மலிவு விலை அனுபவம்


சென்னைவாசியாக இருக்கப்பட்ட ஜீவராசிகள் யாராவது இந்த இடத்துக்கு ஒரு முறையேனும் விஜயம் செய்திருக்காவிடில் அவர்களுக்கு நரகத்தில் “நெருக்கிப்பிழி” தண்டனை நிச்சயமாக ரிஸர்வ் செய்து வைக்கப்படும். ஏற்கெனவே அனுபவித்தவன் என்கிற வகையில் நான் அந்த தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வேன். மனிதக் குரல்களும் பாத்திர பண்டங்களின் சப்தங்களும், மேனேஜர் நாச்சிமுத்து எங்கிருந்தாலும் கிரவுண்டு ஃப்ளோருக்கு வரவும் என்று மைக் அறிவிப்புகளும், டிவியில் இடைவிடாது அலறும் விளம்பரங்களும் நிரம்பி வழியும் கூடங்கள். குவித்து வைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கைக்கான மலிவு விலைப்பொருள்கள். தங்கள் அரட்டை போக மிச்சமிருக்கும் நேரத்தில் கஸ்டமரை கவனிக்கும் பையன்கள். பெண்பிள்ளைகள். பாலிதீன் கவர்களில் டெலிவரி டேபிளின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குப் சறுக்கும் நாம் வாங்கிய பொருட்கள். ஐநூறு ரூபாய் தாள்களை அநாயாசமாக சரசரவென எண்ணும் கேஷியர் (பொடிப்) பையன்கள். நம் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை கண்களால் பகிரங்கமாய் சோதனை செய்யும் வாயிற்காப்போன்கள்.

வெறும் மின்விசிறிகளுடன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்த கட்டிடம் காலப்போக்கில் நவீனமாகி குளிரூட்டப்பட்டிருக்கிறது. இம்முறை உடைகள், தோல் பொருட்கள் விற்கிற பகுதிக்குச் சென்ற போது திடீரென்று எனக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தின் செருப்பிலிருந்து எழும் தூசு, விற்பனைப் பையன்கள் துணிகளை அடிக்கடி உதறுவதால் எழும் நெடி, மூலைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்களின் முடை நாற்றம், இன்னபிற எல்லாம் ஏ.சியில் கலந்து மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறதாய் உணர்ந்தேன். பிராணவாயு போதவில்லை என்று தோன்றியது. பிரம்மாண்டமான pollution.

எந்த இடம் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு “நெருக்கிப்பிழி”-யில் பத்து சதவிகிதம் தள்ளுபடி.