பண்டிகை


சரஸ்வதி பூஜை முடித்த களைப்பு இன்னும் தீரவில்லை. அகில் பால விகாஸில் மைக் பிடித்து நிகழ்ச்சி நிரல் பேசினான். அதற்குள் ஹாலோவீன் வந்து விட்டது.

போன வாரம் நந்தா பூசணிக்காய்களும், கார்விங் உபகரணங்களும் வாங்கி வைத்திருந்தார். இரண்டு மணி நேரங்கள் செதுக்கியதில் நிறைய பூசணிக்காய் உருவங்கள் உருவாகின.

முந்தாநாள் வால்மார்ட் போய் உடை வாங்கினதில் நேற்று அகில் ஸ்பைடர் மேன் ஆனான். Costco-வில் ஒரு மூட்டை சாக்லேட் வாங்கச் சொல்லி ஆணையிட்டான். Knock the Door. We have Candies என்று எழுதி ஜகன் மோகினி வடிவத்தில் அட்டையைக் கத்தரித்து கதவில் அவன் தொங்க விட்டதால், ராத்திரி பத்து மணி வரைக்கும் குட்டிப் பிசாசுகள் வந்து Hersheys பிரசாதம் வாங்கிச் சென்றபடி இருந்தன.

அப்பாடா என்று ஆசுவாசமடைய முயன்றால் காலண்டரில் தீபாவளி வந்து கொண்டிருக்கிறது.