பக்தியியல்


கோயில்களில் கடவுளைச் சந்திக்கும் வாய்ப்பை விட சமூகத்தைச் சந்திக்கும் வாய்ப்புகள் ரொம்ப அதிகம். சென்ற வாரக் கடைசியில் மேரீலேண்ட் சிவா விஷ்ணு கோயிலுக்குப் போயிருந்தேன். பொதுவாக அமெரிக்க இந்து கோயில்களில் எங்கு திரும்பினாலும் விக்ரகங்களாய் நிறுத்தி திக்கு முக்காட வைத்து விடுவார்கள்.

ஆண்டாளை கண்ணை மூடி வழிபட்டுவிட்டு விழித்தால், “ஹலோ !” என்று தரிசனம் தருகிறார் எதிர் வீட்டுக்காரர். வீட்டுக்கருகில் என்னை அவரோ, அவரை நானோ பார்த்தால் கையசைப்பு அல்லது அதிகபட்சம் புன்னகைப்பு என்பதோடு நின்று போகும். அன்று கோயிலி்ல் ஓரமாய் நின்று, ஒரு பத்து நிமிஷம் பரஸ்பரம் குசலம் விசாரித்தோம்.

நியூஜெர்ஸி ப்ரிட்ஜ்வாட்டர் வெங்கடேஸ்வராவை ரெகுலராய் தரிசித்து வந்த நண்பருக்கு சில வருஷம் முன்பு கோயிலில் ஒரு பெரியவர் அறிமுகமாகி, ஊரில் ஜாதகப் பரிவர்த்தனை நடந்து, மனைவி குழந்தைகளோடு இப்பவும் வாரம் தவறாமல் கோயிலுக்குப் போய் வெங்கடேஸ்வராவை திட்டுகிறாரா இல்லை நன்றி சொல்கிறாரா என்று தெரியாது.

நந்தாவுடன் சாப்ட்வேர் எழுதுபவரை இதே சிவா விஷ்ணு கோயிலில் ஒரு தெலுங்கு பட தயாரிப்பாளினி பார்த்து நடிக்கக் கூப்பிட்டு, போன மாதம் பத்து நாட்கள் லீவு போட்டு, Washington DC பகுதிகளில் சுஹாசினி இயக்கத்தில் நடித்து விட்டு வந்திருக்கிறார். படம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆன பிறகு அவரிடம் ஆட்டோக்ராஃப் வாங்கிக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

University of Maryland பனியன் போட்ட இளைஞர் இளைஞிகளை நிறைய பார்க்க முடிந்தது. பிட்ஸ்பர்க் பாலாஜி கோயிலுக்குப் போன போதும் Ohio University, Indiana University மாணவ மாணவிகள் அதிகம் தென்பட்டார்கள். இந்த வயதில் எப்படி இவர்களுக்கு இவ்வளவு பக்தி என விசாரித்ததற்கு, கோயில் கான்ட்டீனில் விடை கிடைத்தது. அடுத்த ஏழு நாட்களுக்கு $1 புளி சாதம் வாங்கிச் செல்ல வேண்டும் என்றார்கள்.