குறுக்கே நிற்கும் ஜடங்கள்


போன சகாப்தத்து அறிவியல் கதைகளில் படித்ததில் சுமார் 25 சதமாவது இப்போது சகஜமாகி விட்டது. மனிதர்களை விட இயந்திரங்களுடன் அதிகம் பேசுகிறோம்.

” ரமேஷைக் கூப்பிடு ! ” எனக் கட்டளை இட்டால் புரிந்து கொண்டு டயல் செய்ய ஆரம்பிக்கிறது கைத்தொலைபேசி. 

” ஊருக்குப் போன ஒய்ப் திரும்ப வந்துட்டாங்களா ஸார் ? ” என்று காசாளரிடம் குசலம் விசாரித்து விட்டு,  பணம் எடுத்து வந்தது இறந்த காலம். வங்கிக் கிளையின் வாசலை இது வரை மிதித்ததில்லை. கணக்கு திறப்பதிலிருந்து பணப் பரிமாற்றம் வரை எல்லாமே இணையம் பார்த்துக் கொள்கிறது.

மின்னஞ்சலில் விஷயம் பரிமாற நேர்ந்தாலும் admin@somecompany.com -உடன் கூட்டல் கழித்தல் இன்றி விஷயத்தைப் பேசி முடிக்கிறோம்.

சாதகங்கள் உண்டு. கடவுளும், குழந்தையும், இயந்திரங்களும் குணத்தால் ஒன்று. Ego Clash எப்போதும் இல்லை. நல்ல இயந்திரங்கள் பல இருக்கும்போது வில்லன் இயந்திரங்களும் இல்லாமலா போகும்.

இப்போதைக்கு எனக்குத தெரிந்த மிகப் பெரிய இயந்திர வில்லன்/வில்லி  ஒவ்வொரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொலைபேசி சேவை மய்யத்திலும் தவறாமல் காத்திருக்கிறான்/ள். செல்போன் நிமிஷங்களை விழுங்கி ஏப்பம் விடுகிறது. சில விஷயங்களை அதனிடம் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. ” இல்லை, நிஜமாகவே ஒரு மனித ஜன்மத்திடம்தான் பேசியாக வேண்டும். ” என்று சொன்னாலும் அவ்வளவு சுலபத்தில் கிடைத்த கனெக்ஷனை அதுகள் விடுவதில்லை. எதாவது எண்ணை சொல்லவோ, பொத்தானில் அழுத்தவோ கேட்டு துன்புறுத்துகின்றன.

வருடங்கள் விரைந்து கொண்டே இருக்கின்றன. முன்பெல்லாம் அறிவியல் புதினங்கள் படித்தால் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போது பயமாயிருக்கிறது.