டிஜிட்டல் வாழ்வு


ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் கூடிய ஏதாவதொரு ஆல்பம் நிச்சயம் இருக்கும். தாஜ்மஹால், மோட்டார் பைக், பிருந்தாவன் கார்டன் இப்படி ஏதாவது backdrop-ன் முன் நின்றபடி ஃபோட்டோகிராபரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். தவறாமல் ஆண்கள் கோட் சூட் அணிந்து, பெண்கள் கைகளிலும் கொஞ்சம் தவழவிட்ட பெரிய முந்தானையுடன், எண்ணை போட்டு சரியாய் வகிடெடுத்த தலையுடன் ஸ்டுடியோ பெளடரின் உபயத்தில் கேமராவில் கருப்பு போர்வை போர்த்தி எடுத்த புகைப்படத்தை நிறைய பேரின் ஆல்பத்தில் பார்த்திருக்கிறேன். ஃபோட்டோ ஸ்டுடியோவையெல்லாம் தாண்டின் இன்ன பிற கருப்பு வெள்ளைப் புகைப்பட அனுபவ விவரணைகளையும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்பொழுதெல்லாம் ஃபோட்டொ எடுத்துக் கொள்வதென்பதுகூட எப்போதாவது நடக்கும் அபூர்வமான சந்தோஷமான விஷயம்! இந்த புகைப்படங்கள் மஞ்சளாகிப் போய் ஓரங்கள் கொஞ்சம் பூசனம் பிடித்து சிதிலமடைந்திருந்தாலும் என்றைக்காவது எடுத்துப் புரட்டினால் வரலாறு கலந்த இதமான உணர்வு வரும்.

டிஜிட்டல் கேமரா வந்துவிட்டது. கேமரா மொபைல் வந்துவிட்டது. அப்புறம் காம்கார்டர் இன்னபிற எல்லாமே பாக்கெட்டுக்கு அடக்கமாய் சகாய விலையில் கிடைக்கின்றன. பெண்டாட்டி, குழந்தைகள், போன இடம், வந்த இடம் என்று பார்த்ததையெல்லாம் இஷ்டப்பட்டபடி இஷ்டப்பட்ட நேரத்தில் கிளிக்க முடிகிறபடியால் உலக மக்களில் முக்கால்வாசிப் பேர் இப்போது ஃபோட்டோகிராபர்கள் ஆகிவிட்டார்கள். விளைவாக Flickr மாதிரி வலைத்தளங்களில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் கொட்டிக் கிடக்கின்றன. நான் தனியொருவனாக Sony Ericsson உபயோகித்துக் கிளிக்கினது மட்டும் ஆயிரக் கணக்கில் இருக்கிறது. என் கணினி ஃபோல்டர்களில் தினமும் மலையாய்க் குவியத் தொடங்கிவிட்டன டிஜிட்டல் புகைப்படங்கள்.

இவற்றை நிர்வகிக்க வாரத்துக்கு அரை மணி நேரம் தேவைப்படுகிறது. வாழ்க்கையை எளிமையாக்குகிறேன் பேர்வழி என உள்ளே நுழைந்த இமெயில், காமிரா, காலண்டர் போன்ற டிஜிட்டல் நுட்பங்கள் உண்மையில் வாழ்க்கையை மேலும் சிக்கலாக்குகின்றன.