வெள்ளை


என்னை அறியாமல் கண்களில் நீர் திரண்டது. பிரமிப்பில் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து விட்டேன். இருபது வருடங்களுக்கு முன்பு முதன் முதலில் தாஜ்மஹாலை நேரில் பார்த்ததும் ஏற்பட்ட உணர்வைத்தான் சொல்கிறேன். எத்தனை படங்களில் பார்த்திருந்தாலும் சரி, எத்தனை பேர் எத்தனை விதமாய் அதைப் பற்றி சிலாகித்திருந்தாலும் சரி. அதன் சரித்திரத்தையும், பின்னணியையும், அறிவுஜீவ சிந்தனைகளையும் சுத்தமாய் மறந்து விட்டு, உங்கள் முன்னால் நிற்கும் நிதர்சனம் என்று அதன் பிரம்மாண்டத்தையும், அற்புதமான கலை நயத்தையும் பார்த்தால், அதனிடம் ஒரு இன்ப அடி நிச்சயம் வாங்குவீர்கள். 

அத்தனை அழகான தாஜ்மஹால் அப்போதே, ஃபாரிதாபாத் தொழிற்சாலைகளால் மாசடைந்து வெள்ளை நிறம் மங்கி மஞ்சள் பூத்திருந்தது. அங்கு சென்ற அனுபவத்தையும், அது மாசடைந்து வரும் அபாயத்தையும் முடிச்சிட்டு ‘வேறு திசைகள்’ இலக்கிய இதழில் ஒரு சிறுகதை எழுதியதாய் ஞாபகம். இப்போது தாஜ்மஹால் எப்படி இருக்கிறதென்று சமீபத்தில் பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும்.

நேரில் பார்த்திருந்தாலும், பார்க்காவிட்டாலும் தாஜ்மஹால் நம்மவர்களிடையே ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினால் எனக்கு இப்போதெல்லாம் மிக மெல்லிய ஒரு பிரச்சனை. தலைநகர் அருகே வசிப்பதால் அவ்வப்போது யாரையாவது கூட்டிக்கொண்டு போய் வெள்ளை மாளிகையைக் காண்பிக்க நேர்கிறது. முதன் முதலாய் அதைப் பார்க்க வரும் நம்மவர்கள் வெள்ளை மாளிகையை ஏதோ தாஜ்மஹால் ரேன்ஜுக்கு கற்பனை செய்து கொண்டு வந்து ஏமாந்து போகிறார்கள். ” அய்யே, புரவிபாளையம் ஜமீன் மாளிகை இதை விட பெரிசா இருக்குமே ! ” என்று அசடு வழிகிறார்கள்.

அதிபரின் வீட்டை மாளிகை என்று தமிழ்ப்படுத்தியிருப்பதாலா ?

Advertisements