கலை


வணிக வளாக வராந்தாவில் யாரோ போட்ட குப்பையை மாய்ந்து மாய்ந்து பொறுக்கி குப்பைத் தொட்டியில் போட்டார் மணி.

” இதையே நம்ம ஊர்ல செய்விங்களா ? ”

” இங்கதான் அப்படித் தோணுது. ” என்றார். இந்த நாட்டுக்குப் புதிதாய் வந்திருக்கிறார்.

o00o

வர்ஜினியாவில் ஒரு மாலை நேரம். Bumper to Bumper ட்ராபிக் நெரிசல். முன்னால் நின்றிருக்கும் காரில் ஓர் ஐம்பது வயதுக்காரர் தலை தெரிந்தது. பான் பராக் மாதிரி எதையோ மென்று மென்று ஜன்னல் வழியே அடிக்கடி தூ தூ என்று துப்பிக் கொண்டிருந்தார். நம்பர் தகட்டில் ஓம் சக்தி என்று எழுதியிருந்தது.

o00o

அடுத்த சிக்னலில் இன்னொரு கார். ஜன்னலுக்கு வெளியே அழகான கை. மெல்லிசாய் ப்ரேஸ்லெட். நெயில் பாலிஷ் மின்னும் நீள நீள விரல்களிடுக்கில் எரியும் சிகரட். பத்து செகண்டுக்கு ஒரு தரம் சாம்பல் தட்டிக் கொண்டிருந்தது. ஓட்டுனர் இருக்கையில் Blond Hair தெரிந்தது.

o00o

பொது மக்கள் பூங்காவில் கழிவறை. சுவர் பூராவும் கிறுக்கல்கள். படங்கள். அங்கே பார்த்ததில் ஓரளவு நாகரிகமான வாக்கியம், I love you Angela ! முன்னர் பணி புரிந்த தொழிற்சாலை கழிவறைக்குள்ளும் சூப்பர்வைசர் பெண்மணியை Pictionary-யால் திட்டியிருந்ததைப் பார்த்ததுண்டு.

o00o

கலைப் படைப்புகள் உலகளாவிய அங்கீகாரம் பெறுவதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டென்று நினைக்கிறேன்.