வாத்தியம்


நாலணாவுக்கு கொட்டாங்குச்சி வயலின் விற்பவர்தான் தீக்குச்சியைப் பற்றிப் போட்டார். நரம்பு அறுந்து போகும் வரை முயற்சித்தும் இசை வரவில்லை. அப்புறம் ஷோலே பார்த்து விட்டு சியாமளா ஸ்டோர்ஸில் மவுத் ஆர்கன் வாங்கி ஊதிப் பார்த்து களைப்பானது இரண்டாம் அத்தியாயம். ரயில் பெட்டியிலோ, பிளாட்பாரத்திலோ (நிஜ) சிவாஜி பாட்டுக்களை கண் தெரியாதவர்கள் ஹார்மோனியப் பெட்டியில் அனாயசயமாய் எழுப்புதல் பார்த்து மலைத்தது அடுத்த கட்டம். அந்த இசை சாதனத்தை வாங்க வேண்டும் என்று மனசுக்குள் பேராவல் இருந்தது. ஆனால் கஷ்டப்பட்டு உழைக்கும் அப்பா அம்மாவுக்குத் தொல்லை தரக் கூடாது என்ற பகுத்தறிவினால் அந்த ஆசை நிறைவேறாத பட்டியலுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டது. அப்படியும் ‘ஹார்மோனியம் வாசிப்பது எப்படி?’ என்ற புத்தகத்தை சேமித்த காசில் வாங்கி சுத்தமாய் மனசொடிந்தது தனிக் கதை. புத்தகம் பூராவும் எழுதப்பட்டிருந்த கர்னாடக சங்கீதம் தலைகால் விளங்கவில்லை. கற்றுத் தர எழுதப்பட்ட அப்புத்தகம்தான் பின்னங்கால் பிடறியில் பட ஓடுமாறு விரட்டிவிட்ட புண்ணியம் கொண்டது.

எண்பத்தாறில் புன்னகை மன்னன் வந்த பின் கம்ப்யூட்டர் ம்யூசிக் என்ற பதம் புழக்கத்துக்கு வந்தது. கம்ப்யூட்டரே எல்லா இசைக் கருவிகளையும் வாசித்து விடும். பாடகரைப் பாட வைத்தால் மட்டும் போதும் என்று செய்தி பரவியது. இளையராஜா ஏதோ ஒரு பேட்டியில் அதை மறுத்தார். ம்யூசிகல் கீ போர்டுகள் பற்றித் தெரிய வந்தது. ஹார்மோனியப் பெட்டியின் நவீன வடிவம் இது என்பது புரிந்தது. பட்டனைத் தட்டினால் சதாவதாரம் (எழுத்துப் பிழை இல்லை) எடுத்து ஒரு கருவி வாசித்தால் நூறு கருவி வாசித்த மாதிரி திகைக்க வைத்தது. சுஜாதா இந்த ஸிந்தசைசர்கள் பற்றி கட்டுரை எழுதினார். வயலின் இசையை அச்சு அசலாய் ஸிந்த்தசைஸ் பண்ணுவது இன்னும் சாத்தியம் ஆகவில்லை என்றார். தொண்ணூற்றியிரண்டில் ரோஜா வந்த பின் இசைப் பலகைக் காய்ச்சல் தமிழ்நாட்டில் அதிகமானது. எல்லா போட்டோவிலும் அணைத்துப் பிடித்தபடி ஏ ஆர் ரஹ்மான் கீ போர்டுக்கு நல்ல விளம்பரம் தந்தார். ட்யூட்டி ஃப்ரீ ஷாப்களில் நூறு ரூபாய்க்கு மூணு Octave-கள் கிடைத்தன. சந்துக்கு சந்து கம்ப்யூட்டர் மையங்களுக்கு அடுத்தபடியாக அவ்விடம் குறைந்த கட்டணத்தில் கீ போர்டு கற்றுத் தரப்படும் அறிவிப்புகள் முளைத்தன.

அப்போதும் இதையெல்லாம் வாசிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை.

லேட் தொண்ணூறுகளில் சென்னையில் இருந்தபோது, வளரும் இசையமைப்பாளர் செல்வராஜின் அறிமுகம் கிடைத்தது. சில டாக்குமென்ட்டரிகளுக்கும், டிவி நிகழ்ச்சிகளுக்கும் இசை அமைத்திருந்தார். சினிமாவுக்கு முயற்சித்துக் கொண்டிருந்தார். என்னைப் போன்ற ஞான சூன்யத்தை பாட்டு வாசிக்க வைக்க முடியுமா என்று அவர் ஈகோவைத் தட்டிப் பார்த்ததில், மேற்கத்திய மேஜர் மைனர் ஸ்கேல் சொல்லித் தந்தார். ஸ்கேல் கண்டு பிடித்தால் வாசித்து விடலாம் என்று ரொம்ப ஹை லெவலில் பாடம் சொன்னார். ரொம்ப நாள் ஸ்கேலைத் தடவிக் கொண்டிருந்தும் காதில் கேட்ட பாட்டை கையில் வாசிக்க வேண்டுமென்ற குறைந்த பட்ச ஆசை கூட சாத்தியமாகவில்லை.

கடைசியாக அமெரிக்காவில் ஸாம் அறிமுகமானது இனிய இசை விபத்து. தூங்கிக் கொண்டிருந்த இசையார்வ ஜீவராசியை எதேச்சையாய் எழுப்பி விட்டார். ஏழு வயசிலிருந்து வாசிக்கும் ஸாம் ஒரு நல்ல கிடாரிஸ்ட். அவரை வாசிக்கச் சொல்லி கவனித்து கவனித்து எனக்கும் இப்போது கொஞ்சம் பிடிபட்டு விட்டது.

Misson Accomplished !