உறைக்காத உண்மைகள்


திடீரென சோடா புட்டி கண்ணாடி அணிந்து கொண்ட நண்பர், நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட ஊட்டச்சத்து உண்மைகளைப் (Nutrition Facts) படித்துப் படித்து இப்படி ஆகி விட்டது என்றார்.

மேற்கத்திய கலாசாரங்களை மொக்கையாய்க் காப்பி அடித்ததில், “மேற்கத்திய வியாதிகள்” என்று செல்லமாய் அழைக்கப்படும் கேன்சர், சர்க்கரை, இருதய நோய்கள் நம்மிடமும் பெருகி விட்டன. அவற்றிலிருந்து தப்பிக்க சாப்பிடும் முன் கண் வலிக்கப் படிக்க வேண்டியுள்ளது. உள்ளே தள்ளுகிற உணவில் உள்ள எரிசக்தியை ஒழுங்காய் எரிக்காவிட்டால் 3500 கிலோ கலோரிக்கு ஒரு பவுண்ட் வீதம் பெருத்துக் கொண்டு போகலாம் என்கிறது உணவு மருத்துவம்.

கால்களுக்கு பதில் கார்கள். ஏருக்கு பதில் சேர். பறித்து உண்ணுதல் போய் வறுத்து உண்ணுதல். உணவே மருந்து என்பதை மறந்து போனதால் கடைசியில் மருந்தே உணவாகிப் போனது. காதில் ப்ளூ டூத் ஹெட்போன் போல் இடுப்பில் Pedometer-ம், புஜத்தில் Heart Beat Meter -ம் மாட்டிக் கொண்டு அலைவது சகஜமாகி விட்டது.

YMCA போன்ற உடற்பயிற்சி நிலையங்களுக்கு பலர் மாதம் $100 – $200 வரை செலவழித்துக் கொண்டிருக்க, என்னுடன் பணி புரிந்த ஜப்பான் பெண் மத்தியானம் மூணு மணிக்கு அலுவலகத்தின் பதினெட்டு மாடியை படிகளில் மூணு முறை ஏறி இறங்குவாள். ராட்சச வணிக வளாகங்களில் தினசரி விண்டோ ஷாப்பிங் பண்ணுவது இன்னொரு மலிவான வழிமுறை.

” நீ மட்டும் எப்படி இத்தனை ஸ்லிம்மாக இருக்கிறாய் ? ” என்று சீனா தோழியைக் கேட்டால், ” ச்சாப்ஸ்டிக்கில் சாப்பிட்டால் கொழுப்பு குறையும். ” என்கிறாள்.

பசி தாங்க தைரியமிருந்தால் பரீட்சித்துப் பார்க்கவும்.