பாஷா அமெரிக்கா


வரிசையில் எனக்கு முன்னால் ஒரு சல்வார் கமீஸ் யுவதி. ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்காக DMV (Department of Motor Vehicles) சென்றிருந்தேன். இந்த மாதிரி அலுவலகங்களில் காரியம் ஆக வேண்டுமானால் முதலில் Q-Matic இயந்திரத்திடமிருந்து டோக்கன் வாங்க வேண்டும். பின்பு நாற்காலியில் கொஞ்ச நேரம் ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஓர் எலக்ட்ரானிக் குரல் உங்கள் டோக்கன் எண்ணை அழைத்து, எந்த கவுன்ட்டருக்கு நீங்கள் போக வேண்டும் என்பதைக் குறிப்பிடும்.

சரி, சல்வார் கமீஸ் யுவதிக்கு வருவோம். அவர் டோக்கன் வாங்கிக் கொண்டு இருக்கையில் அமராமல், நேராக ஒரு கவுன்ட்டர் அருகே போய் உள்ளிருந்த நபரிடம் என்னவோ சொல்லி விட்டு வந்தார். (தனது டோக்கன் எண்ணைச் சொன்னார் என்பது பின்பு தெரிந்தது.)
 பதினைந்து நிமிஷங்களுக்குப் பின் முன்னர் கிசுகிசுத்து விட்டு வந்த அதே கவுன்ட்டருக்கு அவர் அழைக்கப்பட்டார். அதற்குப் பக்கத்தில் இருந்த கவுன்ட்டருக்கு சற்று நேரத்தில் நான் அழைக்கப்பட்டேன்.
 
அங்கே நின்றிருந்த பத்து நிமிஷங்களும் பக்கத்து கவுன்ட்டரில் அட்சர சுத்தமான ஹிந்தியிலேதான் சம்பாஷணை நடந்தது. நானிருப்பது வாஷிங்டனா, புது டெல்லியா என்று ஒரு விநாடி எனக்குக் குழப்பம். அமெரிக்காவில் எந்த அரசாங்க அலுவலகத்திலாவது தமிழில் மட்டுமே பேசி வேலையை முடித்துக் கொண்டு வர முடியுமா என்று தேவையில்லாமல் யோசித்தேன்.

ஹிந்தி படித்துத் தொலையுங்கள் என்றால் யாராவது கேட்கிறீர்களா !

Advertisements