இட்லி வடை


அகிலாவின் அம்மா அப்பாவைக் கூட்டிப் போகிற சாக்கில் Atlantic City Casino-க்களில் ஓர் இரவு.

Slot Machine சப்தங்களும், கண்களைக் கூசும் மின் விளக்குகளும் தருவது ஒரு வித போதை. ஒரிஜினல் போதையும் இலவசமாய் வழங்க கோப்பைகளை தட்டில் ஏந்தி அங்குமிங்கும் வலம் வரும் அழகிய நங்கைகள். தொழில் முறை சூதாட்டக்காரர்கள் தண்ணீர் தவிர வேறேதும் அருந்தாமல் கலையும் சீட்டுக்களையும், உருளும் அதிர்ஷ்டச் சக்கரங்களையும் உற்றுப் பார்த்தபடி காசை வெட்டிக் கொண்டிருப்பார்கள் என்பது எனக்குக் கிடைத்த தகவல். எனினும் Always the house wins என்பது பிரபல சொலவடை.

சொலவடை என்றதும் இட்லி வடை என்று தலைப்பு வைத்தது ஞாபகம் வருகிறது. Casino அலுத்ததும்தான் பசி வயிற்றை கிள்ளிக் கொண்டிருந்ததை மனசு உணர்ந்தது. இரண்டு நாளாய் பர்கரும் பிட்ஸாவும் மட்டுமே சாப்பிட்டு வெறுத்துப் போயிருந்ததால் எல்லோருக்குமே சாம்பார் மணத்துடன் இட்லி வடை சாப்பிட வேண்டும் போலிருந்தது. 

கொட்டும் மழையிலும் ஒரு மணி நேர கூடுதல் பிரயாணத்தை துச்சமாய் மதித்து ந்யூ ஜெர்சி Oak Tree Road செல்லத் தீர்மானித்தோம்.

சரவண பவன்.

அதே சென்னை மணத்துடன் இட்லி வடை தோசை எல்லாமே கிடைத்தது.  நான் Full Meals  தேர்ந்தெடுத்தேன். முள் கரண்டி தேக்கரண்டி எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ஒரு பிடி பிடித்தேன்.

சென்னை ஆனாலும் சரி, ந்யூ ஜெர்சி ஆனாலும் சரி, சாப்பிடும் முன் கால் கடுக்க காத்திருக்க வைக்கும் ஒரே காரணத்துக்காக சரவண பவனை எப்போதும் நான் வெறுக்கிறேன்.