கற்றது தமிழ் மட்டுமல்ல


கற்றது தமிழ் பார்க்கையில் சட்டென நினைவுக்கு வந்தவர் தமிழாசிரியர் ஆ. கணேசன். நான் எழுத ஆரம்பித்ததற்கான பல காரணிகளில் அவரும் ஒருவர். பெற்றோர் விருப்பத்துக்காக பி.எஸ்.சி தாவரவியல் படித்து விட்டு, தன் சொந்த விருப்பத்துக்காக எம்.ஏ தமிழ் படித்து, தமிழ் ஆசிரியர் பணிக்கு வந்தவர்.

வகுப்பில் பாதி நேரம் பாடம் நடத்தினால் மீதி நேரம் பொது விஷயம் போதிப்பார். அந்த அடலஸன்ட் பருவத்தில் மனதிலிருக்கும் பல கேள்விகளுக்கு யாரும் கேட்காமலே வகுப்பறையில் அவர் விடை சொல்லியிருக்கா விட்டால், சரியாகத் தெரிந்து கொள்ள பல நாளாகியிருக்கும். அல்லது தவறாகத் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கும்.

இயற்பியல் பேராசிரியர் என்னைக் கூப்பிட்டுக் கண்டித்த சம்பவமும் நடந்துள்ளது. ” என்ன நீ அந்த ஆளோட அதிகமா சுத்திட்டிருக்கே ? நீ ஒழுங்கா படிக்கிற பையன். உருப்படாம போயிடாதே. “. இதெல்லாம் தொழில்நுட்ப பள்ளியில் நான் பத்தாவது படிக்கும்போது நடந்தது. டிப்ளமோ முடித்ததும் எனது முதல் சிறுகதை சாவியில் வெளியானது. வழியில் அவரை சந்தித்தபோது, ” நிறைய எழுதுப்பா. ” என்று மெலிதான ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.

சரி, கடைசி பத்திகள் பார்த்த சினிமாவுக்கு அர்ப்பணம். படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு மைல் கல். ஒளியை கதை சொல்ல பயன்படுத்துவது தமிழ் சினிமாக்களில் அபூர்வம். இதில் படம் பூராவும் ஒளியமைப்பும் சேர்ந்து கதை சொல்கிறது. பாலாவும், தங்கர்பச்சனும் குத்தாட்டத்தோடு சாதித்ததாகச் சொல்லிக் கொண்டதை இந்த இயக்குனர் – நிஜமாத்தான் சொல்றேன் – சாதித்திருக்கிறார். ஏற்கெனவே காதல் திரைப்படம் 90% நெருங்கியது. சில பாடல் காட்சிகளில் கோட்டை விட்டது. பதினாறு வயதினிலே கிராமத்தைக் காட்டிய மாதிரி இது நகரத்தையும், இன்றைய காலகட்டத்தையும் அதன் இயல்போடு பதிவு செய்திருக்கிறது. ஆனால், காட்சியமைப்புகளில் இருந்த யதார்த்தம் கதையில் பல இடங்களில் சறுக்குகிறது. நாயகன் கொலைகள் செய்ய வலுவாகக் காரணங்கள் இருந்தாலும், ‘கொலை செய்ய காரணம் தேவையில்லை’ என்றும், ‘தமிழ் படித்ததால் கொலை செய்தேன்’ என்றும் ஆரம்பக் காட்சியிலேயே அஸ்திவாரம் போட்டது ஃபான்ட்டஸி. கிராமத்தில் போலிஸ் சுற்றி வளைக்கும் காட்சியை இயக்குநர் வைத்திருக்க மாட்டார். சென்சார் போர்டு வைத்திருந்திருக்கும். இவ்வளவு அழகாக திரைப்படம் எடுக்கும் திறமையை எதிர்மறை கருத்துக்களை ஸ்தாபிக்கப் பயன்படுத்தியது ஆயாசமளிக்கிறது.

வாழ்க்கையைப் படிக்காத அந்தக் கதாநாயகனுக்கு தமிழ் அல்ல, கம்ப்யூட்டர் படித்திருந்தாலும் இதே கதிதான்.