மெய்ப்பொருள்


சின்னஞ்சிறு குழந்தைகளை “வீட்டுக்குப் போலாம் ! ” என்று நச்சரிக்காமல்  நான்கு மணி நேரம் கோயிலில் உட்கார வைக்க முடியுமா ? முடிந்தது. வாஷிங்டன் டிஸி பகுதியில் பத்தொன்பது வருடங்களாய் இயங்கி வரும் பால விகாஸ் அதை சாதித்துக் காட்டுகிறது. லார்ட்டன் வட்டார துர்க்கா கோயிலின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த திரு. ஷண்முகசுந்தரம் அளித்த தகவலின் பேரில் அகிலைக் கூட்டிக் கொண்டு சென்றிருந்தேன். வினாயகர் சதுர்த்தி நிறைவு விழா பூஜை.  

பால விகாஸின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் குழந்தைகளே செயல் வீரர்கள். சாதி பேதமின்றி அனைத்து குழந்தைகளும் பங்கு பெற்று ஆகம முறைப்படி பிள்ளையாருக்கு பூஜை நடத்தினார்கள். ஒவ்வொரு சடங்கிற்கும் பின்னணியில் உள்ள தாத்பர்யத்தை அவர்களே விளக்கினார்கள். முழு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதும் குழந்தைகள்தான்! பெரியவர்கள் சும்மா உதவிக்கு மட்டுமே !

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சிஷ்யரை குருவாகக் கொண்ட சுவாமி ஸ்வஹானந்தாஜி வந்திருந்து குழந்தைகளுக்கு ஆசியும், அறிவுரையும் வழங்கினார். ஹிரானந்தா என்னும் இன்னொரு துறவி குழந்தைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த Nintendo போன்ற நவீன விஷயங்களை தொடர்பு படுத்தி வெகு சுவாரஸ்யமாய் உபதேசம் செய்தார்.

துறவிகளிடம் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை எனினும், அவர்கள் அளிக்கும் உபதேசங்களின் மெய்ப்பொருள் காண்பதில் எப்போதுமே ஆவல் உண்டு.