ஜவ்வு


மன தைரியம் நிரம்பப் பெற்ற ஒரு ஹீரோயின், கடைந்தெடுத்த அயோக்கியனான வில்லன். இவர்களிக்கிடையே எப்போதும் கடும் பிஸினஸ் போட்டி நிலவுகிறது. இதன் பொருட்டு 24 மணி நேரமும் சதித்திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆட்டோவில் யாராவது ஒருவர் எந்நேரமும் அவசரமாய் ‘சீக்கிரமாப் போ” என்றபடி பயணித்துக் கொண்டேயிருக்கிறார்கள். சென்னை ECR ரோட்டில் கதாநாயகியை தாதா கும்பல் நான்கு நாளைக்கு தொடர்ந்து துரத்துகிறது. செல்போன்கள் ஒலித்துக் கொண்டேயிருக்க, யாராவது யாருடனாவது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். வெட்டவெளியில் அவரவர் அடியாட்கள் சுற்றிலும் நிற்க கூலிங்கிளாஸ் முகத்துடன் வில்லனும் கதாநாயகியும் நேருக்கு நேர் சூடான சவால் விடுகிறார்கள். போலீஸூக்கும், வில்லனுக்கும் தெரியாமல் நல்லவர்கள் பாழடைந்த பங்களாவில் தலைமறைவாயிருக்கிறார்கள்.

குடும்பத்தில் வாரத்துக்கு ஒருத்தர் வீதம் யாரையாவது போலீஸ் கைது செய்து இழுத்துப் போகிறது. கோர்ட்டில் வைத்து சாட்சிகள் கொலை செய்யப்படுகிறார்கள். பழி நல்லவர்கள் மேல் தவறாமல் விழுகிறது. குழந்தை கடத்தப்பட்டு மீட்கப்படுகிறது. தியாக உள்ளம் கொண்டவர்களுக்கு சோதனை மேல் சோதனை வந்து வாழ்க்கை நகருகிறது. திட்டமிட்டு என்கெளன்டர்கள் நடக்கின்றன. வில்லனின் குடும்பத்தில் இருக்கும் நல்லவன்(ள்) இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கிறான்(ள்). புதிய கேரக்டர்கள் வந்து கொஞ்சகாலம் காலந்தள்ளிவிட்டு சட்டென மறைந்து விடுகிறார்கள். எப்போதுமே யாராவது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருக்க வெளியே பதட்டத்துடன் ஒரு கும்பல் காத்திருக்கிறது. இக்கட்டான நேரத்தில் காட்சியை ஸ்டில் பண்ணி ‘தொடரும்’ போடுகிறார்கள்.

இப்போதைக்கு இதுதான் 500 வாரம் ஓடும் மெகா ஸீரியல்களின் Trend. அழுகாச்சி ஸீரியல்கள் கொஞ்சம் கொஞ்சமாய் அட்வென்சர் ஸீரியல்களாக மாறி வருகின்றன என்று தெரிகிறது. தொடர்ந்து பார்த்து வந்தால் மன தைரியமும் பொறுமையும் நிச்சயம் வளரும்.