தமிழ் மணம்


முதன் முதலாக அமெரிக்கா வந்த போது, இங்கு தினமும் சாம்பார், ரசம், தயிரோடு ஃபுல் மீல்ஸ் கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. முதல் வேலை கிடைத்து வெளியூர் சென்ற பிறகாவது அமெரிக்க சாப்பாடு சாப்பிட நேருமா என்று பார்த்தால் உடன் தங்கியிருந்த கருணா காரு தினமும் சமைக்க வேண்டும் என்பதில் படு டிசிப்ளினாக இருந்தார்.

வீடுகள் ஏசி அல்லது ஹீட்டர் உபயோகத்துக்காக அடைத்து வைக்கப்பட்டுள்ளதால், சமைத்த அரை மணி நேரத்துக்கு வீடு முழுக்க மசாலா வாசனை தூள் பறக்கும். உடன் பணி புரிந்த அமெரிக்கருக்கு நேர்ந்த சோகத்தால்தான் இந்த மசாலா மணத்தின் மகிமை எனக்கு முழுவதுமாய்த் தெரிந்தது. நான் கொண்டு போன உருளைக் கிழங்கு குருமா ருசி பார்த்த சாயந்திரம் காதலியை சந்திக்கப் போய் அவர்கள் உறவு அன்றோடு முறிந்து விட்ட கதையை பல நாள் கழித்துச் சொன்னார்.

சென்ற வருட இறுதியில் வர்ஜீனியாவில் வீடு தேடியபோது, இந்தியர்கள் அதிகமாய் வசிக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி பற்றி இணையத்தில் விபரம் சேகரிக்க நேர்ந்தது. அப்போது கண்ணில் பட்ட புலம்பல் கீழே:

“When the other tenants in the apartment building cook their spicy food, my whole apartment reeks for days. Even my bedding and clothing stinks of the spices.”

தமிழ் மணம் என்பது சும்மா கவர்ச்சிக்காக வைத்த தலைப்பு. அந்த அபார்ட்மென்ட் பகுதியைக் கலங்கடித்துக் கொண்டிருப்பது தெலுங்கு மணமாகக் கூட இருக்கலாம்.