தீ


தீ எச்சரிக்கை காதை அடைக்கும் டெசிபலில் வீறிட ஆரம்பித்தது. தளம் எங்கும் அபாய விளக்குகள் மின்னி மின்னி கண்களை வெட்டின. ஆபத்து காலத்தில் லிஃப்ட்கள் இயங்கா என்பதால் அலுவலகத்தின் ஐந்து மாடிகளையும் படிகளில் கடந்து வீதிக்கு வந்தோம்.

Saraswathi Temple - Delawar

Fire Alarm சப்தம் எங்களுக்குப் புதிதல்ல. சரியாக இயங்குகிறதா என்று அவ்வப்போது சோதனை நடக்கும். சோதனைக்கு முன்பு மூன்று முறை மைக்கில் ஒரு கட்டைக்குரல் “இது சோதனைதான். நீங்கள்பாட்டுக்கு உங்கள் வேலையைப் பாருங்கள். ” என்று அறிவிக்கும். இந்த முறை அந்த மாதிரி அறிவிப்பு ஏதுமில்லை. இது நிஜ எச்சரிக்கைதான்.

ஆயிரக்கணக்கில் மனிதத்தலைகள் கட்டிடத்துக்கு வெளியே பத்திரமாக வந்து குவிந்தன. ஐந்து நிமிஷங்களில் வீர் வீரென அலறிக் கொண்டு இரண்டு தீயணைப்பு வண்டிகள் வந்து சேர்ந்தன.

சில மாதங்களுக்கு முன்பு டெலவர் மஹாலக்ஷ்மி கோயிலுக்குப் போயிருந்தபோதும் இப்படித்தான் நாலைந்து தீயணைப்பு வண்டிகள் நின்றிருக்க, வீரர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். யாகம் நடந்து கொண்டிருந்தபோது ஏதோ கருகிய வாசம் புறப்பட்டதால் யாரோ 911-க்கு அழைப்பு விட, இப்போது ஜனங்கள் தேமே என்று கோபுரத்தைப் பார்த்துக் கொண்டு வெளியே காத்திருந்தார்கள். கூரையோடு உரசிய மின்விளக்கு ஒன்று கருகியதால் உண்டான வாசனைதான் என்று கண்டு பிடிக்க இரண்டு மணி நேரங்கள் ஆனது. அதன்பின் மின் பொறியாளர் வந்து அனுமதியளித்த பின் மீண்டும் யாகம் தொடர்ந்தது.

இன்று அவ்வளவு நேரம் பிடிக்கவில்லை. ஆபத்து எதுவுமில்லை என அறிவித்து மீண்டும் வேலை பார்க்க ஆரம்பித்தோம். எதனால் இந்த அலாரம் ? விசாரிக்க நேரமில்லை.

UPDATE (03 Nov 2007): ‘தம்’ ப்ரேக்கிற்கு வெளியே வந்த நம்மவர் ஒருவர் போன் பேசிக் கொண்டே ஏதோ நினைவில் கதவருகே இருந்த அபாயச் சங்கிலியை இழுத்து விட்டதில் மொத்த ஆபிஸும் காலியாகி விட்டது.