தொழில்


ஒன்றிரண்டு சிறு தொழில்களில் கால் வைத்திருப்பதால் நண்பருக்கு நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. வீட்டை சுத்தம் செய்ய ஒரு நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். நிறுவனத்தைச் சேர்ந்த பெண்மணி வாரம் ஒரு முறை வந்து மேஜை, டெலிபோன் உட்பட வீடு பூராவும் சொட்டு நீலம் இட்டுத் தோய்த்தாற் போல் பளிச் ஆக்கி விட்டுப் போய் விடுவார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அந்தப் பெண்மணியிடம் பேச்சுக் கொடுத்ததில் அவர் ஒரு வக்கீல் என்பது தெரிந்தது. ஏன் வக்கீல் வேலைக்கு முயற்சி செய்யாமல் இப்படித் துடைக்கிற வேலை என்று கேட்டால், 1. மொழிப் பிரச்சனை, 2. ஸ்பெயினில் படித்த சட்டம் வேறு, அமெரிக்க சட்டங்கள் வேறு என்று பதில்.

அதே நண்பர் நடத்தும் சப்வே துரித உணவகத்தில் ஸாண்ட்விச் மடித்துக் கொடுப்பவர் ஹங்கேரியைச் சேர்ந்த டாக்டர். இங்கே டாக்டர் ஆக வேண்டும் என்றால் இன்னும் சில தேர்வுகள் முடிக்க வேண்டும். அதற்குப் பல ஆயிரம் டாலர்களும் சில வருஷங்களும் செலவாகும். அது வரை ஸாண்ட்விச் வேலையை விடும் உத்தேசமில்லை என்கிறார்.

மாதா மாதம் விரட்டும் பில்கள் காரணமா, அல்லது எந்த வேலை செய்தாலும் மரியாதையளிக்கும் சமூகச் சூழல் காரணமா ?  என்பது சாலமன் பாப்பையாவுக்கு சமர்ப்பணம்.

Advertisements