(மேல்) நாட்டு வைத்தியம்


உடம்புக்கு முடியவில்லை என்று வெள்ளிக்கிழமை மதியம் அகில் கூப்பிட்டான். எல்லா பள்ளியிலும் ஒரு க்ளினிக் உள்ளது. லேசாக இரண்டு இருமு இருமினால் உடனே க்ளினிக்கில் படுக்க வைத்து விடுவார்கள். நர்ஸ் போனில் கூப்பிடுவார். ஒரு மணி நேரத்துக்குள் யாராவது போய் கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும்.

சாயந்தரம் அவசர அப்பாய்ன்மென்ட் வாங்கி டாக்டரிடம் கூட்டிப் போனேன். ஒவ்வொரு டாக்டர் விசிட்டின்போதும் இன்ஷ்யூரன்ஸ் படிவங்களை நிரப்பி நிரப்பி உண்டான நரம்புச் சுளுக்குக்கு தனியாய் ஒரு தரம் நரம்பியல் நிபுணரைப் பார்க்க வேண்டும்.

தெர்மாமீட்டர் 101 காண்பித்தது. டாக்டர் முன்னால் இரண்டு தடவை இருமியும், மூன்று முறை தும்மியும் காண்பித்தான் அகில். Strep Test எடுத்தார்கள். ரிசல்ட் நெகட்டிவ். தொண்டையில் டார்ச் அடித்துப் பார்த்து விட்டு, ” என்னால பாதிப்பு எதையும் பார்க்க முடியலை. ரெஸ்பிரேட்டரி ஸிஸ்டம் கிட்டே கொஞ்சமா இன்ஃபெக்ட் ஆகியிருக்கலாம். இதுக்கெல்லாம் மருந்து எழுதித் தர மாட்டேன். மின்ட்டை வாயில் போட்டுட்டு ஓய்வெடுக்கச் சொல்லுங்க. ” என்றார் டாக்டர்.

இரண்டு நாளாகியும் இருமல் குறையவில்லை. ராத்திரி மூக்கில் ரத்தம் கொட கொடவென்று கொட்டியது. பதறிப் போய் டாக்டரை மறுபடி தொலைபேசியில் அழைக்க, ” இது வைரல் இன்பெக்’ஷன்தான். இதுக்காக மெனக்கெட்டு ஆஸ்பத்திரிக்கு வர வேண்டாம். பத்து நாள்ல தானா சரியாய்டும். ” என்றார்.

பாலில் மஞ்சள்ப் பொடியும், சுக்கும் போட்டு குடித்துக் கொண்டிருக்கிறான். தானாகவே சரியாகிக் கொண்டிருக்கிறது,