தமிழ்


பத்தொன்பது வருடங்கள் கோமாவில் இருந்து விட்டு நினைவு திரும்பிய அமெரிக்கர் பற்றி ரேடியோவில் பேசிக் கொண்டிருந்தார்கள். செல்போன்களை அவர் ஆச்சரியமாய்ப் பார்க்கப் போகிறார். வாடகைக்கு விடியோ எடுக்க கார் எடுத்துக் கொண்டு கடைக்குப் போக வேண்டிய அவசியமில்லை, இணையத்தில் க்ளிக் செய்தால் போதும் என்றறிந்தால் இன்னும் வியந்து போவார். இதெல்லாம் வானொலி வர்ணனையாளர் கோமா மனிதருக்காகப் போட்டுக் கொண்டிருந்த ஆச்சரியப்பட்டியல்.

அதே நபர் ஒரு தமிழராய் இருந்தால், ஆங்கிலப்படங்கள் மட்டுமே தபாலில் வழங்கிக் கொண்டிருந்த Netflix  போன்ற இணைய விடியோ நிலையங்கள் இப்போது பராசக்தி முதல் பருத்தி வீரன் வரை வழங்கி வருவதறிந்தால், அதிகபட்ச ஆச்சரியத்தில் மறுபடி கோமாவுக்குப் போனாலும் போய் விடுவார்.

நேற்று பாமா விஜயம் தபாலில் வந்தது. காட்சிக்குக் காட்சி பாலச்சந்தர் டச். வரவு எட்டணா செலவு பத்தணா தீம் ஸாங் இன்னும் எத்தனை வருஷம் கோமாவில் படுத்திருந்து விட்டுக் கேட்டாலும் Fresh-ஆகவே இருக்கும் போலுள்ளது.

இது போக இப்போது அநேகமாக எல்லா வீடுகளிலும் சன் டிவி இணைப்பும் உள்ளது. 24 மணி நேரமும் ஆங்கிலத்திலேயே அளவளாவி விட்டு, ” என் குழந்தைக்குத் தமிழே வரலை. ” என்று அங்கலாய்க்கும் தாய்மார்கள் கூட இது போல தமிழ்ப் படங்களையும், சன் டிவியையும் குழந்தைகள் சகிதமாய்ப் பார்த்து வருவதால், அடுத்த தலைமுறை அமெரிக்கத் தமிழர்கள், ” அடுத்த வாரம் இதே நாள் இதே நேரம் சந்திக்கலாம். ” என்று தட்டுத் தடுமாறாமல் தமிழ் பேசுவார்கள் என்று தோன்றுகிறது.

மெகா சீரியல்களால் ஏற்படும் உடல் உபாதைகளை இதற்காகவே மறந்து விடலாம்.

Advertisements