பந்த்


போர்டிகோவில் பயங்கர ஆயுதங்களோடு ஒரு வன்முறைக் கும்பல். கட்டிடத்தின் முகப்புக் கண்ணாடி கல்வீச்சுக்கு நொறுங்குகிறது. கும்பலின் ஆத்திரத்துக்கு இலக்காகியிருக்கும் நவீன உருக்காலையின் உள்ளே நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

பல்லகவுண்டன்பாளையம் என்னும் அது ஒரு குக்கிராமம். வருடம் 1981. இதே அக்டோபர் மாதம். தேதி 31. திருமதி. இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தொழிற்சாலையை மூடச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். கண்டிப்பான பொது மேலாளர், ” படுகொலை சம்பவத்துக்கு வருந்துகிறேன். அதற்காக உற்பத்தியை ஏன் நிறுத்த வேண்டும் ? ஃபாக்டரி கண்டிப்பாக இயங்கும். ” என்று சொல்ல அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் வன்முறைக் கும்பல் அங்கே மையம் கொண்டு விட்டது.

எல்லார் கையிலும் அரிவாள்கள். உள்ளே புகுந்து அத்தனை பேரையும் வெட்டிச் சாய்க்க அலைமோதுகிறார்கள். பூட்டப்பட்ட கதவைத் திறக்க முடியாததால் கனமான கண்ணாடிகள் நொறுக்கப்படுகின்றன. நிலைமை கட்டு மீறினதால் பின்புறமாய்த் தப்பிச் செல்ல நாங்கள் தயாராகிறோம். ஸாண்ட் ப்ளாண்ட்டிலிருந்து தாவிக் குதித்து, ஜோல்ட்டிங் இயந்திரங்களுக்கு நடுவே ஓடி, எலக்ட்ரிக் ஆர்க் ஃபர்னஸ்களின் மின்னணு கட்டுப்பாட்டு அறைக்குப் பின்புறமாய் தடதடத்து, ஸ்க்ராப் யார்டு வழியே நாங்கள் பலரும் நழுவுகிறோம். ஃபாக்டரிக்கு எதிரே உள்ள ஈரோடு-சேலம் நெடுஞ்சாலையைக் கடந்தால் எதிர்ப்புறம் பணியாளர் குவார்ட்டர்ஸ். அந்த மிகப் பெரிய தொழிற்சாலையின் உட்புற பூகோளம் வன்முறைக் கும்பலுக்குத் தெரியாததால் அன்று நாங்கள் பலரும் தற்காலிகமாய் உயிர் தப்பினோம்.

ஆமாம். தற்காலிகமாகத்தான்.

அந்த குக்கிராமம் ஒரு பொட்டல் காடு. அந்த ஃபாக்டரியையும், குவார்ட்டர்ஸையும் தவிர இருபது முப்பது கிலோமீட்டருக்கு எதுவுமில்லை. அடுத்த மூன்று நாளைக்கு பஸ்கள் ஓடப்போவதில்லை. ஃபாக்டரி காண்ட்டீனில் ஒரு நேரத்துக்கு  வேண்டுமானால் உணவு மிச்சமிருக்கலாம். சாப்பாடு ஒரு பிரச்சனை என்றால், எங்களுக்குக் கிடைத்த இன்னொரு தகவல் அடி வயிற்றைப் பிசைய வைத்தது.

பனையோலையால் கூரை வேய்ந்து கடற்கரை காட்டேஜ்களைப் போல் கட்டுமானம் செய்யப்பட்ட அந்தப் பணியாளர் குடியிருப்புக்கு இரவில் தீ வைக்கப் போவதாகச் சொன்னார்கள். உயிர் பயம் தாக்க, நாங்கள் இரண்டு மூன்று பேர் பெட்டி கட்ட ஆரம்பித்தோம். நெடுஞ்சாலைக்கு வந்து நின்றோம். பஸ்கள் கார்கள் எதுவும் ஓடவில்லை. சில லாரிகள் மட்டும் அவ்வப்போது ஓடின. ஒரு லாரி டிரைவர் பெரிய மனது பண்ணி நிறுத்தினார். பின்புறம் பூராவும் சரக்கு. கேபினில் எள் விழ இடமில்லாமல் ஆட்கள். லாரி கேபினுக்கு மேலே ஏறிக் கொள்ள ரெடி என்றால் இருபது செலுத்தி விட்டு ஏறி வரலாம் என்றார் டிரைவர். இருபது ரூபாய் என்பது அப்போது இரண்டாயிரம் மாதிரி என்றாலும் உயிரின் விலை அதனினும் அதிகம் என்பதால் தொற்றிக் கொண்டோம்.

சில்லென்று காற்றடித்தது. யானை அம்பாரத்தின் மேலே போகிற மாதிரி இருந்தது. நானும் நண்பரும் புன்னகைத்துக் கொண்டோம். ஃபாக்டரி பகுதி அபாயத்தைக் கடந்து விட்ட சந்தோஷம். ஆனால், ஓடும் லாரியின் உட்புறமிருந்து க்ளீனர் எட்டிப் பார்த்து, ” உக்காராதிங்க. படுத்துக்கங்க. வழி பூராவும் கல்வீச்சு நடக்குது. மண்டையில் அடிபடாம இருக்க பேகை வெச்சு மறைச்சுக்கங்க. ” என்றார்.

யானை அம்பார சந்தோஷம் திடுமென மறைந்து போனது. அவர் சொன்னது நிஜம்தான். வழி நெடுக வன்முறை அடையாளங்களைப் பார்க்க முடிந்தது. ஒரு சில இடங்களில் லாரியை நிறுத்த முயன்றார்கள். நல்ல வேளையாய் எங்களுக்கு மிக அருகாமையில் பயணித்து வந்த ஒரு போலிஸ் ஜீப்பின் தயவால் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி மூன்று மணி நேரத்தில் எட்டிப் பிடிக்க வேண்டிய கோவையை எட்டு மணி நேரப் பயணத்துக்குப் பின் இரவு பத்தே முக்காலுக்கு அடைந்தோம்.

டவுன் ஹால் பக்கம் இறக்கி விட்டார்கள். உடைந்த கடைகள். எரியும் டயர்கள். அங்கிருந்து நான் பொள்ளாச்சிக்கு எப்படிப் போவது ? ரயில்கள் ஓடுகின்றன என்றார்கள். இரவு பதினோரு மணிக்கு ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் பிடித்தால் போய் விடலாம் என்று தெய்வாதீனமாய் மனசுக்குள் யோசனை பிறக்க, மூச்சிறைக்க ரயில் நிலையத்துக்கு ஓடினேன். ரயில் பெட்டிகள் ஜன மூட்டைகளாய்ப் பிதுங்கிக் கொண்டிருந்தன. இரண்டு மணி நேரம் தாமதமாய் நள்ளிரவுக்கு மேல் ஒரு மணி வாக்கில் ரயில் புறப்பட்டது. இரண்டரை மணிக்கு பொள்ளாச்சி. வீடு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இரவில் தன்னந்தனியாய் நடந்தேன். நடந்தேன். நடந்தேன்.

சுடுகாட்டைக் கடக்கையில் மட்டும் நெஞ்சு தடக் தடக் என்று அடித்தது. பின்புறம் ஜல் ஜல்லென்று சத்தம் கேட்டது. நாலு மணிக்கு வீட்டுக் கதவைத் தட்ட, எல்லாருக்கும் படு ஆச்சரியம்.

முதல் முத்தம் மாதிரி முதல் ‘பந்த்’தும் மறக்க முடியாது.