சரசுராம் என்றொரு எழுத்தாளர்


சரசுராமின் ‘இன்னொரு மழைக்கு முன்பு’ சிறுகதைத் தொகுப்பை தனது ஆய்வுக்கு எடுத்திருக்கும் அன்பர் அது தொடர்பாக என்னிடம் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கான என் பதில்களும். 
 

1. சரசுராமின் ஆரம்ப கால நடை எப்படி இருந்தது? அதன் மாற்றத்திற்கான உங்கள் பங்களிப்பு என்ன ?           

 அது எண்பதுகளின் இறுதியில். அப்போது மர்ம நாவல்களும், திகில் கதைகளும் உச்சத்தில் இருந்தன. அவைகளின் பாதிப்பு அவர் நடையிலும், கதையிலும் இருந்தது. அவைகளும் ஒரு குறிப்பிடத்தக்க கதை வடிவமே என்ற வகையில் ரஷ்யாவில் நிகழ்ந்த பூகம்ப சம்பவத்தை வைத்து சரசுராம் அப்போது எழுதின குற்றவியல் சிறுகதை எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.
 
பின்னர் அவர் நடையில் ஏற்பட்ட மாற்றத்துக்குக் காரணமாக அவரின் விரிந்து பரந்த இலக்கிய வாசிப்பையும், அவ்விலக்கியப் படைப்புகளுடனான சுய ஒப்பீடுகளையுமே சொல்ல முடியும். அதில் என் பங்களிப்பு எதுவும் இருப்பதாகக் கருதவில்லை. 
 
அவருடைய இலக்கிய வாழ்வில் என் பங்களிப்பு எனப் பார்த்தால், எழுத்தாளர் என்பவர் நம்மிடையே வாழ்பவர்தான்… நாமும் எழுதலாம்… போன்ற அடிப்படை நம்பிக்கைகளை நான் தோற்றுவித்திருக்கலாம். தீவுகளாக இருக்காமல் கலந்து பேசிக் கொள்வது… கதை எழுதும் நுட்பங்களை சூத்திரம் போல மறைக்காமல் வெளிப்படையாய் பரிமாறிக் கொள்வது… தன் கதையை எழுதும் முன்பே கூட மற்றவரிடம் சொல்லி ஈகோ இல்லாமல் அடுத்தவர் கருத்துக்கு செவி சாய்ப்பது போன்ற நடைமுறைகளை எங்கள் வட்டத்தில் இயல்பாக ஆக்கியதால் சரசுராம் துவங்கி மீனாட்சி சுந்தரம், ஷாராஜ், சித்ரன், கனகராஜ் போன்ற மிகச் சிறந்த எழுத்தாளர்கள் கிடைத்தார்கள்.  
2. சிறுகதைகள் பற்றி பொதுவான இலக்கணம் என்ன ? உங்களுடைய வரைமுறைகள் என்னென்ன ?
படித்த பின் வாசகர் மனதில் ஒரு உறுத்தல் தர வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த இலக்கணமும் இரண்டாம் பட்சமே.
 
மேற்சொன்ன இலக்கணத்திற்கு உட்பட வேண்டும். படிக்க சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும். எப்படிப்பட்ட இலக்கியம் ஆனாலும் பெருவாரியான மக்களைப் போய்ச் சேர வேண்டும். இவையே எனது வரைமுறைகள்.
  
3. சரசுராம் பற்றி ?
அவருடைய எழுத்துக்கள் பற்றி ?
சரசுராம் வாழ்க்கையின் பலதரப்பட்ட அசைவுகளை மிக ஊன்றிக் கவனித்து உள்வாங்கக் கூடியவர். அவர் எழுத்துக்களின் வலிமை விவரணையில் உள்ளது. எந்த சம்பவத்தையும் அவற்றுடன் பின்னிய உணர்வுகளையும் காட்சிப் படுத்துவதில் கை தேர்ந்திருக்கிறார். அவருடைய சிறுகதை ஒவ்வொன்றும் ஒரு  High Definition காட்சிப் படத்தை உங்கள் மனதில் வரையும்.
 
4. இன்னொரு மழைக்கு முன்பு
சிறுகதைத் தொகுப்பு பற்றி…
அமெரிக்காவில் இருப்பதால் தொகுப்பு இன்னும் கிடைக்கப் பெறவில்லை. நிச்சயம் அத்தொகுப்பில் நான் படிக்காத கதை எதுவும் இருக்காது. இருப்பினும் இன்னும் பார்க்காததால் தொகுப்பு என்ற முறையில் அப்புத்தகம் பற்றிய எனது பார்வையை இப்போது எடுத்து வைக்க இயலவில்லை.
 
5. சரசுராமின்
பிடித்த சிறுகதை…
மிகவும் பிடித்த சிறுகதை ‘இன்னொரு மழைக்கு முன்பு’. எழுத்துக்களில் மிகவும் ரசித்தது சித்ரனின் கோடிட்ட இடங்கள் தொடரில் ஒவ்வொரு அத்தியாயம் முன்பும் ‘அம்மா’ பற்றி சரசுராம் எழுதிய சின்னச் சின்ன சம்பவக் குறிப்புகள்.
 
6. ஒரு நண்பராக,
எழுத்தாளராக,
சினிமாக்காரராக…

 முதலில் நண்பராக அவரை சந்தித்து விட்டதால் நண்பராக மட்டுமே பார்க்க முடிகிறது. அது ஒரு புறம் இருக்க, ஒரு எழுத்தாளராக அல்லது சினிமாக்காரராக சந்தித்திருக்க நேர்ந்தாலும் – இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகும் முறையால் யாரிடமும் ஒரு நண்பராக மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளக் கூடியவர் சரசுராம்.