திண்ணைகளும் பாட்டிகளும்


தண்டாசனம் சொல்லிக் கொடுக்கும்போது திரு.அருள் சரவணன், அந்தக் காலத்துப் பாட்டிகள் எல்லாம் அநாயாசமாக நூறு வயது வரை எப்படி வாழ்ந்தார்கள் என்பதை சற்றே விளக்கினார். பாட்டிகள் திண்ணையில் ரெண்டு காலையும் நீட்டி நிமிர்ந்து சும்மா உட்காருகிற விதமே இந்த தண்டாசனம்தான் என்றார். முதுகுத் தசைகளை வலுப்படுத்தி, மார்பு மற்றும் தோள்களை விரிவடையச் செய்வதுடன், கண்பார்வையை கூர்மையாக்கும் இந்த முக்கிய ஆசனத்தை தன்னையறியாமலோ அறிந்தோ பாட்டிகள் நாள் தவறாமல் செய்து கொண்டிருப்பதே நீண்ட ஆயுசுக்குக் காரணமாம். அது தவிர பாட்டிகள் சதா எதையோ இடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களே – வெற்றிலை (கிருமிநாசினி, ஜீரண சக்தி அதிகரிப்பு), பாக்கு (இரத்த சுத்திகரிப்பு), சுண்ணாம்பு (கால்சியம்). இந்தக் கலவை ஒரு அருமையான ஆரோக்கிய மருந்தாக செயல்படுகிறதாம். 80 வயதிலும் முதுகில் மூட்டை சுமக்கிற தெம்புடன் தூரத்தில் வருகிற பேராண்டியை தெளிந்த பார்வையுடன் கண்டுகொள்ளும் பாட்டிகள் அந்தக் காலத்தில் இருந்தார்கள். இன்னும் கூட இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கை முறை ஒரு முக்கியக் காரணம் என்றார்.

சும்மா டிவி பார்க்கும்போதோ, குமுதம் ஹிண்டு படிக்கும்போதோ தரையில் வஜ்ராசனமோ, பத்மாசனமோ போட்டு உட்கார்ந்து கொண்டால் உடம்பு உறுதிபடும் என்கிறார் யோகா மாஸ்டர். திண்ணைகளில்லாத நகர வீடுகளில் ஆரோக்கியம் வளர்க்க நல்ல ஐடியாதான்.

Advertisements