தூதரகம்


கொடி பறக்குமா என்று தேடிக் கொண்டே காரை விரட்டிச் சென்றேன். நல்ல வேளை சிங்க முகம் கண்ணில் பட்டது.  நிறுத்துமிடம் தேடி நிறுத்துவதற்குள் நூறு மீட்டர் ஓட்டம் ஓடிய  மாதிரி மூச்சிறைத்தது. பாஸ்போர்ட் புதுப்பிக்க இந்தியத் தூதரகம் சென்றிருந்தேன்.

10′ x 10′ க்கு கொஞ்சம் அதிகமாய் முன்னறை. இரண்டு சோபாக்கள். நான் நுழைந்தபோது சுமார் பதினைந்து பேர் வரிசையில் நின்றிருந்தார்கள்.  மொட்டையாய் இருந்த சுவர்களில் அந்த அலுவலகத்தின் செயல்பாடுகள் செயல் முறைகள் பற்றி சுருக்கமாய் விவரித்து வைத்தால், வந்ததும் எல்லாருக்குமே ஏற்படும் பதினைந்து செக்கண்ட் குழப்பம் தவிர்க்க ஏதுவாயிருக்கும்.

புஷ்டியாய் மீசை வைத்து போலிஸ் பார்வையால் ஸ்தலத்தை கண்காணித்துக் கொண்டிருந்த ஆஜானுபாகுவான அன்பரிடம்தான் வருவோர் போவோரெல்லாம் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. சூயிங்கம் மென்று கொண்டே உள்ளே வந்த அந்த இளைஞரை ரொம்ப உக்கிரமாய் முறைத்தார் அவர். அந்த இளைஞரின் உடையும், பாவனையும்தான் முறைப்புக்கு முக்கிய காரணம். கிழி(த்து விடப்பட்ட?)ந்த, சாயம் போன ஜீன்ஸ். அங்கங்கே நூல் நூலாய்த் தொங்கும் டி சர்ட். காதலில் தோற்ற மாதிரி தாடி. கருணாஸ் போல கழுத்தில் நாய்ச் சங்கிலி கணக்காய் வெள்ளை உலோக ஆபரணம்.

அந்த ‘ப்ரதரை’ பார்த்தால் எனக்கே கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது. விசா வாங்க அமெரிக்க தூதரகத்துக்கு இதே அலட்சியத்துடன் சென்றிருப்பாரா ? ஓர் அரசாங்க அலுவலகத்துக்குச் செல்லும் குறைந்தபட்ச உடை நாகரிகம் ஏன் தெரியவில்லை ?

இதைப் பற்றி யோசித்தபடி ஐந்து நிமிஷங்கள் கழிந்திருக்கும். அந்த மீசைக்கார செக்யுரிட்டி அன்பர் அப்போதுதான் வந்த யாரோ மூன்று நான்கு பேரை, ” ஆயியே ஜி, ஆயியே ஜி! ” என்று வரவேற்று வரிசையில் பொறுமையாய் நிற்பவர்களின் நேர்மையின் மேல் காறித் துப்பும் வண்ணம் நேராக கவுன்ட்டருக்கு அழைத்துச் சென்றார்.

நான் கிழிந்த ஜீன்ஸ் ப்ரதரைப் பார்க்க, பெரிதாய் ஊதிய சூயிங்கம் குமிழியை பட்டென்று வெடித்து தன் கோபத்தைத் தணித்துக் கொண்டிருந்தார்.