படம் காட்டுதல்


குழந்தைகளை மகிழ்விப்பதாய் நினைத்து ஒரு சயன்ஸ் பிக்’ஷன் DVD போட்டு விட்டார் நந்தா. வினோத உருவங்களைப் பார்த்து சில குழந்தைகள் அலறின. கலிபோர்னியாவிலிருந்து வந்திருந்த உஷா, ” சினிமா, விடியோன்னு குழந்தைகளைக் கெடுக்காதிங்க. நான் ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு சொல்லித் தரேன். ” என்றார்.

உஷா எஞ்சினீரிங் படிப்பில் கோல்டு மெடலிஸ்ட். ஆனால் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்தான் ஆர்வம் என்று சொல்லி இங்கே டீச்சர் வேலை பார்க்கிறார். அவர் அறிமுகம் கொடுத்த Pictionary என்ற அந்த விளையாட்டில் குழந்தைகள் மட்டுமல்ல, எல்லோருமே ஆர்வமாய்ப் பங்கெடுக்க முடிந்தது.

மூளையை ஒரு கலக்குக் கலக்கி விடுகிறது. உங்களுக்குள் இருக்கும் ஆர்ட்டிஸ்ட்டிக் புலனை உசுப்பி விடுகிறது. தகவல் பரிமாற்றத் திறனை கூர்மையாக்குகிறது. உங்களுக்குத் தரப்படும் வார்த்தைகளை வாய் பேசாமல் படம் போட்டுக் காட்டி உங்கள் அணியைச் சேர்ந்தவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுதான் இந்த விளையாட்டு.

என்ன ரொம்ப சுலபம் போல் தோன்றுகிறதா ? SMART என்ற வார்த்தையை படம் போட்டு யாருக்காவது புரிய வைத்துப் பாருங்கள்.