ஆர்க்கெஸ்ட்ரா


அது ஒரு கோவில் வாசலாகவோ அல்லது தெருமுனையாகவோ இருக்கும். அங்கே மரங்களும் பலகைகளுமாய் அமைக்கப்பட்ட மேடையில் ஜமுக்காளம் விரித்து உயரமாய் ஸ்பீக்கர்கள் கட்டப்படும். சுற்றிலும் நிறைய ட்யூப் லைட்கள் நடப்பட்டு ஆம்ளிஃபையர், மைக்குகள், வாத்தியங்கள் வந்து இறங்கும்போதே தெருகொள்ளாத உற்சாகம் தொற்றிக் கொள்ளும். மேடை முழுக்க ஓடும் ஒயர்களை ஒருவர் அங்கங்கே இணைப்புப் கொடுத்துக் கொண்டிருக்க ஹலோ ஹல்லோ மைக் டெஸ்டிங் என்று சுற்றுவட்டாரங்களில் அறிவிப்பாளர் குரல் ஒலிக்கும். ஆர்வம் நிரம்பிய கூட்டம் முதல் பாட்டுக்காக காத்திருக்கத் தொடங்கும். அடுத்து வரப்போகும் பாட்டின் interlude துணுக்கை கிதாரிலோ ஃப்ளூட்டிலோ விரல்கள் நிரட கூட்டம் லேசாய் சிலிர்க்கும். தடதடவென ட்ரம்மை அதிர்ந்து வாசித்து “சொய்ங்ங்ங்ங்” என்று cymbals-ல் முடித்து ஒருவர் ரிஹர்சல் பார்க்க சிறுவர்கள் ஆரவாரமிடுவார்கள். அறிவிப்பாளரின் ஒவ்வொரு வார்த்தையும் மூன்று தடவை தவறாமல் மைக்கில் எதிரொலித்து ஆர்க்கெஸ்ட்ரா அமர்க்களமாய் “கலைவாணியேஏஏஏஏ” என்று சாமி பாட்டுடன் ஆரம்பிக்கும். அடுத்ததாக “பொதுவாக எம்மனசு தங்கம்…” அல்லது “ராஜராஜ சோழன் நான்…” அல்லது “வெள்ளைப் புறா ஒன்று…” இன்ன பிற.

நான் சொல்வது ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்.

இன்று நான் வழக்கமாய் ஆஃபிஸ் போகிற வழியில் ஒரு ரோட்டை அடைத்து மேடை அமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்தபோதே சாயங்காலம் வீடு திரும்ப வேறு வழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் என்று ஞாபகம் வைத்திருந்தேன். வழக்கம்போல மறந்துபோய் அதே வழியில் வந்தபோது அங்கே ஆர்க்கெஸ்ட்ரா. கர்நாட்டிக் பாணியில் அமைந்த ஒரு சினிமா பாடலை ஒருவர் உயிரைக் கொடுத்துப் பாடிக்கொண்டிருக்க, ஒன்றிரண்டு பெண் பாடகிகள் அடுத்து பாடுவதற்காக காத்திருந்தனர். வாத்தியங்கள் அதிர்ந்தன. அந்த ரோட்டில் குடியிருக்கிறவர்களில் ஏழெட்டுப் பேர்களைத் தவிர ரோடே காலியாயிருந்தது. நேராய் போக வழியில்லாத நான் வேறு வழியில்லாமல் ஒரு பாட்டை மட்டும் நின்று கேட்டுவிட்டு வண்டியைத் திருப்பினேன்.

“அடுத்து வரும் பாடல்….” என்று மூன்று முறை எக்கோ-வுடன் சளைக்காமல் அறிவித்தது ஆர்க்கெஸ்ட்ரா ஒலிபெருக்கி.