டீக்கடை பெஞ்ச்


மனைவியும், குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருக்க, கார் சாவியையும், மடிக்கணினியையும் எடுத்துக் கொண்டு நைஸாக நழுவுகிறேன். சனிக் கிழமை காலை 6.30. நான் ஒரு காலை மனிதன். விடுமுறை நாளெனில் காலை தொடங்குமிடம் Panera Bread, Star Bucks, Caribou போன்ற டீக்கடை பெஞ்ச்சுகள். இது ஆதி காலத்துப் பழக்கம். படிக்கிற பருவத்தில் கூட்டமாகச் சென்று குழு அரட்டை அடிக்கப் பயன்பட்ட களம். தினத்தந்தி வாசிக்கப்படும் வாசக சாலை. டீ + மிக்சர் அல்லது மிளகாய் பஜ்ஜி தேவாமிர்த காம்பினேஷன்.

கோவையில் காலந்தள்ளின சமயங்களில் இந்த காரசார மரபு உடைந்து போய், தேங்காய் பன் என்று செல்லமாக கோவை வட்டாரத்திலும், பொறை என்று கரடுமுரடாக சென்னை வட்டாரத்திலும்ல் அழைக்கப்படும் முக்கோண வடிவ இனிப்புடன் தேநீர் அருந்துவது வழக்கமானது. டீக்கடைகளுக்கு கோவையில் பேக்கரி என்ற நாமகரணம். பேக்கரி செல்வதற்கு நேரம் காலம் கிடையாது. பல சமயம் ராத்திரி ஒரு மணி, ரெண்டு மணிக்கெல்லாம் திடீரென பேக்கரி கிளம்பிச் செல்வோம். (குண்டு வெடிப்புக்கு முன்.)

Panera Bread-ல் மடிக்கணினியைத் திறந்து டெஸ்க்டாப் உதயமாவதற்குள் இத்தனை நினைவுகள். அங்கு போல் இங்கு கும்பலாக வந்து காபியோ டீயோ சாப்பிட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் குறைவு. இந்த நிமிஷம் கூட தனியாகவே வந்திருந்தாலும், இந்த டீக்கடை பெஞ்ச்சுகளில் அளிக்கப்படும் WI-FI Hot Spot Internet Access கும்பல் விளைவை அளிக்கிறது. மெஸஞ்சரில் கூட்டரட்டை அடிக்க முடிகிறது. ஏன், இந்தப் பதிவைக் கூட இங்கிருந்து உங்களுக்குத் தட்டி விட முடிகிறது.

Advertisements