேஷ் ராமசாமியை மீண்டும் நேரில் பார்த்து விட்ட மகிழ்ச்சியுடன் பதில் அனுப்புகிறேன். அந்த விநாடியிலிருந்து நட்பு புதுப்பிக்கப்பட்டு விட்டது. கணேஷ் ராமசாமி ஒரு பருக்கைதான். இது மாதிரி கடந்த சில வருடங்களில் எத்தனையோ நட்புகள் உயிர் பெற்றுள்ளன. புதிய நட்புகள் இழை அறுபடாமல் தொடர்கின்றன. 

வாழ்க மின்னஞ்சல் என்று கோஷம் எழுப்ப எண்ணியபோது, மனசாட்சியின் ஏதோ ஒரு மூலையிலிருந்து மைக்ரோ டெசிபலில் ஒரு குரல். ” மின்னஞ்சல் வலையில் விழுந்த பின் அதை உபயோகிக்காதவர்கள் எத்தனை பேரை இழந்தாய் ?  ”

 யோசிக்கிறேன்… பட்டியல் நீ…ள்கிறது. 😦