விழா


ரோடு பூராவும் தலைகள். மேளதாளம், பறை, பாண்ட் வாத்தியம் மாறி மாறி காதை நிரப்பும். ராமர், அனுமன், சிவன், பார்வதி அவ்வப்போது நடந்து செல்லுவார்கள். சிங்கத்தலை, குரங்குத் தலையுடன் தலைக்கு மேல் வால் ஆட மனிதர்கள் போவார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கூட விசில் சத்தம் தூள் பறக்க கையசைத்துச் செல்வார்கள்.

இதையெல்லாம் வேடிக்கை பார்க்க நாங்கள் மதியம் மூணு மணிக்கெல்லாம் ஒரு மொட்டை மாடியில் கஷ்டப்பட்டு இடம் பிடித்துக் காத்திருப்போம். பட்டாசுகள் சிதற, கடைசியாய் ஆடி அசைந்து தேர் வரும். தேரை முட்டி முட்டித் தள்ளிக் கொண்டு துதிக்கையை வீசியபடி மணியோசையுடன் யானை வரும். தேர் கடந்து சென்ற மறுநிமிடம் நாங்கள் சிறுவர்கள் மட்டும் கூட்டத்தைத் திமிறி விலக்கிக் கொண்டு மொட்டை மாடியிலிருந்து இறங்கிக் குப்பையாய்க் கிடக்கும் ரோட்டுக்கு ஓடுவோம். அந்த அசுர மிருகம் இட்டுச் சென்ற சாணத்தின் மேல் ஏறி சத் சத்தென்று குதித்தால் யானை பலம் கிடைக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. அந்த வயதில் பகுத்தறிவை விட சந்தோஷமே முக்கியம். இந்த வயதிலும் அப்படியே இருந்தால் சந்தோஷமாய் இருக்குமென்று தோன்றுகிறது.

நேற்றிரவு கொட்டும் மழையில் நடந்த Halloween Parade-ல் வேஷம் கட்டிய ஆண்களையும், பெண்களையும், சிறுவர்களையும் அவர்களின் உற்சாக நடனத்தையும், பாண்டு வாத்திய ஊர்வலத்தையும் (சந்தடி சாக்கில் கட்சிக்காரர்கள் செனட் தேர்தலுக்கு ஓட்டுக் கேட்டார்கள்) ரோட்டோரம் கூட்டத்தில் குடை பிடித்தபடி நின்று பார்த்தபோது, மனசுக்குள் ரஜினி படம் மாதிரி அதிரும் உடுமலை தேர்த் திருவிழா நினைவுகள்.

அகில் என்னுடைய அதே சின்ன வயது உற்சாகத்தோடு Parade- ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இங்கே அவன் எதையும் இழக்கவில்லை.