சாமீய்! – குமுதம் சிறுகதை


1998 வாக்கில் நண்பர்களுடன் மாமல்லபுரம் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். பஸ்ஸில் நல்ல கூட்டம். பின்புறம் நானும் சில நண்பர்களும் நின்று கொண்டிருக்க, இன்னும் சில நண்பர்கள் முன்புறம் தொற்றியிருந்தனர்.

பாதி வழியில் முன்புறமிருந்த நண்பர்கள் இருக்கையிலிருந்த ஒரு நபரைக் காட்டி, ‘ அவர் உங்களோட பேசணுமாம். ‘ என்கிற மாதிரி என்னைப் பார்த்து சைகை செய்தார்கள். முன் பின் தெரியாத அவரைப் பார்த்து நான் நெற்றியைச் சுருக்கி யோசித்துக் கொண்டிருக்க, அவர் கையிலிருந்த புத்தம் புதிய குமுதத்தை அசைத்துக் காட்டி, ‘ சூப்பர். ‘ என்கிற மாதிரி அபிநயித்தார்.

எனக்குக் கொஞ்சம் விளங்கியது. அவர் படிக்கிறபோது நண்பர்கள், ‘ அட தலைவர்(?!) கதை வந்திருக்கு போலிருக்கு. ‘ என்று பேசிக் கொள்ள, ‘ சத்யராஜ்குமார் இந்த பஸ்சிலா இருக்கார்? ‘ என்று கேட்டு, என்னைப் பார்த்துக் கையசைத்து சுடச்சுட கருத்துத் தெரிவித்தார்.

அடுத்த பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஓடி வந்து, ‘ கதைக்குப் பக்கத்தில் ஒரு கையெழுத்துப் போட்டுக் குடுங்க சார். ‘  என்று கேட்டு வாங்கிக் கொண்டு,  பஸ் கிளம்புவதற்குள் மறுபடி தொற்றிக் கொண்டார்.

கூட்டம் பிதுங்கி வழிகிற அந்தப் பயண அவசரத்தில் அவர் பெயரைக் கூட கேட்க முடியவில்லை. அவர் முகமும் இப்போது நினைவில்லை. என்னையும் அவர் இந்நேரம் மறந்திருப்பார்.  இந்தக் கதையைப் பார்க்கிறபோதெல்லாம் அந்த நினைவுகள் மட்டும் அழியாமல் அப்படியே இருக்கிறது.

குமுதத்துக்காகவென்றே அளவெடுத்துத் தைத்த சாமீய்! என்ற அந்தக் கதை இங்கே.