சாகசம்


சென்னையின் பெருகிவரும் ட்ராஃபிக்-குள் புகுந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பயணம் பண்ணுவதை நிச்சயம் அறுபத்தைந்தாவது ஆயகலை எனலாம். வீட்டிலிருந்து கிளம்பினால் அலுவலகமோ அல்லது வேறு எங்காவதோ போய்ச் சேருவதற்குள் எதிர்கொள்ள நேருகிற இடர்ப்பாடுகள் ஒவ்வொரு சென்னை வாசியையும் வாழ்க்கையின் சாகசக்காரர்களாக மாற்றிவிடுகின்றன. நெருக்கடி நிறைந்த ரோடுகளில் கூட ‘ரோடு காலியாக இருக்கிறது’ என்பது போன்ற மனோபாவத்தை வரவழைத்துக்கொண்டு பைக்குகளும் கார்களும் போட்டியிட்டபடி அசுர வேகத்தில் விரைவதைப் பார்த்தால் எல்லோருமே ஒரு விதத்தில் ‘வீட்டில் சொல்லி விட்டு’ வந்தவர்கள் போலவே காணப்படுகிறார்கள். அதுவும் காலையில் பள்ளிகூடங்களுக்குக் குழந்தைகளை  சுமந்து செல்லும் எந்த வாகனத்தைப் பார்த்தாலும் அடிவயிற்றில் பந்து சுருள்கிறது. எல்லோருக்கும் எப்போதும் அவசரம். எல்லோருமே வேலைக்கோ ஸ்கூலுக்கோ லேட் ஆகாமல் போயே ஆகவேண்டும். அதற்கு ஒரே வழி நெருக்கும் ட்ராஃபிக்கில் கிடைக்கிற இடைவெளிகளில் அடுத்தவனை பொருட்படுத்தாமல் நுழைந்து வெளியேறுவதுதான்.

ஏதோ யோசனையில் இரு புறமும் பாராமல் கண்ட இடங்களில் சாலையைக் கடப்பவர்களின் அருகில் வாகனங்கள் டயர் தேய பிரேக் போடும் சப்தம் திடுக்கிட வைக்கிறது. ரோடே தனதுதான் என்பது போல் ஆட்டோக்கள் முன்னறிவிப்பின்றி அரைவட்டம் போட்டுத்திரும்பி பின்னால் வரும் வாகனங்களை அதிர வைக்கின்றன. சைக்கிள் Gap-ல் லாரி ஓட்டுதல் என்றால் என்ன என்று சென்னையில் நிச்சயம் தெரிந்து கொள்ளலாம். சிவப்பு சிக்னலை அடிக்கடி ஊதாசீனம் செய்யும் மாநகரப் பேருந்து குறுகலான சாலைகளில் கூட வேகம் குறையாமல் ச்ச்ச்ஸ்ஸ்ஸ் என்று காதருகே பிரேக்கிட்டு பயமுறுத்துகிறது. பைக் பில்லியனில் அம்மா மடியில் கைக்குழந்தைகள் அபத்திரமாய் தொங்கிக்கொண்டு போகின்றன. சிக்னலில் பச்சை விழுவதற்கு முன்பே ஆக்ஸிலரேட்டரை முறுக்கிப் பாய்ந்து எதிர்புற சிக்னல்காரர்களை திகைக்க வைக்கிறார்கள். No entry-யில் பயணிப்பவர்களின் வேகம், எதிரில் ஒழுங்கான வழியில் வருபவர்களைவிட அதிகமாக இருக்கிறது. சைக்கிள்காரர்களுக்கு எப்போதுமே சிக்னல் கிடையாதா? மேலும் அவர்கள் நடுரோட்டில் எந்தப்பக்கம் சாய்த்து ஓட்டுவார்கள் என்பது su|do|ku-வை விட சுவாரஸ்யமான புதிர். காருக்குள் ஓனர் இல்லாதபோது ட்ரைவர்கள் ரோட்டை இருங்காட்டுக்கோட்டை ரேஸ் ட்ராக்-ஆக நினைத்துக் கொள்கிறார்கள்.

நான்கு ரோடுகள் சந்திக்கிற இடங்கள் ரொம்ப திரில் ஆனவை. விரைகிற போக்குவரத்துக்கு நடுவே, சரக்கென்று 90 டிகிரியில் மூக்கை நுழைத்துச் சொருகி ஸ்தம்பிக்க வைத்து லாவகமாய் எதிர்புறம் போய்விடுகிறார்கள். இரு சக்கர வாகனதாரர்கள் ஹெல்மெட்டை அதற்கான லாக்கில் பத்திரமாய் மாட்டி வைத்துக் கொண்டு ஓட்டுகிறார்கள். வலதுபுறம் இன்டிகேட்டர் போட்டுவிட்டு இடதுபுறம் சகஜமாய் திரும்புகிறார்கள். இன்டிகேட்டரே போடாமலும் கூட. சந்து முனையில் வேகத்தைக் குறைக்காமல் திரும்பும்போது எதிரில் யாருமே வரமாட்டார்கள் என்று எப்படியோ திடமாய் நம்புகிறார்கள். கையில் சிகரெட் வைத்தபடி பைக் ஓட்டுகிறவன் தட்டுகிற சாம்பல் பின்னால் வருபவன் கண்ணில் போய் விழுகிறது. தலையை சாய்த்தபடி தோளுக்கும் காதுக்கும் இடையே செல்ஃபோனைப் பொருத்தியபடி பறக்கிற வாகனத்தின் பில்லியனில் உயிரைக் கையில் பிடித்தபடி யாரோ பயணிக்கிறார்கள். போகிற போக்கில் பான்பராக்கை கிடைத்த இடத்தில் துப்பிவிட்டு விரைகிறார்கள். நடு ரோட்டில் டெலிஃபோன் இலாக்காவோ, குடிநீர் வாரியமோ தோண்டி வைத்திருக்கிற குழிகள், திறந்திருக்கிற பாதாள சாக்கடை மூடி ஆகியவற்றில் விழாமல் பயணிக்கிற வித்தையை எல்லோரும் பழகிவைத்திருக்கிறார்கள். பஸ் கூரை மேல் நின்று கொண்டு பயணிக்கிற மாணவர்கள் மரக்கிளை வரும்போது குனிந்து கொள்கிறார்கள். மழை நாளில் தவறாமல் பாதசாரிகளின் உடைகளில் சேறு தெளித்து single color ஹோலி கொண்டாடுகிறார்கள். பொறுமையில்லாமல் காதுக்கருகில் ஹாரன் அலறுகிறது. ரயில் வரும் என்று போட்டிருக்கிற கேட்டின் அடியில் நுழைந்து வாகனங்கள் பயமில்லாமல் இருப்புப் பாதையைக் கடக்கின்றன.

இத்தனையும் எப்படியோ சமாளித்து எல்லாரும் அவரவர் வீடுகளுக்கு தினமும் போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள். The real risk lies in riskless living என்று யாரோ சொன்னதை வேறு விதமாகப் புரிந்து வைத்திருக்கிறார்களோ என்னமோ?!
———————————————————————————————————————

உப குறிப்பு: சென்னையின் சாலைப்போக்குவரத்து பாதுகாப்பு  எக்ட்ஸெட்ரா விஷயங்ளுக்காக என் நண்பர்கள் நடத்தும் வலைப்பதிவு இது : http://chennairoads.wordpress.com